Skip to main content

இத்தனை வசதிகளா... டிஎன்பிஎஸ்சி ஊழலில் சிக்கிய புரோக்கருக்கு சொகுசு ஜெயில்... EXCLUSIVE ஷாக்கிங் ரிப்போர்ட்! 

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டு, "லஞ்சம் கொடுக்காமல் நேர்மையுடன் அரசுப்பணியில் சேரவேண்டும்' என்று கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையையே சூறையாடிய புரோக்கர் ஜெயக்குமார்... "மேஜிக் பேனா'’போல திடீரென்று கண்கட்டி வித்தை காட்டி சி.பி.சி.ஐ.டி. போலீஸார் முன்னிலையிலேயே கடந்த பிப்ரவரி 6-ந் தேதி சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் ஆஜரானார். நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன் ஜெயக்குமாரை கைது செய்யாமல் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதே புரோக்கர் ஜெயக்குமாரின் ‘ஹைலெவல் பவர்’என்ன என்பது பரபரப்பாகப் பேசப்பட்டது.

 

jayakumar



இந்நிலையில்... புழல் சிறையில் ஸ்பெஷல் ரூம் கொடுக்கப்பட்டதோடு நாட்டுக்கோழிக் குழம்பு, மட்டன், கோதுமை தோசை என ஜெயக்குமார் எந்த நேரத்தில் என்ன கேட்டாலும் வகை வகையாக சமைத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸ்பெஷல் ரூம் கொடுத்திருக்கிறார்கள். மேலும், இந்தியன் ஸ்டைல் டாய்லெட்டுக்குப் பதிலாக வெஸ்டர்ன் டாய்லெட் வேண்டும் என்று ஜெயக்குமார் கேட்டதால் ஏற்கனவே இருந்த டாய் லெட்டை உடைத்துவிட்டு புதிதாக வெஸ்டர்ன் டாய்லெட்டையே கட்டிக் கொடுத்திருக்கிறார்கள் சிறை அதிகாரிகள் என்ற தகவல் சிறைத்துறை வட் டாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. அதுமட்டுமல்ல, சி.பி.சி.ஐ.டி. போலீஸின் விசாரணையிலிருந்து புரோக்கர் ஜெயக்குமாரை தப்பிக்க வைக்கும் வேலையையும் செய்துவருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழும்பியிருக்கிறது.

இதுகுறித்து நேர்மையான சிறைத்துறை அதிகாரி ஒருவரிடம் நாம் பேசியபோது, “தீவிரவாதிகள், மற்றவர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற நிலையிலுள்ளவர்களைத்தான் ஹைசெக்யூரிட்டி ப்ளாக் 2-ல் அடைப்பார்கள். ஆனால், டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் புரோக்கராக செயல்பட்ட ஜெயக்குமாருக்கு தனியாக ஸ்பெஷல் ரூம் கொடுக்கவேண்டும் என்பதற்காகவே ஹைசெக்யூரிட்டி 2-ஆவது ப்ளாக்கில் 54-வது அறையில் வைத்துவிட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் புரோக்கர் ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதைவிட யாருடைய தொந்தரவும் டார்ச்சரும் இல்லாமல் சூட் ரூமில் இருப்பது போல பாதுகாப்பாக, நிம்மதியாக தங்கவைக்கப்பட்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
 

tnpsc



புரோக்கர் ஜெயக்குமார் எந்த நேரத்தில் என்ன உணவு விரும்பிக் கேட்டாலும் கிச்சனிலிருந்து வகை வகையாக சமைத்துக் கொடுக்கிறார்கள். டீ, பிஸ்கெட் என எந்த நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் சாப்பிடவேண்டுமானாலும் அவரது அறைக்கு வந்துவிடும். ஜெயக்குமாரை சி.பி.சி.ஐ.டி. விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க கடந்த 18-ந் தேதி உடல்நிலை சரியில்லை என்று அரசு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கொண்டுபோய் ட்ராமா செய்யவும் செட்-அப் செய்யப்பட்டது. "எங்களுக்கு பிரச்சினை ஆகிவிடும்' என்று சிறை மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள். பிறகு, விசாரணைக்கு சென்று வந்தார் புரோக்கர் ஜெயக்குமார்.


இதுகுறித்து நாம் புழல் சிறைத்துறை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணனை தொடர்புகொண்டு கேட்டபோது, "தவறான தகவல். ஜெயக்குமாருக்கு சிறை நிர்வாகம் பரிந்துரைத்த உணவுகள்தான் வழங்கப்பட்டு வருகின்றன. பி.சி.பி. எனப்படும் பிரிசனர் கேஷ் பிராப்பர்ட்டி என்ற நடைமுறை அனைத்துச் சிறைகளிலும் உள்ளன. அந்த நடைமுறைப்படி தன்னிடமுள்ள பணத்தை வைத்து ஸ்னாக்ஸ், டீ போன்ற உணவுகளை சிறைவாசிகள் வாங்கிக்கொள்ள முடியும்.

