Skip to main content

"எழுந்து சென்ற பறவை நீ" - பாடலாசிரியர் வேல்முருகன்

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

lyricist velmurugan about na.muthukumar

 

பெரியார் பாதையின் முடிவில்
அண்ணா பாதை தொடர்கிறது
அண்ணாவின் ஊரிலிருந்து
அண்ணா உன் பாதை தொடங்குகிறது.

 

வீட்டின் எல்லா அறைகளிலும்
விளக்குகள் அணைந்து
ஓய்வு கொள்ளும் 
நீ இருக்கும் அறை மட்டும் 
விழித்துக்கொண்டேயிருக்கும்.

 

உண்டால் உறக்கம் வரும்
உறங்கினால் படிக்கமுடியாது என்று
உணவையே வெறுத்தவன் நீ.

 

நேரில் பார்ப்பவர்களை எல்லாம்
எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா?
என்று கேட்டுக்கொண்டிருந்த நீ
ஒருநாளில் ஒருமுறைகூட
உன்னைக் கேட்டுக்கொண்டதில்லையே ஏன்?

 

சிக்கனமான வார்த்தைகளில்
கவிதை சொல்லும் 
திறன் இருக்கட்டும்
அதற்காக உன் வாழ்விலுமா?

 

நெரிசலில் சிக்கிய 
சிறுவர்களைப் போல
உன் கையெழுத்தில் பிறந்த 
எத்தனையோ பாடல்கள்
மனித சிக்கலுக்கு வழி சொல்கிறது.

 

அரிசியில் எழுதப்பட்ட
பெயர்களைப் போல
உன் பாடல்கள்
உரியவர்களுக்குச் சென்று சேருகிறது.

 

நீ வெளுக்கப்போடும் ஆடைகளிலும்
மறந்ததைப் போலவே
பணத்தை வைப்பாய்
பாக்கெட்டில் கையை விட்டால்
துவைப்பவன் துவண்டு போகக்கூடாது
என்பதை எங்ஙனம் கற்றாய்?

 

நம் அலுவலக வாசலில்
உன்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட
திருநங்கைகள்
உன் தலைமீது கை வைத்து
ஆசீர்வதித்தபோது
யானையிடம் தலையைக் கொடுத்த சிறுவனாக
உன் சிரம் குனிந்தது
அவர்களோ ஆசிர்வதிப்பதுபோல்
ஆசி வாங்கிப்போனார்கள் உன்னிடம்.

 

சென்னையின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும்
பெயர் தெரியாத ஆட்டோக்காரர்கள் கூட
நம் அலுவலகம் வந்து
ஆட்டோ பயணத்துக்கு சில்லறை இல்லாமல்
எப்போதோ நீ தந்துவிட்டுப் போன பணத்துக்கு
மீதிப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போவார்கள்

 

உன்னைச்சுற்றி எப்போதும் 
புத்தகங்கள்,  நண்பர்கள்
நடுவே நீ அமர்ந்துகொள்வதே
உன் ராஜபாட்டை
உன் கவிதைக் குறிப்புக்கு ஏங்கி
இப்போதும் பேனாவும் பேப்பரும் தட்டுதே உன் வீட்டை.

 

ஸ்ரீஹரிகோட்டாவை தொடும் தூரத்தில் 
முனியாண்டி விலாஸ்
குறுகுறு வட்டுகளில் இருக்கும்
ஊர்வன நடப்பன யாவும் 
பாடல் பயணத்தில் 
உன் இலையை நோக்கிப் பயணிக்கும்
கடந்த நாலைந்து வருடமாக 
உனை காணாது அதுவெல்லாம் 
எத்தனை முறைதான் மரணிக்கும்?

 

உனக்கு வந்த எத்தனையோ
பணவோலைகள் ஆகியிருக்கு பவுன்ஸ்
நீ செக்புக்கிலும் கவிதைதான்
எழுதுவாய்
ஆனாலும் அது
பொய் சொன்னதேயில்லை.

 

இறக்கும் வரை நீ
பள்ளிச்சிறுவன் தான்
போகுமிடமெல்லாம்
பேனாவும் பேப்பரும்
வாங்கியபடியேதான் இருந்தாய்

 

எல்லா அப்பாவும்
தன் பிள்ளையை தவிட்டுக்கு
வித்திடுவேன் என்று
மிரட்டுவதுண்டு
உன் அப்பா மட்டும்தான் 
உன்னைப்
புத்தகத்துக்கு வித்திடுவேன் என்று 
மிரட்டியிருக்கிறார்.

 

நீ வாழ்ந்தது நாற்பத்தியொரு வருடம்
ஆனால் உழைத்தது அறுபது வருடம்
தமிழனின் சரிபாதி ஆயுளில் இறந்தாய்
தமிழின் சரிசமமாய் இன்றும் இருந்தாய்.

 

பத்திரிகையில் உன்னைப் பற்றி வரும்
செய்திகளை
பத்திரப்படுத்திக் காண்பிக்கச்சொல்வாய்
உன் இறப்புச் செய்தியையும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் அண்ணா.

 

எழுந்து சென்ற பறவை நீ
கிளைகளாய் அசைகிறது
உன் நினைவுகள்.