Skip to main content

கற்புக்கு ஒரு கோயில்! 101 வயது காந்தியவாதியின் பெருங்கனவு!!

Published on 14/01/2021 | Edited on 14/01/2021

 

namakkal kaliyannan political journey

 

தமிழ்நாட்டில் கண்ணகிக்கு கோட்டம் எழுப்பி, கற்புக்கென ஒரு கோயில் கட்ட வேண்டும் என்ற பெருங்கனவுடன் 101வது பிறந்த நாளை வெற்றிகரமாக கொண்டாடியிருக்கிறார் மூத்த காந்தியவாதியும், சுதந்திர போராட்டத் தியாகியுமான டி.எம்.காளியண்ணன். 

 

பொதுவாழ்வில் ஒருவர் எளிமையாகவும், நேர்மையாகவும் இருக்கிறார் என்றால் ஒன்று அவர் காங்கிரஸ்காரராக இருப்பார்; அல்லது பொதுவுடைமைக் கட்சித் தோழராக இருப்பார். இதுதான் இந்தியாவில் 70கள் வரையிலான அரசியலார் பற்றிய பொதுவான அபிமானம். எல்லா வசதி வாய்ப்புகள் இருந்தும் மாறாத எளிமையும், சமூகத்தின் மீதான பற்றுதலும் கொஞ்சமும் குறையாதவராக ஒருவர் இருக்கிறார் என்றால் அவர்தான் டி.எம்.காளியண்ணன் (101). நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிஹெச்பி காலனியில் வசிக்கிறார். மனைவி, பார்வதி (90).

 

ஜன. 10ம் தேதி, அவருடைய 101வது பிறந்த நாளை குடும்பத்தினர், சுற்றமும் நட்பும் சூழ கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இரண்டு மகன்கள்; மூன்று மகள்கள்; 16 பேரன் பேத்திகள்; 8 கொள்ளுப்பேரன் பேத்திகள் என ஆலமரமாய் விழுதுவிட்டிருக்கிறார். அவருக்கு வாழ்த்துச் சொன்னவர்களில் முக்கியமானவர்களுள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் குறிப்பிடத்தக்கவர்கள். உள்ளூர் அரசியல் பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள் என பலரும் நேரில் வாழ்த்தி, அவரிடம் ஆசிகளையும் பெற்றுச் சென்றனர்.

 

namakkal kaliyannan political journey

 

முக்கிய பிரமுகர்கள் பலரும் தள்ளாத வயதில் இருக்கும் ஒருவரை நேரிலும், அலைபேசியிலும் வாழ்த்துவதும், ஆசி பெறுவதுமான அளவுக்கு அவர் அத்தனை பெரிய நபரா என்றால், ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர், ஆள் அல்ல; ஆளுமை. 

 

முதுபெரும் சுதந்திரப்போராட்டத் தியாகி, பழுத்த காங்கிரஸ்வாதி, தேசப்பிதா காந்தி, கர்ம வீரர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெரியவர் பக்தவச்சலம் ஆகியோருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுவதற்கு முன்பே சேலம், தர்மபுரி, நாமக்கல், ஓசூர், ஆந்திரா வரை 2000 பள்ளிகளைத் திறந்தவர். வீடுகளில் எங்கெல்லாம் திண்ணைகள் தெரிந்தனவோ அங்கெல்லாம் திண்ணைப் பள்ளிகளைத் திறந்து வைத்திருக்கிறார் பெரியவர் காளியண்ணன். 

 

''பள்ளிக்கூடம் நடத்தணும். கொஞ்சம் உங்க வீட்டு திண்ணை கிடைக்கும்களா...? என்று அவர் கேட்டால், ஊர்க்காரர்கள் பலரும் அதுக்கென்னாங்ணா... நீங்க கேட்டா இல்லைனு சொல்ல முடியுமாங்ணா...,'' என்று தாராளமாக தங்கள் வீட்டுத் திண்ணைகளில் பள்ளிக்கூடம் நடத்திக்கொள்ள அனுமதித்திருக்கிறார்கள். 

 

சாமானிய மக்களிடம் இருந்த இத்தகைய பொதுச்சிந்தனைதான், இப்போது திண்ணைகள் இல்லாத வீடுகளாக சுருங்கிப் போயிருக்கின்றன. சமூகம் மாசடைந்து விட்டதன் குறியீடு இதுவோ.  

 

பட்டினியும், வறுமையும் ஒருவனை புரட்சிக்காரனாக்கி விடும். ஆனால், காளியண்ணனின் குடும்பப் பின்னணி அப்படியானது அல்ல. திருச்செங்கோடு கஸ்தூரிப்பட்டி, போக்கம்பாளையம் ஜமீன்தார் குடும்பம் இவருடையது. பிறக்கும்போதே தங்கக்கரண்டியுடன் பிறந்த ஒருவர் போராளியானதற்கு முழுமுதல் காரணம், செம்மொழித்தமிழ் மீது கொண்டிருந்த அளப்பரிய பற்றுதான். 

