உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 200-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 7000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பேராசிரியர் சுந்தரவள்ளி நம்முடைய கேள்விகளுக்குப் பதிலளித்தார். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,
தமிழகத்தில் தங்கியிருக்கும் வெளிமாநில ஊழியர்களுக்குச் சரியான முறையில் நிவாரணம் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறதே?
தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள்? தமிழ்நாட்டில் இருக்கின்ற திருநங்கைகளுக்கு என்ன செய்தீர்கள்? தெரு ஓரத்தில் இருக்கின்ற நவீன சேரிகளில் வாழும் மக்களுக்கு இதுவரை என்ன செய்தீர்கள்? மக்களை நடமாடாதீர்கள் என்று சொல்லும் நீங்கள் சட்டமன்றத்தை நடத்துகிறீர்கள், நாடாளுமன்றத்தை நடத்துகின்றீர்கள், சட்ட திட்டம் எல்லாம் மக்களுக்கு மட்டும் தானே? மசூதியில் போய் அடிச்சி இருக்கீங்க, ஊரடங்கின் போது 3000 பேரு ராமர் கோயிலுக்காக பூஜை போட்ட போது அடிச்சீங்களா, 'கோ' கரோனா என்று கோஷம் போட்டுக்கொண்டே ஊர்வலம் போனவர்களை அடித்தீர்களா? இல்லை, அம்மன் கோயிலுக்கு கூழ் உற்றும்போது அடிப்பீங்களா? ஏன் அதையெல்லாம் செய்ய மாட்டேன் என்கிறீர்கள். சீல் வைக்கிறீர்களே யார் கடைக்கு வைக்கிறீர்கள், மட்டன் கடைகளுக்கு சீல் வைக்கின்றீர்கள், அங்கே யார் உரிமையாளர் என்ற கேள்வி வருகிறதே. கறிக்கடைக்கு முன் மக்கள் கூட்டமாகக் கூடும் போது கடைக்காரர் என்ன செய்ய முடியும்.
ரேஷன் கடைகளுக்கு முன்பு மக்கள் கூட்டமாக கூடினார்களே, அப்போது சீல் வைக்க வேண்டியது தானே? 5 மாதத்துக்கு அரசி கொடுக்க முடியாது என்று சொல்ல வேண்டியதுதானே, ஏன் சொல்லவில்லை. மக்களைக் காப்பாற்ற வக்கில்லாத மத்திய மாநில அரசுகளால் மக்கள் வீட்டில் இருந்து வெளியே வருகிறார்கள், அவர்களைக் காப்பாற்ற மருத்துவர்களும், காவலர்களும் வெளியே நிற்கிறார்கள். இதுதான் தற்போதைய கள எதார்த்தம். இவர்கள் மீது எங்களுக்கு எந்த கோவமும் இல்லை. அரசு திட்டமிடல் சரியில்லை. இன்னமும் அரசு சரியான திட்டமிடலுடன் நடக்கவில்லை என்பதே எங்களின் அடிப்படை குற்றச்சாட்டு. 1000 ரூபாய் கொடுக்கிறேன் என்ற போர்வையில் ஆயிரக்கணக்காண மக்களை ரேஷன் கடைகளில் கூட வைத்துள்ளீர்கள். பணத்தை அவர்களின் வீடுகளுக்குச் சென்று கொடுங்கள் என்பதே எங்களின் கோரிக்கை. ஆனால் அதனை நாங்கள் செய்ய மாட்டோம் என்று அரசு சொல்கிறது.
உலகம், இந்தக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அந்த எண்ணிக்கை உயர்ந்துகொண்டு வருகிறது. தமிழகத்தில் நாம் இன்னும் இரண்டாம் கட்டத்தில் தான் இருக்கிறோம் என்பதற்காக தமிழக அரசை நாம் பாராட்ட வேண்டாமா?
அரசாங்கம் ஒரு பொய்யான கணக்கை சொல்வதாகத்தான் நினைக்க வேண்டியுள்ளது. அப்படி இல்லை என்றால் ஏன் இவ்வளவு தெருக்களை முடக்கி வைத்திருக்க போகிறீர்கள். மக்களுக்கு இந்த ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை என்பதே நிஜம். திடீரென அவர்களை வீட்டிற்குள் அடைத்து வைத்ததால் அவர்களுக்கு என்னவென்றே புரியாமல் முழிக்கிறார்கள். மக்களைக் காப்பாற்றிக்கொள்ள எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. உங்களைக் காப்பாற்றிக்கொள்ள நாடகம் ஆடுகிறீர்கள். மக்களைக் காவு கொடுத்து வருகிறார்கள். இல்லை என்றால் இத்தனை பேர் எப்படிச் சாக முடியும்.