
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு மனநல மருத்துவர் ஷாலினி பதிலளித்துள்ளார். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு கறுப்பின இளைஞர் ஒருவரை காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்றனர். இந்தச் சம்பவவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் கண்டம் தெரிவித்தனர். அதற்கு நிறவெறி காரணமாகச் சொல்லப்பட்டது. அதைப் போலவே தமிழகத்தில் சாத்தான் குளத்தில் தங்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி தந்தை, மகன் இருவரையும் காவல்துறையினர் அடித்துக் கொன்றுள்ளனர். இதற்குப் பல்வேறு பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்தச் சம்பவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
அவர்கள் குடும்பத்துக்கு மிகப் பெரிய மனத்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தச் சம்பவம். கடைக்குப் போனவர்கள் கடையை மூடுவதில் பிரச்சனை என்று அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்ப உயிருடன் வரமாட்டார்கள் என்று அந்தக் குடும்பத்தில் யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வளவு கொடுமைக்குப் பிறகும், இந்தக் காவல்துறையும் அரசும் என்ன செய்கின்றது என்ற கோபம் பொதுமக்களுக்கு நிச்சயம் ஏற்படும். அரசாங்கத்தின் மீது மக்களுக்கு அதிகக் கோபம் வெளிப்பட வாய்ப்பு இருக்கின்றது. இது பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் மனநிலையாக இருக்கும். அந்தக் கோபத் தணல் எரிந்துகொண்டே இருக்கும். இந்தச் சம்பவத்தைச் செய்த போலிசார் கட்டாயமாக மனநல பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.
இந்த மனநோய்க் காரணமாக அவர்கள் இப்படிச் செய்துவிட்டார்கள் என்று சொல்வதற்காக இதனைக் கூறவில்லை. அன்ஃபிட் போலிசை காவல்துறையில் வைத்திருந்தால் அவர்களின் நடவடிக்கை இந்த மாதிரிதான் இருக்கும். வெறி பிடித்த மாதிரியான நடவடிக்கைகளிகள் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவார்கள். தங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக மனிதாபிமானம் அற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது, மக்களுக்கு எதிராகக் கோபத்தைக் காட்டுவது என்பது காவல்துறை பொறுப்பில் இருப்பவர்களுக்கு அழகல்ல. அந்தப் பதிவியைக் கொச்சைப் படுத்துவது போல அவர்களின் செய்ல்பாடுகள் அமைந்துவிடும். இந்தப் போக்கு என்பது பொதுமக்களிடம் இருந்து அவர்களை வெகு தூரம் பிரித்துவிடும்.

எனக்கு மனநோய் இருக்கிறது, அதனால் அப்படிச் செய்துவிட்டேன் மை லாட் என்று அவர்கள் சொல்ல முடியாது. அவர்கள் செய்தது திட்டமிட்ட படுகொலை. மிகத் தீர்க்கமாக இந்த அளவுக்கு அடித்தால் அவர்கள் என்ன ஆவார்கள் என்று காவல்துறையில் இத்தனை ஆண்டுகாலம் இருப்பவர்களுக்குத் தெரியாதா என்ன. நன்கு தெரியும், தெரிந்திருந்து வன்மம் கொண்டு அவர்கள் என்ன ஆனால் நமக்கென்ன என்ற ரீதியில் அவர்கள் தந்தை மகன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதற்கு வேறு யார் மீதும் பழிபோட முடியாது. உங்களுக்கு மனப்பிறழ்வு இருந்தால் நீங்கள் வைத்தியம் செய்துகொள்ள வேண்டுமே தவிர மற்றவர்கள் மீது அதனைக் காட்டக்கூடாது. அதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது" என்றார்.