Skip to main content

கரிசல் இலக்கியத்தின் மூத்த படைப்பாளி சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது!

Published on 18/12/2019 | Edited on 18/12/2019
d

 

2019ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ்நாடு கோவில்பட்டியைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.   அவர் எழுதிய ‘சூல்’நாவலுக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட சோ.தர்மன், 8.8.1952ல் கோவில்பட்டி தாலுக்காவில் உள்ள கடலையூர் அருகில்  உருளைகுடி கிராமத்தில் பிறந்தவர். விவசாயக்குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தந்தையின் பெயர் சோலையப்பன்.

 

d

 

புதின, சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட ஏழு நூல்களை எழுதியுள்ளார்.

 

1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "கூகை" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

 

கரிசல் இலக்கியத்தின் மூத்த படைப்பாளியான சோ.தர்மன் எண்பதுகளில் எழுதத் தொடங்கியவர். நாட்டார் வாழ்க்கையின் கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களைக் கலாபூர்வமான படைப்புகளாக்கியவர். கூத்துக்கலை, நாடோடிக்கூட்டம் என அருகிவிட்ட எளிய இனங்களைத் தனது படைப்பின்வழி ஆவணப்படுத்தியவர். இவரின் ‘தூர்வை, ‘கூகை, ‘சூல்’ நாவல்களும் பல குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளும்,  வில்லிசை வேந்தர் பிச்சைக்குட்டி குறித்த இவரின் ஆய்வுநூலும் மிக முக்கியமான படைப்பு. 

 

d

 

சூல்:  "தூர்வை', "கூகை' நாவல்களைத் தொடர்ந்து இந்நாவலை எழுதியிருக்கிறார் சோ.தர்மன்.
ரஷியாவின் பிரஷ்னேவ் எழுதிய "தரிசு நில மேம்பாடு' புத்தகத்தில் வரும் ஒரு சம்பவமே நாவலின் கரு என்கிறார்.

 

எட்டயபுரம் அரசாட்சிக்கு உட்பட்டது உருளைப்பட்டி கிராமம். இங்குள்ள கண்மாயை தூர்வாரி மராமத்துப் பணியை கிராமத்தினர் தொடங்குவதிலிருந்து ஆரம்பிக்கிறது இந்த நாவல். கண்மாயின் காவலனாக நீர்பாய்ச்சி, ஊர் பெரிய மனிதர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் என பலதரப்பட்ட மக்கள் வாழ்ந்தாலும் வழக்கம்போல் பிரச்னைகள் சூழ கதைக்களம் பல அத்தியாயங்களுக்கு மேல் நகர்கிறது.

 

மிளகாய், பருத்தியை நேர்த்தியாக சேகரித்து விதைகளாக்கும் பணியும், பிரசித்திப் பெற்ற தேனி, பெரியகுளம், சோழவந்தான், ஆத்தூர் வெற்றிலையைப் போன்று, உருளைக்குடி வெற்றிலையைத் திருத்தி பயிர்செய்வதற்காக மகாலிங்கம் பிள்ளை பகீரத பிரயத்தனம் செய்து கிணறு வெட்டி அந்தக் கிணற்றிலேயே இறந்த நிகழ்வும், தன் நிலத்தில் மேய்ந்த ஆட்டை துப்பாக்கியால் சுட்டு அதனால் ஏற்பட்ட ஊர்ப் பிரச்னையால் பொதுமக்கள் பல மைல் தூரம் சுற்றிச் செல்லும் நிலைமை ஏற்பட்டும் ஒற்றுமையுடன் செயல்பட்ட உருளைக்குடி மக்களின் மனநிலை என பல நிகழ்வுகள்  விவரிக்கப்பட்டுள்ளன.

 

நீர்நிலைகளை நம்பியே விவசாயம், அதை எவ்வாறு பராமரித்து தங்களுக்குச் சாதகமாக்கி கொள்வது என்பதை விவசாயிகள் மட்டுமின்றி, படிப்போருக்கும். சொல்லும் பாங்கில் உள்ள நயமும், அள்ளித் தெளிக்கப்பட்டுள்ள சொலவடைகளும், கிராமத்து நையாண்டிகளும் வாசிப்பவர்களுக்கு இந்த நாவல் நிச்சயம் திருப்தியைத் தரும்.