தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துகளை நம் முன் மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா எடுத்து வைக்கிறார்.
தமிழக ஆளுநர் மிகவும் தவறான ஒரு காரியத்தை செய்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு அமைச்சர் அந்தப் பதவியில் தொடராமல் இருக்கலாம் என்று யோசனை சொல்வதற்கு ஆளுநருக்கு உரிமை உண்டு. ஆனால் அவரால் முடிவெடுக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு பதிலாக வேறு ஒரு யோக்கியனே இல்லையா? அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்தவரே இப்போதைய முதலமைச்சர் தான்.
வாங்கிய லஞ்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார் என்று செந்தில் பாலாஜியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. அதன்பிறகு உச்சநீதிமன்றம் உள்ளே நுழைந்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அமலாக்கத்துறை மீது எந்தத் தவறும் இல்லை. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வெட்கமில்லாமல் செந்தில் பாலாஜியை ஆதரிக்கின்றன. நீங்கள் மோடி எதிர்ப்பு இயக்கமா அல்லது ஊழல் பாதுகாப்பு இயக்கமா? முன்யோசனை இல்லாமல் ஒரு விஷயத்தை செய்பவரை அரை லூசு என்பார்கள். அப்படியான ஒரு காரியத்தை ஆளுநர் செய்துள்ளார்.
தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ஒரு அமைச்சரை அவர் நீக்கம் செய்தது கேவலமான விஷயம். சனாதனம் பேசியே தமிழ்நாட்டு மக்களிடம் இந்த ஆளுநர் பாஜகவை ஒழித்துக் கட்டிவிட்டார். இதுபோல் பேசினால் பாஜக வளரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது கவிழும். சவாரி செய்வதற்கு அதிமுக என்கிற குதிரை மட்டும் பாஜகவுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், தமிழ்நாட்டு அரசியலில் ஒன்றுமே இல்லாதவர்களாக அவர்கள் இன்று இருந்திருப்பார்கள்.
தாங்கள் செய்த ஊழல் காரணமாக, பிடிக்கவில்லை என்றாலும் பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. பாஜக எதற்கும் வெட்கப்படக்கூடிய கட்சி அல்ல. அது ஒரு பாசிச கட்சி. மத்தியில் ஆட்சி மாறும் வரை ரவி தான் இங்கு ஆளுநராக இருப்பார். திருவள்ளுவர் முதல் வள்ளலார் வரை இந்த ஆளுநர் இழிவுபடுத்தாத ஆளே இல்லை. இங்கு ஆட்சிக்கு வரமுடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்கலாம் என்றுதான் பார்ப்பார்கள். கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜிக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவது சரியல்ல.