‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் மதிவாணன், வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு என வருகிற 24ஆம் தேதி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளதைக் குறித்து தனது கருத்துகளை நம்மிடையே பகிர்ந்துள்ளார்.
தேர்தல் வந்தால் மட்டும்தான் ராமதாஸுக்கு இட ஒதுக்கீடு பற்றி ஞாபகம் வரும். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு வன்னியர்களுக்கு 10.5 உள் ஒதுக்கீடு கொண்டு வந்ததற்கான அவசியம் என்ன? அ.தி.மு.க.-வுடன் கூட்டணி அத்தனை வருடங்கள் இருக்கும்போது அந்த இடஓதுக்கீட்டை என்ன காரணத்திற்காக கொண்டு வந்தார்கள். இன்றைக்கு அந்த இடஒதுகீடு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. தி.மு.க. கொண்டு வந்த வன்னியர், அருந்ததியர், சிறுபான்மையினர் இட ஒதுக்கீடுகளை உச்சநீதிமன்றம் கேள்வி கேட்டிருக்கிறதா? ஆனால் தேர்தலுக்காக ராமதாஸ் அந்த 10.5 இடஒதுக்கீடை கொண்டு வருகிறார் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறேன். இதுதான் நிதர்சனமான உண்மை.
1980ல் இருந்து 1987 வரை வன்னியர் சங்கங்கள் போராட்டம் செய்த அனைத்து போராட்டங்களிலும் முன்கள வீரர்களாக இருந்தவர்கள், போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் போன்றவர்களின் நிலைமை இன்று என்னவாக உள்ளது? வன்னியர் பொதுச் சொத்தாக இருந்த அறக்கட்டளை சரஸ்வதி அறக்கட்டளையாக இன்று மாற்றியிருக்கின்றனர். அது எப்படி மாறினது? தேர்தல் வந்தால் மட்டும் வன்னியர்கள் மீது பாசம் வந்துவிடுமா? மோடியுடன் கூட்டணியில்தானே இருக்கிறார்கள். அவர் நினைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியும். அப்படி இருக்கும்போது அவரிடம் கேட்கலாம் அல்லது சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டி ஆர்ப்பாட்டம் செய்யலாமே. இதையெல்லாம் செய்யாமல் தேர்தல் வரும்போது மட்டும் இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசுகிறார்கள். இன்னும் 1 வருடம் கழித்து தேர்தல் வரப்போகிறது என இப்போது இருந்தே பேச ஆரம்பித்துவிட்டனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு யாருடைய அதிகாரம்? ஒன்றிய அரசு அதிகாரமா இல்லை மாநில அரசு அதிகாரமா? 10 வருட காலமாக மக்கள் தொகை கணக்கெடுப்பே எடுக்காமல் இருக்கின்றனர். அதை எப்போது எடுக்க சொல்வார்கள். ராமதாஸ் நண்பர்தானே மோடி. கூட்டணியில்தானே இருக்கிறார். மோடியிடம் கேட்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொல்லுங்கள். பீகார் மாநில அரசு எடுத்த சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநில உச்சநீதிமன்றம் ஏன் செல்லாது என தீர்ப்பு வழங்கியது? 1989ஆம் ஆண்டு வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை கலைஞர் கொடுத்தார். இன்றைக்கு வரையிலும் அது நிற்கிறது. அதைப்பற்றி யாராவது கேள்வி கேட்க முடியுமா? அதுதான் தி.மு.க. கொடுக்கும் இட ஒதுக்கீடு. மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடியாது. வெறும் சர்வே மட்டும்தான் பண்ண முடியும். அந்த சர்வேவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதைப் பற்றிப் புரிந்துகொள்ளாமல் பேசக்கூடாது. ராமதாஸுக்கு எல்லா விஷயமும் தெரியும். ஆனால் தேர்தல் சமயத்தில் மற்ற அணிக்கு மாற அவர் முடிவெடுத்துவிட்டால், நேரடியாக மாறப்போகிறேன் என்று சொல்ல மாட்டார். இட ஒதுக்கீடு வேண்டும் என்றுதான் ஆரம்பிப்பார் என்றார்.