Skip to main content

உலகப் பெருமையை பெற்ற இஸ்ரோ சிவன்! 

Published on 12/07/2020 | Edited on 12/07/2020
nagercoil tamil nadu

                                   

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவராக இருப்பவர் தமிழரான சிவன்! சர்வதேச அளவில் பெருமை மிக்க, வோன் கர்மான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதனை அறிந்து, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பலரும் சிவனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். 


                       
உலக அளவில் விண்வெளி ஆராய்ச்சிகளில் சிறந்து விளக்கும் விஞ்ஞானிகளை தேர்வு செய்து அவர்களை கௌரவப்படுத்தி வருகிறது ஸ்வீடன் நாட்டில் உள்ள இண்டர்நேசனல் அகடமி ஆஃப் அஸ்ட்ரோநாடிக்ஸ் நிறுவனம். 


  
                            
அறிவியல் உலகில் பல அங்கீகாரங்களைப் பெற்றது இந்த நிறுவனம். பெருமை மிகு இந்த அறிவியல் சொசைட்டியின் செயல்பாடுகள் உலக அளவில் பிரசித்திப்பெற்றவை. இந்த நிறுவனம், ஆண்டு தோறும் உலக அளவில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளில் ஒருவரை தேர்ந்தெடுத்து ’வோன் கர்மான் ‘ என்கிற விருது வழங்கி விஞ்ஞானிகளைப் பெருமைப் படுத்தி வருகிறது. 
    


                       
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான வோன் கர்மான் விருதிற்கு இஸ்ரோ சேர்மனான விஞ்ஞானி சிவனை தேர்ந்தெடுத்துள்ளது அந்த நிறுவனம். பிரான்ஸ் நாட்டில் 2021 மார்ச் மாதம் நடக்கும் பிரமாண்ட விழாவில் இந்த விருது சிவனுக்கு வழங்கப்படவிருக்கிறது. விண்வெளித்துறையின் பல்வேறு பிரிவுகளிலும் நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் கௌரவ விருது இது! 


                         

சர்வதேச நாடுகளில் உள்ள புகழ்ப்பெற்ற விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினரால், சீராய்வு செய்யப்பட்டு, திறமைகள் அடிப்படையில் சிறந்த விஞ்ஞானியை இந்த விருதுக்கு தேர்வு செய்வர். அதன் அடிப்படையில் பெருமைமிகு இந்த விருதுக்கு சிவன் தேர்வு செய்யப்பட்டிருப்பது இஸ்ரோவுக்குப் பெருமை. விருதுகள் சிவனுக்கு புதிதல்ல ! 35 வருட அறிவியல் பயணத்தில் எண்ணற்ற கௌரவங்கள், பெருமைகள், விருதுகள் பல சிவனை அலங்கரித்துள்ளன. அந்த வரிசையில், இந்த விருது ஓர் உலக அங்கீகாரம்  என்கிறார்கள் தமிழக விஞ்ஞானிகள்!.