சிறைவாசிகளுக்கு வெஸ்டர்ன் டாய்லெட் என்பது சட்டத்துக்குப்புறம்பான சலுகை அல்ல. அவர்களின் உடல் நலன் சார்ந்த உரிமை. ஆனால், ஜெயக்குமாருக்கு வெஸ்டர்ன் டாய்லெட் வசதி செய்து தரப்படவில்லை'' என்று மறுத்தார். டி.ஐ.ஜி. முருகேசனுக்கு மெசேஜ் அனுப்பி பலமுறை தொடர்புகொண்டபோதும் போனை அட்டெண்ட் செய்யவில்லை. ஆனால், ஜெயக்குமாருக்காக புதிய வெஸ்டர்ன் டாய்லெட் பதிக்கப்பட்டுள்ளது. அதை அவர் மட்டுமே பயன்படுத்தி வருகிறார் என்கிறார்கள் அதே சிறைத்துறையினர் ஆதாரத்துடன்.

இதுகுறித்து நாம் மேலும் விசாரித்தபோது, "பி.சி.பி. என்கிற பிரிசனர் கேஷ் பிராப்பர்ட்டி டீமின் நோக்கமே கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து கைப்பற்றப்படும் பணம், பொருள் அனைத்தையும் பத்திரமாக வைத்து அவர் ரிலீஸ் ஆகும்போது திரும்ப ஒப்படைப்பதுதான். ஆனால், அதையே சிறைவாசி சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கான வசதிகளை உருவாக்கும் நடை முறையாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு மாதமும் சிறையில் பி.சி.பி. பொறுப்பை யார் எடுத்துக் கொள்வது என்று 6 சிறைக் காவலர்களுக்குள் ஏலமே நடக்கிறது. இதன்மூலம் கைதிகளைப் பார்க்க வருகிறவர்கள் அக்கவுண்டில் பணத்தைப் போட்டுவிடுகிறார்கள். அந்தப் பணத்தை எடுத்துதான் பி.சி.பி. திட்டக்காவலர்கள் இஷ்டத்துக்கு கைதிகளுக்கு கெஸ்ட் ஹவுஸ் போல் வசதிகளை செய்துகொடுத்து இவர்களும் பணம் கொழிக்கிறார்கள்.

என்னதான் பி.சி.பி. மூலம் பணம் கொடுக்கப்பட்டாலும் சட்டப்படி நாட்டுக்கோழி குழம்பு, இட்லி, தோசைக்கெல்லாம் சிறையில் அனுமதியே இல்லை. ஆனால், ஸ்டோர் வார்டராக இருப்பவர்களை கவனித்து ஜெயக்குமார் போன்ற சிறைவாசிகள் சுகவாசி களாகிவிடுகிறார்கள்'' என்கிறார்கள். பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவைவிட அதிக சொகுசுடன் சிறைப்பட்டிருக்கும் ஜெயக்குமாரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணையும் எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.


 

 

Next Story

கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
கோஷ்டி மோதலால் டாஸ்மாக் கடையை சூறையாடி, தீ வைப்பு; இளைஞர்களின் வெறியாட்டம்!

வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம் ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் வேலூரை அடுத்த பெருமுகை கிராமத்தில் டாஸ்மாக் பாரை ஏலத்தில் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், ஏரியூர் பகுதியில் உள்ள திரெளபதி அம்மன் கோவில் திருவிழாவில் துரியோதனன் படுகளம் நேற்று (28-04-24) காலை நடந்தது. திருவிழாவில் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும், ஏரியூர் பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த பெரியவர்கள், இருதரப்பையும் விளக்கிவிட்டு அனுப்பியுள்ளனர். கோபம் குறையாமல் இருதரப்பும் சென்றுள்ளது.

அதன் பின்னர், இரவில் நடைபெற்ற தீமிதி திருவிழாவின்போதும் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் மீண்டும் தகராறு, மோதல் நடந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள், ‘ஏரியூர் பசங்க இங்கவந்து துள்ளக்காரணமே சந்துருதான்’ எனக்கூறி பெருமுகையில் உள்ள சந்துருவின் டாஸ்மாக் பாருக்கு சென்று காலி மது, பீர் பாட்டில்களால் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விரட்டியுள்ளனர். இதனால், அங்கு மது அருந்தி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து அங்கிருந்து ஓடியதும், அந்த வாலிபர்கள் அங்கிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கி பாருக்கு தீ வைத்துவிட்டு தப்பித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேலூர் எஸ்.பி மணிவண்ணன், ஏ.டி.எஸ்.பி பாஸ்கரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி தீவைத்த நபர்களை சத்துவாச்சாரி காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story

அதே குற்றச்சாட்டு - சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை மீது மீண்டும் புகார்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
complaint against Sundhara Travels actress radha

முரளி, வடிவேலு உள்ளிட்ட பல பேர் நடிப்பில் 2002ல் வெளியான சுந்தரா ட்ராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. தொடர்ந்து அடாவடி, காத்தவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்பு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். 

இந்த சூழலில் கடந்த மாதம் ராதா மீதும் அவரது மகன் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை, சாலிகிராமத்தை சேர்ந்த டேவிட் ராஜ், தன் மகனை இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ராதா தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே புகார் கொடுக்கப்பட்டு, அதன் விசாரணை நிலுவையில் உள்ளது. 

இந்த நிலையில் சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த முரளி என்பவர் தரப்பில், ராதா மீது வடபழனி காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் முரளியை ராதா தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முரளிக்கு தலையில் காயம் ஏற்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முரளியின் புகார் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து ராதா மீது ஒரே மாதிரியான புகார்கள் எழுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.