அரசுப் பணி என்பதே அறப்பணிதான். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில், சேவை மனப்பான்மையுடன் எத்தனையோ அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்களின் பங்களிப்பு மகத்தானவை. அதே நேரத்தில், ‘எங்கே கரோனா தங்களை தாக்கிவிடுமோ?’ என்ற பயத்தில், கடமையை நிறைவேற்றாமல் ‘டிமிக்கி’ கொடுக்கும் அரசு ஊழியர்களும் இருக்கவே செய்கின்றனர். சிறைத்துறை வட்டாரத்தில் ‘மிகவும் நேர்மையானவர்’ என்று பெயர் எடுத்திருக்கும் சரவணகுமாரை ‘ஏனோ’ இந்த ரகத்தில் சேர்த்துவிட்டார்கள்.
புழல்-1 மத்திய சிறையின் முதல் தலைமைக் காவலரான சரவணகுமார், இந்திய அரசு மற்றும் தமிழக அரசுகளால் வகுக்கப்பட்ட வழிமுறை மற்றும் நெறிமுறைகளுக்கு எதிராக, இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டனை வழங்கக்கூடிய ஒரு குற்றமுறு செயலை செய்ததாக, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக அவர் துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளானார் தெரியுமா?
சிறைத்துறை பணியானது அத்தியாவசிய பணி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டு சிறைவாசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள பார்ஸ்டல் பள்ளியில், சரவணகுமாரை பாதுகாவல் பணிக்கு நியமித்தனர். உடனே அவர், “அங்கெல்லாம் என்னால் வேலை பார்க்க முடியாது. வெளிநாட்டு சிறைவாசிகளில் 3 பேருக்கு கரோனா தொற்றுநோய் பாசிட்டிவாக இருப்பது எனக்கு தெரியும். டாக்டர்கள் நன்கு சோதிக்காமல், கரோனா பாசிட்டிவ் சிறைவாசிகளுக்கு நெகட்டிவ் சான்று அளித்ததால், அவர்கள் பார்ஸ்டல் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளனர். அதனால், பணிக்கு வராமல் நின்று கொள்கிறேன்.” என்று உயர் அதிகாரிகளின் கட்டளைக்கு கீழ்படியாமல், எவ்வித முன் அனுமதியும் பெறாமல் சென்றுவிட்டார். மேலும் அவர், தன்னுடன் பணிபுரியும் இதர களப்பணியாளர்களிடம், ஆதாரமற்ற இத்தகவலை பரப்பி, அவர்களையும் பணிக்குச் செல்லவிடாமல் தூண்டியிருக்கிறார். இதனாலேயே, சரவணகுமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவணப்படுத்தி உள்ளது சிறைத்துறை.
புழல் சிறையில் கரோனா வதந்தி பரவியது ஏன்?
தமிழ்நாட்டில் மத பிரசாரத்தில் ஈடுபட்டார்கள் என, அமெரிக்கா, சீனா, எத்தியோப்பியா, இந்தோனேசியா, வங்கதேசம், மலேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் பிரிட்டன் நாடுகளை சேர்ந்த 129 பேர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு, புழல் சிறை வளாகத்திலுள்ள பார்ஸ்டல் பள்ளியில் அடைக்கப்பட்டனர். இவர்களை, பார்ஸ்டல் பள்ளியில் 21 நாட்கள் தனிமைப்படுத்திய பிறகே, மத்திய சிறைக்கு மாற்றுவதாக திட்டமிட்டிருந்தார்கள்.
வெளிநாட்டை சேர்ந்த 32 ஆண்களும் 8 பெண்களும் ஒன்றாக தங்க வைக்கப்பட்டிருந்த பார்ஸ்டல் பள்ளியில் அன்று பணியில் இருந்தார் சரவணகுமார். ஆண் வார்டன்களும், பெண் வார்டன்களும் அங்கு பணி செய்தனர். சிறை விதிகளின்படி ஆண், பெண் கைதிகளை ஒரே இடத்தில் அடைப்பதோ, ஆண், பெண் வார்டன்களை ஒன்றாக பணிபுரிய வைப்பதோ கூடாது. வெளிநாட்டினர் பெரும்பாலானோருக்கு கரோனா இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. முறையான ‘கிட்’ வைத்தெல்லாம் அன்றைக்கு வெளிநாட்டு சிறைவாசிகளை சோதனையிடவில்லை. காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருக்கிறதா என்று மட்டுமே பார்த்தார்கள்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த மூத்த விஞ்ஞானி ஒருவர், இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு முதலில் எந்த அறிகுறியுமே வெளிப்படவில்லை என்று கூறியிருக்கிறார். சிறைகளில் பணிபுரிபவர்களுக்கு மாஸ்க், கையுறை போன்ற எந்த பாதுகாப்பு உபகரணமும் தரப்படவில்லை. இந்த நிலையில்தான், ‘நான் இங்கு வேலை பார்க்கமாட்டேன். வேண்டுமானால் மருத்துவ விடுமுறை எடுத்துக்கொள்கிறேன்’ என்று கூறிவிட்டு கிளம்பினார் சரவணகுமார். அவர் நேர்மையானவர் என்பதால், இதுதான் தருணம் என்று, அவருடைய வீட்டுக்கே போய் ‘சஸ்பென்ட் ஆர்டர்’ கொடுத்துவிட்டார் ஜெயிலர்.
அதன்பிறகு என்ன நடந்தது? சரவணகுமார் சந்தேகப்பட்ட மாதிரியே, வெளிநாட்டு சிறைவாசிகளில் 10 பேருக்கு கரோனா அறிகுறி ஏற்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அவர்களில் மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மீதி 7 பேர் அதே ஸ்டான்லி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ‘எஸ்கார்ட்’ ஆக அவர்களை அழைத்துச்சென்ற ஜெயில் வார்டன்கள் 6 பேரையும் தற்போது தனிமைப்படுத்தி வைத்திருக்கின்றனர். தமிழகத்தில் உள்ள சிறைகளில் அங்கு பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. உணவுப்படி விஷயத்திலும் சிறைத்துறையினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர்.
சிறைத்துறையோ, ‘உரிய வழிகாட்டுதலின்படி, சிறைகளில் மருத்துவர்களால் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நோய்தொற்று எதுவும் இல்லை என்று சான்றளித்த பிறகே, புதிய சிறைவாசிகளை பார்ஸ்டல் பள்ளியில் அடைத்தோம். ஆனாலும், கரோனா வதந்தி பரப்பிவிட்டார் சரவணகுமார்..’ என்று குற்றம் சாட்டி, அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
கரோனா பரவலை போலவே, இந்த வதந்தியும் புழல் சிறையை நடுங்க வைத்திருக்கிறது.