சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முன்னனி நடிகர். இவரின் வளர்ச்சி சினிமாத்துறைக்கு வர விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு உந்துசக்தி என்று கூட சொல்லலாம்.
தொலைக்காட்சியிலிருந்து வந்து சினிமாவில் வெற்றியடைவது என்பது சாதாரண விஷயம் அல்ல. எந்த ஒரு பின்புலமும் இல்லாமல், ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய காமெடி நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி அதில் வெற்றியும் அடைந்து, பின் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக பணியாற்றி, நிகழ்ச்சிகளில் நகைச்சுவையாக பேசி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரின் மனதிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இந்த நகைச்சுவை திறன்தான் மெரினா, மனங்கொத்திப்பறவை ஆகிய படங்களில் நாயகனாக அறிமுகமாக வைத்தது. இந்த இரண்டு படங்களும் ஒரு சுமாரான வெற்றியை அவருக்கு அளித்தது. தனுஷுடன் இணைந்து "மூன்று" படத்தில் காமெடியனாக நடித்தார் அதிலும் அவருக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் இல்லை. அதன்பின் இவர் ஒரு காமெடியனாக நடிக்க வாய்ப்புள்ளது என்றும், இவருக்கு சினிமா உகந்தது அல்ல என்றும் விமர்சனங்கள் வரத்தொடங்கியது. ஆனால், தனுஷ் தயாரித்த முதல் படமான "எதிர்நீச்சல்" படத்தில் மீண்டும் கதாநாயகன் அவதாரம் எடுக்க படம் வெற்றியடைந்தது.
அதன்பின் நடிகர் விமலுடன் இணைந்து தன்னை முதல் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்த இயக்குனர். பாண்டிய ராஜ் இயக்கத்தில் "கேடி பில்லா கில்லாடி ரங்கா" படத்தில் நகைச்சுவை கலந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் அதில் "பட்டை முருகன்" கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
சிவகார்த்திகேயனின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை அளித்தது வருத்தப்படாத வாலிபர் சங்கம். இதில் கிராமத்து குசும்புடன் நடித்து தனது ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டார் அவர். அதனைத்தொடர்ந்து வந்த மான் கராத்தே, காக்கிச்சட்டை, ஆகிய படங்களும் சிவகார்த்திகேயன் தனது நடனம், நடிப்பு இரண்டிலும் மெருகேறி வருவதை வெளிப்படுத்தினார்.
இந்த தொடர் வெற்றிகளால் சிவகார்த்திகேயனுக்கு 2014 ஆம் ஆண்டு "எண்டர்டைனர் அவார்ட்" வழங்கப்பட்டது. இந்த விருது தனக்கு ஏற்ற ஒன்று என்பதை நிருபிக்கும் வகையில் பல இன்னல்களுக்கு இடையில் வெளியான "ரஜினி முருகன்" 2016 பொங்கல் அன்று வெளியாகி மக்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் நகைச்சுவை விருந்து அளித்தது படம் நல்ல வசூல் ஈட்டியது. இதுபோல் நகைச்சுவையாக மட்டும் நடிக்க விரும்பாமல் சிவகார்த்திகேயன்
தன் சினிமா பயணத்தில் புதிய கதாபாத்திரங்கள் தேர்ந்தேடுத்து நடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் "ரெமோ": படத்தில் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படம் மெகா ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் பட்ஜெட் சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட் ஆகும். ஆனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் "தன்னை சுற்றி பல சூழ்ச்சிகள் நடக்கின்றன நான் நல்ல படங்களை கொடுக்க ஆசைப்படுகிறேன்" என்று மேடையிலேயே அழுதுவிட்டார் . ஆனால் இவர் கண்கலங்கியதனால்தான் படம் வெற்றி என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இவையெல்லாம் மீறி பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக ரெமோ மெகா ஹிட்டானது. இந்த வெற்றியை அடுத்து மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி அந்த படமும் வெற்றி அடைந்தது. இந்த அளவிற்கு உயரத்தை அடைந்தது அவரின் அதிஷ்டம் என்று யாரும் சொல்லிவிட முடியாது. இவை அனைத்திற்கும் காரணம் அவரின் உழைப்பு, திறமை மற்றும் நம்பிக்கையும்தான்.