தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனியார் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் சில...
எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் நிதிஷ்குமாரின் பங்களிப்பு எத்தகையதாக இருக்கும்?
ஒன்றிய அமைச்சராக இருந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுடன் நீண்ட காலத் தொடர்புள்ளவர் நிதிஷ்குமார். அமைதியாக, அதே நேரத்தில் உறுதியாக இந்த அணிசேர்க்கையை நடத்திக் காட்டுவார் என நம்புகிறேன்.
நிதிஷ்குமாருக்கு இது தொடர்பாக தாங்கள் கூறும் ஆலோசனைகள் என்ன?
எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சித் தலைமையுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதி பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம். அதுவும் முடியவில்லை என்றால் பொது வேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம். தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்தபட்ச செயல்திட்டம் வகுக்கப்பட வேண்டும். இது போன்று எழும் பிரச்சனைகளை சரி செய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை குழு அமைக்கப்பட வேண்டும் என்று வரிசையாகச் சொல்லி இருக்கிறேன்.
இந்த முயற்சிகளில் மம்தா பானர்ஜி பங்காற்றுவாரா? மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளும் காங்கிரஸும் அவருக்கு ஆதரவாக இல்லை என்ற நிலை உள்ளதே?
முரண்பாடுகள் என்பவை மேற்கு வங்கத்தைப் பொறுத்தவை ஆகும். நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் இந்தியாவை நினைத்தே மம்தா முடிவெடுத்து பாட்னா கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். அந்த கூட்டத்தில் நீங்கள் சொல்லும் காங்கிரஸும் இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இருந்தது. மம்தாவும் இருந்தார்.
நீங்கள் எல்லாரும் ஒன்றிணைந்தால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்று நினைக்கிறீர்களா?
உறுதியாக. நாங்கள் நினைக்கும் அணிசேர்க்கை அமைந்தால் நிச்சயமாக பா.ஜ.க.வின் மக்கள் விரோத ஆட்சி வீழ்த்தப்படும்.
காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் அந்தந்த மாநிலங்களில் வலுவாக உள்ள மாநிலக் கட்சிகளுடன் தாராளப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா?
நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலங்களில் வலுவான கட்சிகள் இருந்தாலும், அகில இந்திய முகம் ஒன்று தேவை. அதுதான் காங்கிரஸ் கட்சி. அதற்கான தகுதியும் மதிப்பும் வழங்கப்பட வேண்டும்.
இந்திய ஒற்றுமைப் பயணத்திற்குப் பின் ராகுல் காந்தியிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?
ராகுல் காந்தியின் பயணம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. அவர் இந்தியாவின் நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறார்.
ஒன்றிய அளவில் பா.ஜ.க ஆட்சி தொடர்ந்தால் அதன் தாக்கம் எவ்வாறானதாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
மீண்டும் இவர்கள் வென்றால் இந்தியா இந்தியாவாக இருக்காது.
பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் நீங்கள் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தியையும் சந்தித்தீர்கள். பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின்பு அங்கு நிலவும் சூழ்நிலையைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
காஷ்மீரில் இப்போது இருப்பது உண்மையான அமைதி அல்ல. கையையும் காலையும் கட்டிப் போட்டு வாயைப் பொத்திவிட்டு ஒருவன் அமைதியாக இருக்கிறான் என்பதைப் போன்ற அமைதிதான் அது. 370வது பிரிவை நீக்கியது பா.ஜ.க.வின் சாதனையல்ல. சிறுபான்மை மக்கள் மனதில் இடப்பட்ட கீறல் ஆகும்.
வடக்கு, தெற்கு என்ற வேறுபாடு மேலும் அதிகமாகியிருக்கிறதா? அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வென்றால் பா.ஜ.க மக்களவை தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ளுமா?
மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தை முறையாகப் பின்பற்றிய தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு தண்டனை தரத்தக்க வகையில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். மக்கள் தொகை கட்டுப்பாடு திட்டத்தைச் சரியாக அமல்படுத்தாத வட மாநிலங்களுக்கு நிறைய மக்களவைத் தொகுதிகள் கிடைக்கும். தங்களுக்கு வாக்களிக்காத தென் மாநிலங்களைப் பழிவாங்க இந்தத் திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறார்கள். தென் மாநிலங்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்படும். ஏற்கனவே ஜி.எஸ்.டி மூலமாக மாநிலத்தின் நிதி ஆதாரங்களை முழுமையாகப் பறித்துவிட்டார்கள். கல்வி உரிமையும் பறிபோய்விட்டது. எவ்வளவுதான் முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாடு செழித்தாலும் எங்கள் சம்பாத்தியம் அனைத்தையும் ஒன்றிய அரசு பறித்துவிடும். இதனை சொல்வதற்கான ஒரே இடம் நாடாளுமன்றம் தான். அங்கும் நமது குரல் எடுபடாமல் போகுமானால் என்ன செய்ய முடியும்? எனவே இதற்கான மாற்று ஏற்பாட்டை அனைத்து மாநிலக் கட்சிகளுடன் இணைந்து சிந்திக்க வேண்டும்.
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு மாநிலங்களிலும் புகார் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அத்தகைய சூழல் நிலவுகிறதே?
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ரவி விடுத்த அறிக்கையானது அரசியலமைப்பு நெறிமுறைகளை மீறுவதாகும். அவருக்கான வேலைகளை மட்டும் அவர் பார்க்க வேண்டும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கு கையெழுத்து போடாமல் வைத்துள்ளார். அதனைப் போட்டு அனுப்ப வேண்டும். அதை விட்டு தனக்கு உரிமையில்லாத செய்கைகளில் மூக்கை நுழைத்து மூக்கறுபட்டுக் கொண்டு இருக்கிறார் ஆளுநர். இந்த பதவியை நீக்கிவிடுவது தான் ஒரே வழி.
மக்களுக்கான நலத்திட்டங்களை வழங்கத் தொடங்கிய முன்னோடி மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. பிரதமர் மோடி இதை ‘இலவசக் கலாசாரம்’ என்றும் ‘இது பொருளாதாரத்தைப் பாதிக்கிறது’ என்றும் கூறுகிறாரே?
2 கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று வாக்குறுதி கொடுத்தது குஜராத் பா.ஜ.க. மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசம் என்று சொல்லி வாக்கு கேட்டது கர்நாடகா பா.ஜ.க.. ஆனால், பிரதமர் மோடி இலவசங்களுக்கு எதிராகப் பேசுகிறார். இந்த மாநில பா.ஜ.க எல்லாம் அவரது கட்டுப்பாட்டில் இல்லையா?. வறுமையும் மக்கள் தொகையும் அதிகமாக உள்ள நாட்டில் இலவசங்கள் தவிர்க்க முடியாதவை ஆகும். இதனை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டுள்ளது. ஏழை மக்களுக்கு தருவதை குறை சொல்லும் பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில்தான் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இது இலவசமா சலுகையா உதவியா கைமாறா?
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டின் வலிமைக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய சூழ்நிலை மற்றும் கோவிட் பெருந்தொற்று காரணமாக இவை பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதை எப்படி சரிசெய்யப் போகிறீர்கள்?
கடந்த ஆட்சியில் எம்.எஸ்.எம்.இ. துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ. 607.60 கோடி இருந்த நிலையில் எங்கள் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2021-22 ஆம் ஆண்டில் ரூ. 741.96 கோடியாகவும் 2022-23 ஆம் ஆண்டில் ரூ. 1025.10 கோடியாகவும் இந்த நிதியாண்டான 2023-24 ஆம் ஆண்டில் ரூ. 1502.11 கோடியாகவும் உயர்த்தி வழங்கியுள்ளோம்.
எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையேயான வேறுபாடு என்ன?
இரண்டுமே மக்கள் பணி தான். எதிர்க்கட்சி தலைவராக வாதாடினேன். முதல்வராக கையெழுத்துப் போட்டு நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டுகிறேன்.
காந்தி குடும்பத்தை குறிவைத்து வாரிசு அரசியல் என்று பிரதமர் மோடி விமர்சிக்கிறார். இதில் நியாயம் இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா?
இதெல்லாம் முப்பது ஆண்டுகளாக கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன குற்றச்சாட்டுகள். வேறு புதிதாக எதையாவது சிந்தித்துச் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.