கடந்த 25 ஆண்டுகால சஸ்பென்ஸ் காட்சிகளுக்கு நேற்று விடை கிடைத்திருக்கிறது. தான் அடுத்த மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்க போகிறேன், அதற்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை என்று தெரிவித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கிட்டதட்ட கால் நூற்றாண்டாக அவர் ரசிகர்களின் ஏக்கத்தை தற்போது தீர்த்து வைத்துள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சமாக சில விஷயங்கள் இருக்கிறது. அது ஆட்சியை பிடிப்பது, அல்லது குறிப்பிட்ட நபர்கள் ஆட்சியை பிடிக்காமல் இருக்க வைப்பது.
இந்த இரண்டுக்குமான விடையை தேடுவதே ரஜினி அரசியலில் உள்ள நுண் அரசியல். ஆட்சியை பிடிப்பது என்பது சாத்தியமா என்று பார்த்தால் இந்த நொடி வரை தமிழகத்தில் ஆளும், ஆண்ட கட்சிகள் மீது கொள்ளை வெறுப்பு மக்களுக்கு இருப்பதாக தெரியவில்லை. இடைதேர்தலில் வழக்கம் போல் ஆளும் கட்சியும், பொதுதேர்தலில் எதிர்க்கட்சியும் வெற்றி பெற்று சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்து கிடக்கிறார்கள். திராவிட கட்சிகள் மீது பெரிய அளவிலான வெறுப்பு என்பது இருந்திருந்தால் கடந்த நாடாளுமன்ற தேர்தலிலேயே அது எதிரொலித்திருக்கும்.
ஆனால் அப்படியான எந்த ஒரு சம்பவமும் நடைபெறாமல் எதிர்கட்சி பெருவாரியான தொகுதிகளில் வெற்றியை வாரி குவித்தது. ஆளும் கட்சியும் இடைத்தேர்தலில் சில தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. கமல் உள்ளிட்ட புதியவர்கள் களம் இறங்கினாலும் அவர்களால் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்க முடியவில்லை. இந்த நிலையில் ரஜினி அரசியல் வருகை இந்த இருபெரும் திராவிட கட்சிகளை ஒதுக்கிவிட்டு மெஜாரிட்டியை பெற்று ஆட்சியை பிடிப்பாரா என்றால், அதற்கு மக்களின் மனநிலை ஏன் மாறக்கூடாதா என்று ரஜினி ரசிகர்கள் எதிர் கேள்வியும் வைக்கக்கூடும். எனவே அதை தேர்தல் முடிவுக்கு பிறகு பேசுவதாக வைத்துக்கொண்டாலும் தற்போதைய கள அரசியலில் திமுக, அதிமுகவுக்கு ரஜினியின் வருகை எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பார்க்க வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டி போட்டு அறிவித்தாலும் கூட்டணி பற்றி வாய் திறக்காமல் சென்றுள்ளார் அமித்ஷா. ஆட்சியை பாராட்டி பேசிய அவர் கூட்டணி பற்றி பேசினால் யாரும் அவரை எதிர்த்து கேள்வி கேட்கப்போவதில்லை. ஆனால் சாணக்கிய தனமாக அதை தவிர்த்துவிட்டு விமானம் ஏறினார் அமித்ஷா. அப்போதே அமித்ஷா மனதுக்குள் வேறு ஏதோ இருக்கிறது என்று பேச்சு எழுந்தது. அதை உறுதி படுத்துவது போல தற்போது ரஜினி வருகை இருக்கிறது. இதனால் கூட்டணி மாற்றம் இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. ஆனால் அப்படி நடந்தால் நடுநிலை வாக்களர்களின் வாக்கு சிறிய அளவேனும் ரஜினிக்கு செல்லக்கூடும்.
அது திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஆனால், அவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்காத பட்சத்தில் அது நிகழ வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு டாட் வைக்கிறார்கள் நடுநிலையாளர்கள். இந்த விஷயங்களை எல்லாம் நாம் கூட்டணி உருவாகும் நேரத்தில்தான் முடிவு செய்யலாம் என்றாலும், தற்போதைய ரஜினியின் அறிவிப்பு சின்ன கட்சிகளின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. ரஜினியை கைகாட்டியே தங்களுக்கான தொகுதிகளை அதிகப்படுத்துக்கொள்ள வாய்ப்புண்டு. எனவே வரும் தேர்தல் புரியாத புதிராக இருக்க அதிகம் வாய்ப்புண்டு. அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்க கூடும். ஆனால் அரசியலில் ரஜினி என்.டி.ஆரா அல்லது டி.ஆரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.