1998ஆம் ஆண்டு திமுக தலைவர் கலைஞருக்கு தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடைப்பெற்றது. இதில் பேசிய நடிகர் சிவாஜிகணேசன், தனக்கும், கலைஞருக்கும் இருந்த அரை நூற்றாண்டு நட்பை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி பேசினார்.
"தாயே தமிழே, உன் தலைமகனை, என் நண்பனை, இந்த நாட்டின் சிறந்த அறிவாளியை, உயர்ந்த அரசியல் நதியை, வாழ வை. தமிழ் திரையுலகம் கலைஞருக்கு, என் உயிர் நண்பனுக்கு ஒரு சிறந்த விழா எடுத்து, எவ்வளவோ பெரியவர்கள் இருந்தும் என்னை தலைமை தாங்க பணித்தார்களே, இதனைவிட அவர்கள் எனக்கு மாபெரும் சிறப்பினை செய்ய முடியாது.
கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும் இதனைவிட சிறப்பு கிடைக்காது. எப்போது மாபெரும் கலையுலகம், கலைஞர் அவர்களுக்கு விழா எடுப்பது, நான் எப்போது அதற்கு தலைமை தாங்குவது, அப்படியொரு சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கலாம். எனக்கு கிடைக்கிறதோ, இல்லையோ... ஆகையால் இவர்கள் எடுத்துக்கொடுத்த இந்த மாபெரும் வாய்ப்பினை, இந்த மாபெரும் சந்தர்ப்பத்தை என் உளமாற வரவேற்கிறேன். சிவாஜி தலைமை தாங்கலாம் என்று என் நண்பன் கலைஞர் வாய்ப்பு கொடுத்தாரே அதனை நான் மனமாற வரவேற்கிறேன். இந்த கலையுலக பிள்ளைகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
என் அருமை நண்பனைப் பற்றி நான் என்ன பேசுவது? கலைஞர் அவர்களே உங்களைப் பற்றி நான் என்ன பேசுவது? உங்களைப் பற்றி பேசினால், நானும் அதில் சேர்ந்திருப்பேனே? அப்போது என்னையே புகழ்ந்துகொள்வதாகுமே? அதைப்பற்றி பேசுவதா? நாம் இருவரும் சிறுவயதிலே தஞ்சை மாநகரத்திலே தெருத் தெருவாக சந்தோஷமாக பொறுப்பே இல்லாமல் அலைந்தோமே, அதைப்பற்றி பேசுவதா? அல்லது தஞ்சை கோவிலுக்கு சென்றோமே, சாமி கும்பிட அல்ல, காற்று வாங்குவதற்கு அதைப்பற்றி பேசுவதா?
பின்னர் திமுக வளர்ச்சிக்காக ஊர், ஊராக... தெருத் தெருவாக நாடகம் போட்டு வசூல் செய்தோமே, அதைப்பற்றி பேசுவதா? அல்லது உணவுக்கிடைக்காமல் தள்ளாடினோமே அதைப்பற்றி பேசுவதா? பின்னர் அங்கிருந்து சென்னை வருவதற்கு பணமில்லாமல் தவித்தபோது உங்கள் விரலிலே இருந்த மோதிரத்தை விற்று நாம் வீடு வந்து சேர்ந்தோமே அதைப்பற்றி பேசுவதா? எதைப்பற்றிய்யா பேசுவது?
நான் சினிமாவுக்கு வந்த பிறகு பராசக்திக்காக எழுதினீர்களே, அந்த வசனத்தைப் பேசி நடித்தேனே. அந்தப் படம் வெளிவந்த பிறகு ஒரே இரவிலே வானத்திலே சென்றேனே, அதைப் பற்றி பேசுவதா? ஒரு சமயம் எனக்கு நீங்கள் எழுதிக்கொடுத்த வசனத்தை என் அருமை சகோதரர் எஸ்.எஸ்.ஆர். அவர்களை பேச வைத்தீர்களே, அதைப் பற்றி பேசுவதா? அதற்காக நான் உங்கள் மீது கோபித்துக்கொண்டேனே அதைப் பற்றி பேசுவதா? பின்னர் அதற்காக கோவித்துக்கொள்ளாதே கணேசா, இதோ நான் எழுதிக்கொடுக்கிறேன் என்று அரை மணி நேரத்திலே ஒரு வசனத்தை எழுதிக்கொடுத்தீர்களே அதைப்பற்றி பேசுவதா? அதைத்தானே நமது அருமைக் கண்மணி சிவக்குமார் பேசிக்காட்டினான்.
