ஆன்லைன் ரம்மிக்கு எதிராக மாநில அரசே சட்டம் கொண்டு வரலாம் என்று பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து தன்னுடைய கருத்துகளை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் புதுமடம் ஹலீம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் மத்திய அரசு சரண்டராகி விட்டது. ஆளுநரைக் காப்பாற்ற முடிவு செய்துவிட்டனர். ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட்டம் முதலில் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. ரம்மி கம்பெனிகள் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றபோது, சட்டச்சிக்கல்களை நீக்கிவிட்டு சட்டம் இயற்றலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆன்லைன் ரம்மியை ஒழிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளுமே குரல் கொடுத்தன. அதன் அடிப்படையில் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதற்கான அவசர சட்டத்தை திமுக அரசு உருவாக்கியது.
அவசர சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக அனுமதி கொடுத்தார். அதன்பிறகு சட்ட முன்வடிவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது அரசு. ஆனால் அதற்கு ஆளுநர் அனுமதி அளிக்கவில்லை. ஆளுநர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அரசு பதிலளித்துவிட்டது. ஆனாலும் இன்றும் ஆளுநர் இந்த சட்டத்துக்கு அனுமதி அளிக்க மறுக்கிறார். இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று கூறி ஆளுநர் திருப்பி அனுப்பினார். இப்போது மத்திய அமைச்சர் மாநில அரசுக்கு உரிமை இருக்கிறது என்று பாராளுமன்றத்தில் கூறிவிட்டார்.
ஆளுநர் செய்தது தவறு என்பதை மத்திய அரசே இப்போது கூறிவிட்டது. அரசியலமைப்பு சட்டத்தின்படி இரண்டாவது முறை சட்டம் இயற்றி அரசு அனுப்பி வைத்தால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துத்தான் ஆக வேண்டும். ஆன்லைன் ரம்மியால் இவ்வளவு தற்கொலைகள் நடந்த பிறகும் ஆளுநர் அனுமதி அளிக்காமல் இருக்கிறார். மத்திய அரசும் ஜனாதிபதியும் ஆளுநருக்கு எந்த அறிவுரையும் வழங்கவில்லை. ஆனால், அனைத்து விஷயங்களிலும் மத்திய அரசுதான் ஆளுநரை இயக்கி வருகிறது.
மத்திய அரசு கைவிரித்து விட்டதால் இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. இதுவரை பல மாநிலங்களில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசே கூறுகிறது. சட்டமே தெரியாத ஒரு ஆளுநர் நமக்குத் தேவையா? இந்நேரம் இதில் ஜனாதிபதி தலையிட்டு ஆளுநரைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இப்போது தமிழ்நாடு அரசு மீண்டும் அதே சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்ப வேண்டும். ஆளுநர் அதில் கையெழுத்திட்டே ஆக வேண்டும். அவர் அதைச் செய்யவில்லை என்றால் உச்சநீதிமன்றம் மூலம் இந்தச் சட்டம் நிறைவேறும். அது ஆளுநரின் பதவிக்கே ஆபத்தாக முடியலாம்.