புராதன காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், நவீன மனிதர்களின் தொழில்நுட்ப வசதிகளை அறிந்திருக்கவில்லை என்று சொல்வார்கள். ஆனால், கட்டுமானத்திலும் சரி, தொழில்நுட்பத்திலும் சரி அவர்கள் பல வகைகளில் முன்னேறி இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தபடியே இருக்கின்றன.
பெரு நாட்டு இன்கா மக்கள் தங்கள் கணக்குகளையும் தகவல்களையும் பதியவைப்பதற்கு குய்பு என்ற முடிச்சு முறையை பயன்படுத்தினார்கள். எகிப்தியர்களின் பிரமிடுகள், துருக்கியில் உள்ள பாதாள நகரம் போன்றவை புராதன மக்களின் ஆற்றலுக்கு சாட்சியாக இருக்கின்றன.
மத்திய கிழ்காசியாவை நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கிறார்கள். அங்கிருந்துதான் மனித நாகரிங்கள் பரவியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இந்தப் பகுதியில்தான் பாரசீகர்கள் தாங்கள் வாழ்ந்த பாலவன வெப்பப் பிரதேசத்தில் பொருள்கள் கெட்டுவிடாமல் பாதுகாக்க குளிர்பதன அமைப்பை கட்டி பயன்படுத்தி இருக்கிறார்கள்.
குவிமாடம் போல கட்டப்பட்டுள்ள இந்த அமைப்புகள் ஈரானில் பல இடங்களில் இப்போதும் அப்படியே இருக்கின்றன. காலப்போக்கில் பாலைவனப் புயல் மற்றும் பல காரணங்களால் சிதைந்த அமைப்புகள் போக நன்றாக இருக்கும் அமைப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
யாக்சல் அல்லது குளிபதனக் குழி என்று அழைக்கப்படும் இந்த அமைப்புகள் தரையிலிருந்து 60 அடி வரை உயரம் உள்ளவை. உள்பகுதியில் 6 ஆயிரத்து 500 கன மீட்டர் அளவுக்கு வெற்றிடம் இருக்கும். வெயில் காலத்தில் எளிதில் கெட்டுப்போகக்கூடிய பொருட்களை இந்த குளிபதனக் குழிக்குள் பாதுகாப்பாக வைத்திருந்தார்கள். ஐஸ் கட்டிகள்கூட உருகிவிடாமல் இருந்தன.
இந்த அமைப்பின் சுவர்கள் மணல், களிமண், முட்டைகளின் வெண்கரு, வெள்ளாடு ரோமம் ஆகியவற்றைக் கலந்து கட்டப்பட்டுள்ளது. இரவு நேரம் பாலைவனத்தில் மிகக்கொடூரமான உறையவைக்கும் பனி நிலவும். அந்தச் சமயத்தில் ஐஸ் கட்டிகளை உருவாக்கி இந்த குழிக்குள் வைப்பார்கள். இந்த அமைப்பின் சுவர் வெப்பத்தை தாங்கும் வகையில் இருக்கிறது.
பனிக்கட்டி உருகினால் வழியும் தண்ணீரை சேகரிக்க அடிப்பகுதியில் அகழிகள் இருக்கின்றன. இந்தத் தண்ணீரை சேமித்து, மீண்டும் இரவு நேரத்தில் ஐஸ் கட்டியாக்கி பயன்படுத்தி இருக்கிறார்கள். தேவைகளுக்கு ஏற்ப திட்டங்களை வகுத்து வாழ்ந்த பாரசீகர்களின் தொழில்நுட்பத் திறமை இன்றளவும் வியப்பையே ஏற்படுத்துகிறது.