''காவிரி தந்த தமிழகத்து புது மணலில் களமமைத்த சேர, சோழ, பாண்டி மன்னர், கோபுரத்து கலசத்தில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்து கொண்டிருந்த காலமது'' என்று எழுதினீர்களே...
அப்போது உங்களுக்கும், எனக்கும் இடையே ஒரு போட்டி. உங்களது எழுத்து சிறப்பாக இருந்ததா? அல்லது நான் சிறப்பாக பேசினேனா என்று. ஆனால் மக்கள் சொன்னார்கள் இரண்டுமே நன்றாகத்தான் இருந்தது என்று. அதைப்பற்றி பேசுவதா? எதைப்பற்றி பேசுவது?
நான் எதைப்பற்றி பேசினாலும் நான் உங்கள் கூட வந்துக்கொண்டிருப்பேனே... நீங்கள் வாழ வேண்டும். பல்லாண்டு வாழ வேண்டும். உங்களை நம்பி ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான பேர் இருக்கிறார்கள் இந்த தமிழகத்திலே... உங்களை நம்பி ஒரு மாபெரும் இயக்கமே இருக்கிறது தமிழகத்திலே... அதனை நீங்கள் காப்பாற்ற வேண்டாமா? அதற்காகவே நீங்கள் வாழ வேண்டும்.
என் அருமை கண்மணி பாரதிராஜா சொன்னானே, எங்கள் வயதை உங்களுக்கு கொடுக்கிறோம் என்று. அதைப்போல் நான் சொல்கிறேன். அவன் இளைஞன் எத்தனை வயதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். நான் வயதானவன் நான் சொல்கிறேன். என்னுடைய வயதிலே இரண்டை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு மட்டும்தான். அவ்வளவு நாள் இருக்கிறேனோ, இல்லையோ தெரியாது. எனக்காக யாரும் கவலைப்படப்போவதில்லை. என் மனைவி மட்டும்தான் கவலைப்படுவாள். ஆனால் அவளுடைய சகோதரனுக்கு இரண்டு வயதை நான் கொடுக்கிறேன் என்று தெரிந்தவுடன் மிகவும் ஆனந்தப்படுபவளும் அவள்தான்.
ஆக நீங்கள் நீண்டு வாழ வேண்டும். தமிழகத்திலே பல்லாண்டு இருக்க வேண்டும். உங்களால் தமிழ் வளர வேண்டும். இன்னும் வளர வேண்டும். நீங்கள் இன்னும் எழுத வேண்டும். வயதானாலும் அதனை பேசி நானும் நடிக்க வேண்டும். இந்த வயதான காலத்திலும்கூட எவ்வளவு சுயநலமப்பா... எதற்கப்பா... எதற்காக நான் நடிக்க வேண்டும். உன் வசனத்தை நான் பேச வேண்டும், அதற்காக நான் நடிக்க வேண்டும்.
கலைஞரே, என் உயிரே, என் அருமை நண்பா, பல்லாயிரமாண்டு வாழவேண்டும். உன்னுடைய தமிழ், உன்னுடைய அரசியல், உன்னுடைய குடும்பம் ஆல் போல் தழைக்க வேண்டும். அழகு போல் வேரூன்ற வேண்டும். பல்லாண்டு, பல்லாண்டு வாழ்ந்து நீங்கள் இந்த நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும். இது என்னுடைய இதயத்தின் அடித்தளத்தில் இருந்து எழுகின்ற அன்பான வாழ்த்து. என் வாழ்த்தோடு என் அருமை தலைவர் காமராசருடைய ஆவியும் உங்களை வாழ்த்தும் என்று கூறி விடைபெறுகிறேன்''.