பெட்ரோல் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கிறது. பற்றாக்குறைக்கு புதிய பட்ஜெட் வரி வேறு விலையை ஏறிக்கொண்டே செல்கிறது. பெட்ரோல், டீசல்தான் ஒரு நாட்டில் விற்கப்படும் அனைத்து பொருட்களின் விலையையும் தீர்மானிக்கும். பெட்ரோல், டீசல் விலை ஏறினால் அதைத்தொடர்ந்து காய்கறியிலிருந்து, அழகு சாதனப்பொருட்கள் வரை அனைத்து பொருட்களின் விலையும் உயரும். சிறு,குறு வியாபார பொருட்களுக்கெல்லாம் வரிவிதிக்கும் அரசு, பெட்ரோலுக்கு ஏன் ஜி.எஸ்.டி. விதிக்கவில்லை என்பது இன்றுவரை தீராத சந்தேகம்தான்.
ஜி.எஸ்.டியை விட அரசுக்கு இதில் அதிக வரி வருகிறது என்பதால்தான் என்று நிபுணர்களுக்குத் தெரியாமலில்லை. மக்கள், ஊதியம் அப்படியே இருக்கிறது, செலவு மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று புலம்புகின்றனர். இதன்மூலம் அதிகவரி வரும் என்று தெரிந்துவிட்டால் அதற்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில்தான் உள்ளது அரசு. நம் நாட்டில் மட்டும்தான் இப்படியா, இல்லை எல்லா நாடுகளிலும் இப்படித்தானா என்பதை பார்ப்போம்..
உலகிற்கே தேவையான கச்சா எண்ணெய்யை மிக அதிகமாக எடுக்கக் கூடிய சவுதி அரேபியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இந்திய மதிப்பில் ரூ.35.45 மட்டுமே. அது உற்பத்தி நாடு, ஏற்றுமதி செய்யும் நாடு. அதோடு ஒப்பிடுவது சரியல்ல என்றாலும் இறக்குமதி நாடுகளான இலங்கையில் ரூ.53.67, பாகிஸ்தானில் ரூ.49.60, அமெரிக்காவில் 49.77, சிரியாவில் ரூ.28.45, குவைத்தில் ரூ.22.80, சூடானில் 22.14, வெனிசுலாவில் கிட்டத்தட்ட இந்திய மதிப்பின்படி, ரூ.6.50 மட்டுமே (விலை நாளுக்கு நாள் சிறிது மாறுபடலாம்).
"நீங்க சொல்றத பாத்தா இந்தியாவுல மட்டும்தான் அதிகமா இருக்குற மாதிரி இருக்கே?" என்று கேட்டால் 'இல்லை' என்பதுதான் பதில். ஏனென்றால் நம் நாட்டை விட அதிக விலைக்கெல்லாம் பெட்ரோல் விற்கின்ற நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஜப்பானில் ரூ.85.45, தென்கொரியாவில் ரூ.95.34, ஸ்விட்சர்லாந்தில் ரூ.103.82, ஜெர்மனியில் ரூ.109.59, ஹாங்காங்கில் ரூ.134.02, ஐஸ்லாந்தில் ரூ.139.31க்கும் விற்கிறது.
'மத்த நாடுகளெல்லாம் விடுங்க நம்ம நாட்டில இருக்குறத மட்டும் பேசுங்க' என்று சொல்பவர்களுக்கு, மறைமுக வரியாக மட்டுமே நாம் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 ரூபாயும், ஒரு லிட்டர் டீசலுக்கு 25 ரூபாயும் செலுத்துகிறோம். இன்னும் நுழைவு வரி முதற்கொண்டு பலவகை வரிகள் உள்ளது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட பாதிக்கு, பாதி நாம் வரி மட்டுமே செலுத்துகிறோம். 'வளர்ச்சி... வளர்ச்சி' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தது இந்த அரசு. அந்த வளர்ச்சியை வரிகளில் மட்டும்தான் பார்க்கிறோம்.