Skip to main content

நாங்கள் பதில் சொல்வதால் ரஜினி பெரிய ஆள் என்று நினைக்க வேண்டாம் - நாகை திருவள்ளுவன் பேச்சு!

Published on 23/01/2020 | Edited on 23/01/2020

துக்ளக் ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய சில செய்திகள் சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் மீது காவல்துறையினரிடம் சிலர் புகார் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

மேட்டுப்பாளையத்தில் சில மாதங்களுக்கு முன்பு சுவர் இடிந்து பலர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி காவல்துறையினர் உங்கள் மீது புகார் தெரிவித்து கைது செய்திருந்தார்கள். காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உங்களை கைது செய்தபோதும் பிரச்சனை ஏற்பட்டது. என்ன காரணத்துக்காக காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏற்பட்டது?

கைது நடவடிக்கைகளை கண்டு யாரும் அஞ்சுவதில்லை. பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு அரசின் கருத்துக்கு எதிராக பேசினால் அவர்கள் இந்த நடவடிக்கையைதான் மேற்கொள்வார்கள் என்று தெரியும். எனவே கைது நடவடிக்கை என்பது பொதுவாழ்க்கையின் ஒரு அம்சமாகவே நாங்கள் கருதுகிறோம். எங்களுக்கு உள்ள கேள்விகள் எல்லாம் டிசம்பர் 2ம் தேதி இந்த சம்பவம் நடைபெறுகிறது. அன்று காலை அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் சுவர் இடிந்து இத்தனை நபர்கள் இறந்துள்ளார்கள் என்று தான் செய்தி வெளியானது. அரசு தரப்பும் இத்தகைய செய்திகளை மட்டுமே தெரிவித்தது. அதில் இருந்த சாதிய தீண்டாமைகளை பற்றி யாரும் எதுவும் அப்போது பேசவில்லை. 20 அடிக்கு சுவர் எழுப்பி இருக்கிறார்கள். இதற்கு முறையான அனுமதி கொடுக்கப்பட்டதா? அப்படி கொடுக்கப்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இதை கண்டித்துத்தான் போராட்டம் நடத்தினோம். 

 

jh



கல் எறிந்ததாக காவல்துறையினர் கூறுகிறார்கள். எங்கள் அமைப்பினை சார்ந்த யாரும் எத்தகைய அசம்பாவிதங்களிலும் ஈடுபடவில்லை. ஏனென்றால் தமிழ்நாட்டின் பிரதான தொலைக்காட்சிகள் அனைத்தும் அந்த சம்பவத்தை நேரடி ஒளிபரப்பு செய்தன. அதற்கான ஆதாரங்கள் தற்போதும் இருக்கின்றன. எனவே இந்த விஷயத்தில் யாரும் பொய் சொல்லவில்லை. காவல்துறையினர் தான் எங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினார்கள். அதற்கான ஏராளமான ஆதரங்கள் எங்களிடம் இருக்கின்றது. கைதின் போது எங்களின் கழுத்தை நெரிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் வேண்டுமென்றே இத்தகைய வன்முறை செயல்களில் ஈடுபட்டனர் என்பதே உண்மை. ஆனால் இதையெல்லாம் சொல்லாமல் நாங்கள் என்னவோ வன்முறையில் ஈடுபட்டதை போன்று காவல்துறை அதிகாரிகள் வேண்டுமென்றே சித்தரித்துள்ளார்கள். 

ரஜினி பெரியார் தொடர்பாக பேசிய சம்பவங்கள் தற்போது சர்ச்சையாகி உள்ளது. பெரியார் வெர்சஸ் ரஜினி இது தொடர்பான உங்களின் கருத்துகள் என்ன? 

ரஜினி வெர்சஸ் பெரியார் என்பதே மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. பெரியாருக்கு நிகரான தலைவர் ரஜினிகாந்த் அல்ல. அவரை ரஜினியுடன் ஒப்பிடுவதே பெரியாருக்கு நாம் செய்யும் பிழையாக போய்விடும். இந்த கேள்விக்கு நான் பதில் சொல்லவே விரும்புகிறேன். அவருக்கு பதில் சொல்வதனாலேயே அவர் பெரிய ஆள் என்று யாரும் நினைக்க தேவையில்லை. காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையே ஒரு முறை பிரச்சனை வந்த போது அம்பேத்கார் சொன்னார், காந்திக்கு நான் பதில் சொல்வதனால் அவர் பெரிய ஆள் என்று அர்த்தம் இல்லை. அவரை பின்பற்றுகின்ற கூட்டம் இருக்கிறது. அதனால் நான் பதில் சொல்கிறேன் என்று கூறியிருப்பார். அதை போலவே நானும் அவருக்கு பதில் சொல்வதனால் அவர் பெரிய ஆள் என்று நினைக்க தேவையில்லை. 

அவருக்கென்று ஒரு கூட்டம் அவரை பின்பற்றுவதால் இதனை கூறுகிறோம். ரஜினி படித்ததை வைத்து கூறுகிறேன் என்று சொல்கிறார். எப்போது நடைபெற்ற சம்பவத்துக்கு எதை உதாரணம் காட்டுகிறார். அவர் வேண்டுமென்றே பெரியாரை அவமானப்படுத்துகிறார். அவர் சொன்னது முன்னுக்கு பின் முரணானது. ரஜினி சொல்வது போல எதுவும் நடக்கவில்லை. பேரணியில் நிர்வாணமாக எந்த சிலையும் கொண்டுவரவில்லை. பேரணியில் சென்றவர்கள் மீது சிலர் செருப்பை வீசினார்கள். அது ராமர் சிலை மீது விழுந்தது. அதை எடுத்து அங்கு இருந்த தொண்டர்கள் அடித்தார்கள். இதுதான் உண்மை. இது பேரணியில் சென்ற பெரியாருக்கு கூட அப்போது தெரியாது. ஆனால் உண்மைக்கு மாறான  தகவல்களை அவர் கூறியதுடன் மட்டுமில்லாது மன்னிப்பு கேட்ட மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.