 

namakkal kaliyannan political journey

 

''எங்கள் தாத்தா அந்தக்காலத்திலேயே எம்.ஏ., பொருளாதாரம், பி.காம்., படித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, 300 மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஜில்லா மாணவர்கள் சங்கம் என்ற அமைப்பை தொடங்கினார். வாரந்தோறும் சுதந்திர போராட்ட வீரர்களை அழைத்து வந்து பேச வைத்தார். அப்போது, இந்திய சுதந்திர போராட்டம் வேகமாக எழுச்சி அடைந்த நேரம். ஆங்கிலேயரின் கடும் கண்காணிப்புகளையும் மீறி கல்லூரி விடுதியில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதனால் கடுப்பாகிப் போன கல்லூரி நிர்வாகம், தாத்தா காளியண்ணன் உள்பட 8 பேரை கல்லூரியை விட்டு நீக்கியது. 

 

கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார். இதுகுறித்து காந்தியிடம் சொல்வதற்காக அவர் சபர்மதி ஆசிரமத்துக்குப் போனார். காந்தியிடம் நடந்த விவரங்களைச் சொல்லி முறையிட்டார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட அவர், பதில் எதுவும் சொல்லவில்லை. பத்து நாள்கள் தன்னுடன் தங்குமாறு மட்டும் சொல்லியிருக்கிறார். தினமும் பஜனை, தியானம், யோகானு எல்லாத்துலயும் கலந்துக்கிட்டார். ஆசிரமத்தை சுத்தம் செய்யும் பணிகளையும் செய்து வந்தார். 

 

கடைசி நாளன்று தாத்தாவிடம், 'போய் படிக்கிற வேலைய மட்டும் பாருங்க. கல்வியை வீணடித்துக் கொள்ள வேண்டாம். படிப்பை முடித்துவிட்டு அரசியல் போராட்டத்தில் முழுமூச்சாக களம் காணுங்கள்,' என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். அதன்பிறகு சென்னை மாகாணத்திற்கு திரும்பிய தாத்தா, பின்னர் பச்சையப்பன்  கல்லூரியில் படிப்பை தொடர்ந்தார்.

 

காந்தியுடன் ஆசிரமத்தில் தங்கியிருந்தபோது, அங்கே ஒரு பாம்புக்கு தினமும் பால் வார்த்து பராமரித்து வந்தனர். ஒருவேளை, தனக்கு எதுவும் ஆகிவிட்டாலும்கூட அந்தப் பாம்பை அடித்துக் கொன்று விடாமல் அதன் ஆயுள் முழுக்க பராமரிக்க வேண்டும் என்று சபர்மதி ஊழியர்களிடம் காந்தி சொன்னதாக தாத்தா அறிந்திருந்தார். எந்த ஒரு ஜீவனுக்கும் சிறு தீங்கும் நினைக்காத காந்தியின் வாழ்வியல் முறை தாத்தாவுக்கு முழுவதும் பிடித்துப் போனது. அப்போது முதல் காந்திய சிந்தனைகளில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்,'' என்கிறார் கால்நடை மருத்துவரும், அவருடைய பேரனுமான செந்தில். 

 

namakkal kaliyannan political journey

 

பல்வேறு அறிவுஜீவிகள் அங்கம் வகித்த இந்திய அரசியல் நிர்ணய சபையில் இருந்த உறுப்பினர்களுள் வயதில் மிக இளையவர் காளியண்ணன்தான். அப்போது அவருக்கு வயது 28. அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு முதன்முதலில் தற்காலிக பாராளுமன்றம் அமைக்கப்பட்டபோதும் அவர், உறுப்பினராக இருந்திருக்கிறார். பின்னர், 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஆ ஆக தமிழக சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைத்தார். அதன்பிறகு, திருச்செங்கோடு தொகுதியில் இருந்து 1957, 1962 தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனவர், 1967ல் எம்எல்சி ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடையில் ஒருமுறை ஒருங்கிணைந்த சேலம் ஜில்லா போர்டு தலைவராகவும் இருந்திருக்கிறார்.

 

காமராஜருடன் தனக்கு இருந்த நட்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர். அதனால்தான் அவரை அணுகி, அன்றைய காலக்கட்டத்திலேயே ஒருங்கிணைந்த சேலம் ஜில்லாவிற்கு 2000 பள்ளிக்கூடங்களை திறந்திருக்கிறார். வெறும் பள்ளிப்படிப்புடன் பிள்ளைகள் நின்று விடக்கூடாது; உலக அறிவையும் வளர்த்துக் கொள்ள 300 நகரும் நூலகங்களையும் கொண்டு வந்திருக்கிறார். இப்போதும் பொது நூலகத்துறையில் அமலில் உள்ள மொபைல் லைப்ரரி கான்செப்ட், காளியண்ணன் உடையதுதான். மேட்டூர் - பவானி வரையிலான மேற்கு, கிழக்கு கால்வாய் பாசனத் திட்டத்தையும் கொண்டு வந்தார். அதனால்தான் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

 

உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் பங்கு பெற்ற காளியண்ணனை, காமராஜர் செல்லமாக 'நேர்மையாளர்' என்றே அழைப்பாராம். 

