ஆபாச நடனத்துடன் திறப்பு விழா நடத்திய கிரானைட் குவாரிக்கு சீல் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ஒரு கிரானைட் குவாரி திறக்கப்பட்டது. ஊரடங்கு என்பதால் பெரிய அளவில் அந்த குவாரியில் விழா நடைபெறாமல், ஒரு தனியார் விடுதியில் விழா நடைபெற்றது. முதல் நாள் மாலை தொடங்கிய அந்த நிகழ்ச்சி மறுநாள் காலை வரை நடந்தது.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், பெரும் செல்வந்தர்கள், வணிகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். ரூபாய் ஐந்து லட்சம் செலவு செய்து வெளிநாட்டு நடன அழகியை அழைத்து வந்து பெல்லி டான்ஸ், காபரே டான்ஸ் ஆகியன ஆபாசமாக நடந்துள்ளன. மேலும் மதுபானங்கள் பறிமாறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு நேரத்தில் இதுபோன்று ஆபாச நடனங்களுடன், 100க்கும் மேற்பட்டோர் கூடலாமா என பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தினர்.
இதையடுத்து இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 33 பேரை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கைது செய்யப்பட்டவர்களில் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களும் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சி நடந்த விடுதிக்கு தற்காலிகமாக லைசென்ஸ் ரத்து செய்துள்ளதோடு, அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த குவாரிக்கும் வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர்.