2017 ஆம் ஆண்டு குஜராத் தேர்தல் சமயத்தில் பாஜகவை தோற்கடிக்க மன்மோகன் சிங் பாகிஸ்தானோடு சேர்ந்து சதி செய்கிறார் என்று பாஜக தலைவர் அமித் ஷாவும் நரேந்திர மோடியும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா பாஜகவுக்கு 12 கேள்விகளை விடுத்தார். அந்த 12 கேள்விகளுக்கும் இதுவரை பாஜக பதில் அளிக்கவில்லை. பாகிஸ்தானை வைத்து அரசியல் செய்யும் மோடியின் பாஜகவுக்கு பாகிஸ்தானோடு இருக்கும் தொடர்புகளையும் அந்த கேள்விகள் அம்பலப்படுத்தின.
குறிப்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் சவ்ரியா தோவல் பாகிஸ்தானில் உள்ள சையது அலி அப்பாஸுடன் இணைந்து வியாபாரம் செய்வது எப்படி என்று காங்கிரஸ் கட்சி வினா எழுப்பியிருந்தது.
2017-ல் சுர்ஜிவாலா விடுத்த அறிக்கையில் மோடியையும் அமித் ஷாவையும் கடுமையாக சாடியிருந்தார். அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் வியாபார மோசடிகளையும் அவர் விட்டுவைக்கவில்லை. குஜராத்தில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் வெடிவெடித்து கொண்டாடுவார்கள் என்று அமித் ஷா கதறும் அதே வேளையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் சவ்ரியா தோவல் பாகிஸ்தானில் உள்ள சையது அலி அப்பாஸுடனும், சவுதி அரேபியாவில் உள்ள இன்னொருவருடனும் வியாபாரக் கூட்டாளியாக இருப்பதை அமித் ஷா ஏன் விமர்சனம் செய்யவில்லை அல்லது தடுக்கக்கூட இல்லை என்று சுர்ஜிவாலா கேட்டிருந்தார்.
அமைதியான, நாகரிகமான சுபாவம் கொண்ட மன்மோகன் சிங் குறித்து இந்தியாவுக்கே நன்றாகத் தெரியும். ஆனால், அவரை மோடியும் அமித் ஷாவும் அநாகரிமாக விமர்சனம் செய்வதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாஜகவின் கடந்த கால பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அவர்கள் பாஜகவை எப்போதும் நம்பமாட்டார்கள் என்ற சுர்ஜிவாலா, மோடிக்கு 12 கேள்விகளை அடுக்கியிருந்தார். அந்தக் கேள்விகளுக்கு இதுவரை பதிலே அளிக்கவில்லை என்பதுதான் இதில் ஹைலைட். அந்தக் கேள்விகள் இதோ…
1. சர்வதேச பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமின் மனைவி 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து மும்பைக்கு எப்படி வந்தார். அவரை கைதுசெய்ய மாநில அரசோ, மத்திய அரசோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
2. தாவூத் இப்ராஹிமுடன் பேசியதற்காக மகாராஸ்டிரா மாநில பாஜக தலைவராகவும் மாநில அமைச்சராகவும் இருந்த ஏக்நாத் கட்ஸேவை பதவியிலிருந்து நீக்கியது உண்மையா பொய்யா?
3. 2017 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி நாசிக்கில் நடைபெற்ற தாவூத் இப்ராஹிமின் உறவினர் திருமணத்தில் பாஜகவின் அமைச்சர் கிரிஷ் மகாஜன், தேவ்யானி பரான்டே உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்கள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டது எப்படி?
4. பதான்கோட் விமானப் படைத்தளத்தில் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகளை மோடி அரசு எப்படி அனுமதித்தது?
5. உதாம்பூரிலும், குர்தாஸ்பூரிலும் பாகிஸ்தான் ஆதரவுபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் அழைப்பே இல்லாமல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீபின் உறவினர் திருமணத்தில் பங்கேற்க மோடி பாகிஸ்தான் சென்றது எப்படி?
6. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு ரகசியங்களை விற்றதாக பாஜகவின் தொழில்நுட்ப அணியின் தலைவர் துருவ் சக்ஸேனா தலைமையில் 11 பேர் பிடிபட்டது உண்மையா இல்லையா?
7. முந்தைய வாஜ்பாய் அரசாங்கத்தில், காந்தகாருக்கு கடத்தப்பட்ட இந்திய விமானத்தை மீட்க ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸார், காஷ்மீர் பயங்கரவாதி முஸ்தாக் ஸர்கார், அவருடைய கூட்டாளி உமர் சையது ஷேக் உள்ளிட்டோரை விமானத்தி்ல் ஆப்கான் கொண்டு போய் ஒப்படைத்தது உண்மைதானே?
8. தீவிரவாதி புர்ஹான் வானி தற்செயலான என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகவும், புர்ஹான் வானி அங்கே இருந்தது பாதுகாப்புப் படையினருக்கு தெரியாது என்று பாஜகவைச் சேர்ந்த காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல்சிங் கூறினாரா இல்லையா?
9. புர்ஹான் வானியை கொன்ற பிறகு, அவருடைய குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பும், தேவையான உதவியும் செய்வதாக காஷ்மீரில் இருந்த பாஜக கூட்டணி அரசு பேச்சு நடத்தியது உண்மையா இல்லையா?
10. காஷ்மீர் மாநிலத்தின் பெண் பிரிவினைவாதி அஷியா அந்த்ராபியை மாநில அரசின் திட்டம் ஒன்றுக்கு தூதராக நியமித்து அவருடைய படத்தை போஸ்டரில் போட்டு விளம்பரப்படுத்தியது உண்மையா இல்லையா?
11. 2017 ஆம் ஆண்டு மே மாதம் காஷ்மீரில் பாஜக தலைவரான நிரஞ்சன் ஹோஜாய் உள்ளிட்ட 15 பேர் மீது தேசிய புலன்விசாரணை ஆணையத்தின் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டது உண்மையா இல்லையா?
12. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் சவ்ரியா தோவல் பாகிஸ்தானில் உள்ள சையது அலி அப்பாஸுடன் இணைந்து வியாபாரம் செய்வது எப்படி?