 

தமிழின் மீது கொண்ட பற்றால், சொந்த ஊரில் கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக கற்புக்கரசி கண்ணகிக்கு விழா எடுத்து வருகிறார். நடை தளர்ந்தபோதும் கொள்கையில் தளராத அவர், அடுத்த தலைமுறையினர் வாயிலாக விழாவை தொடர்ந்து வருகிறார். மேலும், உள்ளூரில் அவ்வை பெயரில் பள்ளிக்கூடம் நடத்தும் அவர், பள்ளியில் முற்றிலும் பெண் ஆசிரியர்களை மட்டுமே நியமித்திருக்கிறார். கல்வி, வணிகமாகிவிட்ட இன்றைய சூழலிலும் கூட அவ்வை பள்ளியில் முற்றிலும் கட்டணமில்லா கல்வியே வழங்கப்படுவது நம்ப முடியாத ஆச்சரியங்களில் ஒன்று.

 

தனது 101வது பிறந்த நாளன்று ஆசி பெற வந்த மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர், ஆன்லைன் வாயிலாக படிக்க மொபைல் போன் இல்லாமல் கஷ்டப்படுவதை தாமாகவே அறிந்து கொண்ட காளியண்ணன், உடனடியாக அந்த மாணவருக்கு புதிய ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்திருக்கிறார். சில ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரராக, பெரிய ஜமீன்தாராக இருந்தவர் ஒருபோதும் தன் பெயருக்கு முன்னால் ஜமீன் பட்டத்தையோ, பின்னால் சாதி அடையாளத்தையோ பயன்படுத்திக் கொண்டதில்லை. சொல்லப்போனால் அதை அவர் பெரும் சுமையாக கருதி வந்திருக்கிறார். 

 

வினோபாவின் பூமிதான இயக்கத்தின் மீதான பற்றால் தன் குடும்பத்திற்குச் சொந்தமான அத்தனை ஆயிரம் ஏக்கர் நிலங்களையும் ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்திருக்கிறார். தற்போது அவர் வசித்து வரும் சிஹெச்பி காலனியும்கூட, 300 ஏழை குடும்பத்தினருக்கு அவரே நிலம் வழங்கி கட்டிக்கொடுத்ததுதான் என்கிறார்கள் உள்ளூர்க்காரர்கள்.

 

கேட்டவர்க்கெல்லாம் இல்லை என்று கூறாத காளியண்ணன் தாத்தாவுக்கும் சில ஆசைகள் அடிமனதில் அப்படியே தங்கியிருக்கின்றன என்கிறார் மருத்துவர் செந்தில்.

 

''அரசியல், சமுதாயப்பணிகளில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வந்த தாத்தாவுக்கு, அவருடைய இரண்டாவது மகன் கிரிராஜ்குமார் இறந்தது பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. அவரைத்தான் அரசியல் வாரிசாக நம்பியிருந்தார். அதனால்தான் அவருடைய இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன்பிறகு அரசியல் வெளியில் அவர் நடவடிக்கையை குறைத்துக் கொண்டார். 

 

கற்புக்கரசி என்றாலே கண்ணகிதான் நினைவுக்கு வருவார். கண்ணகி, தமிழ்ப்பெண்களின் பண்பாட்டை பிரதிபலிப்பவர். அதனால் திருச்செங்கோட்டில் கண்ணகி கோட்டம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதும், கற்புக்கென ஒரு கோயில் கட்ட வேண்டும் என்பதும் அவருடைய வாழ்நாள் லட்சியம். ஆசை. இன்னொரு லட்சியமும் உண்டு. மேட்டூர் உபரி நீரை மேட்டூர் - திருமணிமுத்தாறு - சரபங்கா நதி வழியாக கொண்டு வந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களிலும் நீரை சேமிக்கும் திட்டம்தான் அது. 

 

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் 1 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இவ்விரு லட்சியத்திற்காகவும் நீண்ட காலமாக போராடி வருகிறார். நாங்களும் அரசிடம் பலமுறை மனு கொடுத்துட்டோம். இன்னும் நிறைவேறல,'' என்கிறார் மருத்துவர் செந்தில்.

 

ஜமீனாக இருந்தும் அதன் அடையாளமின்றி; இல்லை என்று வந்தோர்க்கு இல்லை என்று கூறாமல் இயன்றதை வழங்குவதோடு, சொல் என்னவோ செயலும் அதுவேயாக என மூத்த காந்தியவாதி ஒருவர் கொள்கையில் தடம் மாறாமல் இன்றும் நம்முடன் வாழ்கிறார் என்பதேகூட இந்த நூற்றாண்டின் ஆச்சரியம்தான். காளியண்ணன் பற்றிய தொகுப்பும் பாடத்திட்டத்தில் சேர்த்தால், இளம் தலைமுறையினரும் அவரை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.