Skip to main content

கறுப்பர் ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடிய நெல்சன் மண்டேலா...

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

1918-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதியன்று கறுப்பு இனப்பெற்றோர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்தார், நெல்சன் மண்டேலா. அவருடைய பெயர் மண்டேலா என்றாலும், ஆரம்பப் பள்ளியில் படிக்கின்றபோது அவருடைய பெயருக்கு முன்னால் நெல்சன் என்கிற பெயரையும் சேர்த்தார், அவரது   பள்ளி ஆசிரியை.
 

nelson

 

 

 

 

மண்டேலாவின் இளமைப் பருவ வாழ்க்கை அமைதி யாகவே கரைந்தது. கிராமத்தில் ஆடு மாடுகள் மேய்ப்பதிலும் வேறு சிறிய சிறிய கிராம வேலைகள்  செய்வதிலும் ஈடுபட்டிருந்தார். அவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்த பிறகு, உறவினர் ஒருவரின் பாதுகாப்பில் மண்டேலா வளர்ந் தார். கிறிஸ்துவ பாதிரிமார்கள் நடத்திய கல்லூரியில் கல்வி பயின்று கொண்டிருந்தபோது வெள்ளையர்களின் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக மாணவர்கள் நடத்திய கிளர்ச்சியில் மண்டேலாவும் பங்கேற்றார். அன்று அவர் ஆரம்பித்த நிறவெறி ஆதிக்க எதிர்ப்புப் பயணம், அவருடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

 

தந்தை அவருக்குத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தபோது மண்டேலா யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடினார். ஜோஹன்ஸ்பர்க்கில் உள்ள வழக்கறி ஞர்கள் நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் இனவெறி ஒதுக்கல் கொள்கையால் கறுப்பு இனத்தவர் எவ்வளவு மோசமான இழிவுகளையும் அவமானங் களையும் தாங்க வேண்டியிருக்கிறது என்பதை அனுபவபூர்வ மாக உணர்ந்தார். கறுப்பர்கள் மனிதர்களாகவே கருதப்பட வில்லை. அதனால் மனபாதிப்புக்குள்ளான மண்டேலா வக்கீல் தொழில் புரிந்து வெற்றி பெறுவதைவிட இனவெறிக் கொள்கைக்கு எதிராக போராடி தியாகங்களைச் செய்வது  மேலானது என்கிற முடிவுக்கு வந்தார்.
 

nelson young

 

 

 

 

 

ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் இளைஞர் பிரிவில் தன்னை ஒரு உறுப்பினராக பதிவு செய்து கொண்டார். கறுப்பு இன மக்களுக்கு எதிரான சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற அமைதியான அறவழிப்போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். கோபமடைந்த அரசு, மண்டேலா உட்பட பல தலைவர்களை கைதுசெய்து வழக்குப் போட்டது. ஐந்து ஆண்டுகள் வழக்கு நீடித்தது. 1961-ல் குற்றம் சாட்டப்பட்ட 156 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.

 

இதற்கிடையில் 1960-ல் ஷார்ப்பிவில்லி என்கிற இடத்தில் அமைதியாகப் போராட்டம் நடத்திய கறுப்பர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. அரசோ எதிர்ப்பாளர்கள் அனைவரையும் அழித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்தது. புரட்சிக்காரர் மண்டேலா ஓராண்டு தலைமறைவாகி வெளிநாடுகளில் பயணம் செய்து ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார்.

nelson mandela


திரும்பி வந்தவுடன் அவர் கைது செய்யப்பட்டு ஐந்து ஆண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டு ரோபென் தீவில்  காவலில் வைக்கப்பட்டார். சில மாதங்களிலேயே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். அநேகமாக மண்டேலா உட்பட அனைத்துத் தலைவர்களுக்கும் மரண தண்டனை விதிப்பது என்கிற முடிவுக்கு அரசு வந்தது.

 

ஆனால் நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டிலிருந்து மண்டேலா பேசிய வாசகங்கள், "என்னுடைய வாழ்நாளை ஆப்பிரிக்க மக்களின் போராட்டத்திற்கு அர்ப்பணிக்க நான் முடிவு செய்துவிட்டேன். வெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராக மட்டுமல்ல; கறுப்பர் ஆதிக்கத்துக்கு எதிராகவும் நான் போராடியிருக்கிறேன். ஒரு ஜனநாயக அமைப்பில் சுதந்திரமான ஒரு சமுதாயத்தில் எல்லா மக்களும் வேறுபாடின்றி சமவாய்ப்புடன் ஒற்றுமையாக வாழவேண்டும் என்கிற லட்சியத்தை நான் போற்றிப் பாதுகாத்து வந்திருக்கிறேன். இந்த லட்சியத்துக்காகவே வாழ்ந்து அதை அடைய முடியும் என்கிற நம்பிக்கையுடனும் நான் இருக்கிறேன். தேவைப்பட்டால் அந்த லட்சியத்துக்காக உயிரைத் தரவும் நான் தயாராக இருக்கிறேன்.''

 

அவருடைய இந்த வாக்குமூலம் தென்னாப்பிரிக்காவில் உள்ள அனைத்து இல்லங்களிலும் கிராமத்துக் குடிசைகளிலும் தேநீர் கடைகளிலும்  எல்லா தரப்பு மக்களிடமும் பெரிய எழுச்சியினை ஏற்படுத்தியது.