மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளரும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஒன்றில், "தமிழக மாணவர்கள் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜேஎன்யூ எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் பெரியார் பிறந்த தினம், சட்ட எரிப்பு மாவீரர் தினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சி நடத்தினார்கள். பொதுவாக ஜேஎன்யூ மாணவர் விடுதியில் மாணவர்கள் யார் வேண்டுமானாலும் அவர்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் விழா நடத்தலாம். அதன்படி தமிழக மாணவர்கள் விழா நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் வேறு ஒரு நிகழ்வாக ஹிந்தி பேசக் கூடிய இடதுசாரி மாணவர்கள் ஹிந்தி சினிமாவை திரையிட இருந்தனர். இதை நடக்க விடக்கூடாது என்று ஏபிவிபி என்ற பாஜகவின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் ஹிந்தி படம் திரையிட இருந்த மாணவர்களோடு தான் முதலில் பிரச்சனை செய்தனர். அப்போது தமிழக மாணவர்கள் உடன் பிரச்சனை இல்லை. விழா நடைபெறும் அரங்கத்தில் பெரியார் படம் மாட்டப்பட்டு இருக்கிறது. கார்ல் மார்க்ஸ் படம் மாட்டப்பட்டு இருந்தது. அப்போது இரு தலைவர்களின் படத்தையும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் உடைத்து விட்டார்கள்.
இதனைக் கேள்விப்பட்டு தமிழக மாணவர் நாசர் உள்ளிட்டவர்கள் பெரியார் படத்தை உடைத்தது யார் என்று கேட்ட பிறகு ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நாசரை அடித்திருக்கிறார்கள். இதனைக் கேட்டு வந்த மற்ற தமிழக மாணவர்களின் மண்டையையும் உடைத்திருக்கிறார்கள். மேலும் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெரியாரும் எங்களுக்கு எதிரி தான் எனக் கூறி உள்ளனர். அங்குள்ள மாணவர்களில் முப்பது பேர் தான் தமிழக மாணவர்கள். பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மருத்துவ மையம் உள்ளது. சிகிச்சைக்காக நாசரை அங்கு கூட அழைத்து செல்ல விடவில்லை. மேலும் இங்கே உங்க விழாவை நடத்தக் கூடாது என்று கூறி பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் படங்களை சுக்கு நூறாக உடைத்திருக்கிறார்கள். இதுதான் நடந்த நிகழ்வு. இதனை கேள்விப்பட்டு தான் முதல்வர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு நாளும் இடதுசாரி சிந்தனை உள்ள மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். மார்க்ஸ் சிந்தனை உடையவர்கள், வலதுசாரி கருத்துகளுக்கு எதிராக யாரெல்லாம் பேசுகிறார்களோ, பாஜகவுக்கு எதிராக யார் எல்லாம் பேசுகிறார்களோ அவர்கள் எல்லாம் தாக்கப்படுவது இயல்பாக இருக்கிறது. சத்ரபதி சிவாஜி படம் கிழிக்கப்பட்ட சம்பவத்திற்கும் தமிழக மாணவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு ஹிந்தி பேசக் கூடிய வலது சாரி மற்றும் இடதுசாரி மாணவர்களிடையே தான் பிரச்சனை. ஏற்கனவே தமிழக மாணவர்கள் மூன்று நாட்களாக விழா நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதனை நேரடியாக கேட்க முடியாததால் இவ்வாறு பிரச்சனை செய்து பெரியார் படத்தை உடைத்திருக்கிறார்கள். 2014 இல் இருந்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஒன்றிய அரசாக பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஜேஎன்யூவில் ஏபிவிபி செய்யும் அட்டூழியத்திற்கு முடிவே இல்லை. ஒவ்வொரு வருடமும் இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்படுவது வாடிக்கையாகத் தான் இருக்கிறது.
குடியுரிமை சட்டப் போராட்டத்தின் போது தாக்கப்பட்ட எத்தனையோ பேர் மேல் புகார் அளிக்கப்பட்டது. யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் போராட்டம் செய்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வழக்கை சந்தித்து வருகிறார்கள். அண்ணாமலை, சத்ரபதி சிவாஜி படம் கிழிக்கப்பட்டதால் தான் தமிழக மாணவர்கள் தாக்கப்பட்டதாக பொய்யை சொல்லுகிறார். பெரியார் படமும், கார்ல் மார்க்ஸ் படங்கள் தான் கிழிக்கப்பட்டு இருக்கிறது. தமிழக மாணவர்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாணவர்கள் என்ற பெயரில் குண்டர்கள் தான் தமிழக மாணவர்களை தாக்கி உள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.