ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்க் (BARC) அமைப்பின் முன்னாள் முதன்மைச் செயல் அதிகாரி பார்தோ தாஸ்குப்தா ஆகிய இருவரும் பேசிக்கொண்டதாக ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள வாட்சப் உரையாடல் கசிந்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா அரசு மற்றும் அர்னாப் கோஸ்வாமி இடையே அண்மைக்காலமாக பல்வேறு உரசல்கள் இருந்துவந்தன. உரசல்கள் விரிசல்களாய் மாறிய பின்பு, பழைய வழக்குகளைத் தூசி தட்டிய தாக்கரே அரசு, சில மாதங்களுக்கு முன்பு அர்னாபை கைதுசெய்தது. அதன்பிறகு, விரிசல்கள் அதிகரித்தன. டி.ஆர்.பி. முறைகேடு வழக்கின் நீட்சியாக பார்தோ தாஸ்குப்தாவின் வாட்சப் உரையாடலைக் கவனித்த மகாராஷ்ட்ர அரசுக்குப் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. டி.ஆர்.பி முறைகேட்டை தோண்டச் சென்ற மகாராஷ்ட்ரா அரசுக்கு ராணுவ ரகசியங்கள் எனும் பெரும்பூதம் அகப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, சர்ஜிகல் ஸ்ட்ரைக், நீதிபதியை விலைக்கு வாங்குவது, மத்திய அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றங்கள் வரை அத்தனையும் அவர்களால் முன்கூட்டியே பேசப்பட்டிருக்கிறது. 'அர்னாபுக்கு தெரிந்த ரகசியங்கள் இன்னும் யார் யாருக்குத் தெரிந்தது' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவேளை இந்த ரகசியங்கள் அர்னாபுக்கு தெரிந்ததைப் போலவே பாகிஸ்தானுக்கும் தெரிந்திருந்தால் 'சர்ஜிகல் ஸ்ட்ரைக்' நடத்தச் சென்ற ராணுவ வீரர்களின் கதி என்னவாகியிருக்கும் என எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்வியை அவ்வளவு எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. அதேபோல, அர்னாப் என்ற பெயருக்குப் பதிலாக, இந்த இடத்தில் வேறு ஏதேனும் ஒரு பெயர் இடம்பெற்றிருந்தால், இந்த விவகாரம் மக்கள் மத்தியிலும், அரசாங்க மட்டத்திலும் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதும் தவறாமல் யோசிக்கவேண்டியதாகும்.
புல்வாமா தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அந்த உரையாடலில், "இந்த வருடத்தின் மிகப்பெரும் தீவிரவாத சம்பவம் நடந்த அரை மணி நேரத்திற்குள் நமது சேனல்தான் லீடிங். இதன் மூலம் நமக்குப் பெரும் வெற்றி கிடைத்துள்ளது" எனப் பெருமிதப்பட்டுள்ளார் அர்னாப். 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை விட தனது தொலைக்காட்சிக்கு கிடைத்த புகழ் வெளிச்சம், இந்தியாவின் ஒரே தேசப்பற்றாளரான அர்னாபை மகிழச் செய்துள்ளது.
இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை வெளியான வாட்சப் உரையாடல்கள் அனைத்தும் உண்மை என மும்பை போலீஸ் தெரிவித்ததாக டெல்லியைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அர்னாபும் இந்த விவகாரத்தை மறுக்கவில்லை. 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' புகழ் அர்னாப் கோஸ்வாமியிடம் இந்தத் தேசம் பல கேள்விகளை எழுப்பக் காத்திருக்கிறது. அதற்கெல்லாம் அவரிடம் பதில் இருக்கிறதோ இல்லையோ, 'சத்யமேவ ஜெயதே, பாரத் மாதா கி ஜே, ஜெய்ஹிந்த்' போன்ற தேசப்பற்று கிளிஷேக்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இவ்வளவும் ஆதாரங்களோடு வெளியே தெரிந்த பின்பும், 'அர்னாப் சிறந்த தேசப்பற்றாளர்' என ஒரு கும்பல் நம்புகிறது அல்லது பிறரை நம்பவைக்க முயல்கிறது.
இவ்வளவு நெருக்கமாக அர்னாபுடன் இருக்கவேண்டிய அவசியம் பார்க் முன்னாள் அதிகாரிக்கு ஏன் வந்தது என உங்களுக்குத் தோன்றலாம். மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியை தனது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ள பார்க் அதிகாரி நினைத்துள்ளார். அதற்கு அர்னாப் உதவியுள்ளார். அதேபோல, தனது மகளுக்கு சிறந்த வழக்கறிஞரிடம் 'இன்டர்ன்ஷிப்' கிடைப்பதற்கு உதவுமாறு அர்னாபிடம் சிபாரிசு கேட்டுள்ளார் பார்க் அதிகாரி பார்த்தோ. அதற்கு உதவுவதாக அர்னாப் கூறியுள்ளார். இவ்வாறு பல கைமாறுகளுடன் அந்த வாட்சப் உரையாடல் நீள்கிறது.
" 'சிக்னல்' என ஒரு செயலி உள்ளது. அது மிகவும் பாதுகாப்பானது" என இவர்கள் இருவரும் தங்களது வாட்சப் உரையாடல்களில் பேசியுள்ளனர். அதுவும் லீக் ஆகியுள்ளது. இதைப் பிடித்துக்கொண்டு 'அன்றே சொன்னார் அர்னாப்', 'இந்தியாவின் நாஸ்டர்டாமஸ்' என ஒரு கூட்டம் கிளம்பாமல் இருப்பது சாலச் சிறந்தது!