Skip to main content

அப்போ ஒகி, இப்போ சாமி பேருக்குத்தான் அர்ச்சனை! - இந்த விளம்பரம் தேவையா?

Published on 26/04/2018 | Edited on 26/04/2018

 

eps

திரைப்பட சங்க ஊழியர்களின் வேலை நிறுத்தம் முடிந்து முதல் படமாக "மெர்க்குரி" வெளிவந்தது. படத்திற்கு நீண்டநாள் கழித்து சென்றவர்களுக்கு அதிர்ச்சி... என்னவென்று பார்த்தால் அரசின் விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது. இதில் என்ன ஆச்சர்யம், நாம்தான் "தமிழர்களே, தமிழர்களே நீங்கள் கடலில்... முதல் மாண்புமிகு இதயதெய்வம்... (அது ஒரு பெரிய லிஸ்ட் விடுங்க) வரை அனைத்தும் பார்த்தவர்களாயிற்றே என்றாலும்கூட "நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெயருக்குதான்" என நாம் கேட்டபோது அதில் கிடைத்த அனுபவம் நேரில் போய் பார்த்தால்தான் தெரியும். இதை விடுங்கள் இதாவது பரவாயில்லை. இதற்குமுன் ஒகி புயல் வந்து ஊரையே கலங்கடித்துக்கொண்டிருந்தபோது இவர்கள் ஒரு அரசு விளம்பரம் வெளியிட்டார்கள்....

கடந்த டிசம்பர் மாதம்...

இன்று விடுமுறை நாளாயிற்றே படத்திற்கு போகலாம் என நினைத்து படத்திற்கு சென்றேன். படமும் நன்றாக போய்க்கொண்டிருந்தது. திடீரென இடைவெளி வந்தது. என்ன செய்வது டிக்கெட் வாங்குவதற்கே சிக்கனமாக செலவு செய்து மிச்சப்படுத்தவேண்டி உள்ளது. இதில் எங்கிருந்து ஸ்நாக்ஸ் வாங்க செல்வது என்று அங்கேயே அமர்ந்துவிட்டேன். என்னைப்போல் ஒருவன் என ஆங்காங்கே சிலர் அமர்ந்திருந்தனர். எப்போதும் இடைவெளியில் விளம்பரம் வருவது சகஜம்தான் ஆனால் இந்த விளம்பரம் சகிக்க முடியாததாக இருந்தது. (அப்படியென்ன விளம்பரமாய் இருக்கும் என கண்டதை நினைக்காதீர்கள் நானே சொல்கிறேன்.) தமிழ்நாடு அரசு தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறையின் விளம்பரம்தான் அது. ஏற்கனவே ஜெயலலிதா இருக்கும்வரை சாதனைகள் எனவும், ஜெயலலிதா இறந்தபின்பு அம்மா, அம்மா எனவும், அதன்பின் ஒருவருட கூத்தான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளம்பரமும் போட்டவர்கள்தான் அவர்கள் இந்தமுறை வேறெதுவும் கிடைக்காததால் ஒகி புயலை உள்ளே இழுத்துவிட்டுள்ளனர். 
 

அந்த காணொளியில்  முதல்வர் பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்று பார்த்து அனைவருக்கும் தலா 25 இலட்சம் அளித்தார். முதல்வர் வேறு வந்து நாங்கள் ஒகி புயலின்போது முன்னெச்சரிக்கையாக செயல்பட்டோம். தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது. இதைப்பார்க்கும்போதே எழுந்து போய் விடலாமா என்றிருந்தது என்ன செய்வது கொடுத்த தொகை கண்முன் வர அப்படியே மனம் குமுறிக்கொண்டே அமைதியானது. அடுத்து நடந்த சம்பவம்தான் உச்சம். மீனவர்களின் குமுறல்களை தொழில்நுட்பத்தால் (இதற்கு மட்டும் உபயோகப்படும் அறிவு விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளி இறக்கும்போதும், கடலில் கச்சா எண்ணெய் கலந்தபோதும் எங்கே சென்றது என தெரியவில்லை). டப்பிங் மாற்றி "அரசுதான் எங்களைக் காப்பாற்றியது, அரசுக்கு நன்றி" என பேச வைத்தது. இதெல்லாம் பார்க்கும்போது வந்த மனக்குமுறல் உண்மையில் நடந்தது என்ன என்பதை நினைவுக்கு கொண்டுவந்தது.

 

ockhi



காணாமல்போன மீனவர்கள் குறித்த தப்பான கணக்கு அளித்தது, புயல் வடிந்து காய்ந்த பின்பு வந்து முதலமைச்சர் இடங்களை பார்வையிட்டது மற்றும் மத்தியகுழு ஆய்வு செய்தது. என அனைத்துமே காலதாமதமாகதான் நடந்தது. அப்படியிருக்கையில் அவர்கள் இப்படி முன்னெச்சரிக்கையாக நடந்துகொண்டோம் என கூறியது அரசின் நாடகத்தை காட்டியது. கடைகோடியில் இருப்பதால் யார் கண்ணுக்கும் தெரியாதவர்கள் கிறித்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு, பொங்கல் என எதையும் கொண்டாடாமல் கடலை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நிதி அவர்களைச்சென்று அடைந்ததா என்ற கேள்விக்கு உள்ளூர் முதல் உலகநாடுகளை சுற்றிக்கொண்டிருக்கும்  அரசு பொறுப்பிலிருக்கும் யாரிடமும் பதில் இல்லை. அப்படி இருக்கையில் ஒருவரின் குமுறலை டப்பிங் செய்து ஒளிபரப்புவது. இதை என்னவென்று சொல்வது.
 

ockhi


 

இப்படி ஒரு அரசு நமக்கு தேவைதானா என்ற எண்ணம் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில், இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போன்று இருந்தது. மத்தியில் ஒருவர் தரும் விளம்பரங்களைவிட இது மிகப்பெரிய விளம்பரமாக உள்ளது. உண்மை நிலவரம் எப்படியோ இருக்கட்டும், விளம்பரங்களை வைத்தும் ஊடகங்களை வைத்தும் சரிகட்டிக் கொள்ளலாம் என்று அரசுகள் நினைப்பது ஒரு காரணம். இன்னொன்று, ஆள்பவர்களை இப்படி சாமியாக்கி, எந்த எல்லைக்கும் சென்று குளிர்வித்துவிட்டு, தாங்கள் நினைத்தபடி செல்வம் சேர்க்கும் அதிகாரிகள் பெருகியிருப்பது இன்னொரு காரணம்.