நகைக்கடை ஒன்றில் முகமூடி அணிந்து ஒற்றை ஆளாக நுழைந்து நகையை திருடுவதும், அதற்கு அடுத்து இன்னொரு முகமூடி போட்ட நபர் வரும் சிசிடிவி காட்சியை பார்த்து ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமல்ல, அண்டை மாநில பொதுமக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது எந்த நகைக்கடை? கொள்ளையர்கள் சிக்கினார்களா? என தொடர்ந்து அந்த செய்திகளை கவனிக்க தொடங்கினர் மக்கள். திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரியில் நடந்த நகைக்கொள்ளை சம்பவம்தான் அது.
கொள்ளைச் சம்பவம் நடந்தது பற்றி செய்தி வெளியானது, அதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சி வெளியானது, தனிப்படை அமைக்கப்பட்டது, திருவாரூரில் மணிகண்டன் என்பவன் கைது செய்யப்பட்டது, அவனிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது, மணிகண்டனை பிடிக்கும்போது மற்றொரு நபர் தப்பியோடியது,
மேலும் சுரேஷ் என்பவன் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். அதனைத் தொடர்ந்து கொள்ளையன் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை சம்பவத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் முருகன் சரண் அடைந்தான் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முருகன் யார்? அவன் எப்படி இருப்பான் என அவனது புகைப்படத்தை பார்க்கவும் பொதுமக்கள் இணையதள செய்திகளையும், தொலைக்காட்சியையும் பார்க்க தொடங்கினர். இந்தநிலையில் பெங்களூரு போலீசார் முருகனை அழைத்துக்கொண்டு திருச்சி அருகே அவன் புதைத்து வைத்திருந்த நகைகளை எடுக்க வந்தனர் என்ற செய்தியும், முருகனையும் பெங்களூரு போலீசாரையும் வாகனத்தில் பின்தொடர்ந்து தமிழக போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியது என எல்லா சம்பவங்களும் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு இருந்தது.
லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முருகன் சரண் அடைந்தது லலிதா ஜூவல்லரி நகைக்கொள்ளை வழக்கில் அல்ல, வேறொரு பெங்களூரு நகைக்கொள்ளை வழக்கில் எனவும், ஏற்கனவே பல நகைக்கொள்ளையில் அவன் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
நகைக்கொள்ளையில் ஈடுபட்ட முருகன், தனது சமூகத்து மக்களுக்கு உதவி செய்து வருவது, சாலை போடும் வேலைகளை செய்யும் தனது உறவினர்களை காப்பாற்றியுள்ளதும், அந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஜே.சி.பி., ரோடு ரோலர், கான்கிரிட் கலவை மெசின் போன்றவைகளை வாங்கிக்கொடுத்துள்ளதும் தெரிய வந்தது.
முருகனைப் பற்றி இதுபோன்ற செய்திகள் வரத்தொடங்கியதும், பொதுமக்களும் இந்த செய்திகளை ஆர்வமாக பார்க்க தொடங்கினர். செய்திச் சேனல்களிலும் மற்றும் இணையதள செய்திகளிலும் இதுபற்றி தொடர்ந்து செய்திகள் வெளியாகின. படத்தில் வரும் கதையைப்போல இருக்கிறதே என்று திரைப்பட தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் முருகன் பற்றி செய்திகளை படிக்கவும், கேட்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் முருகன் தெலுங்கில் ஒரு திரைப்படம் எடுத்து வெளியாகாமல் இருந்ததும், மற்றொரு படம் பாதியில் நிற்பதும் தெரிய வந்தது. மேலும் பெங்களூருவில் பங்களா இருப்பதாகவும், பல்வேறு மாநிலங்களில் அவனுக்கு வீடுகள் இருப்பதாகவும், பினாமிகள் பெயரில் சொத்துக்கள் இருப்பதாகவும், கொள்ளையடிக்கும்போது தன்னுடன் வருபவர்களுக்கு பேசியப்படி எடைப்போட்டு பங்கு கொடுப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதில் சினிமா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் வியப்புடன் பார்த்தது என்னவென்றால், முருகனுக்கு பல நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததுதான். மேலும் எய்ட்ஸ் நோயால் அதிகமாக பாதிக்கப்பட்ட முருகன் இனி அடங்குவான் என்று போலீசார் நினைத்திருந்த நிலையில், மீண்டும் ஒட்டுமொத்த காவல்துறையையே அதிர்ச்சியடைய வைக்கும் அளவுக்கு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தயாரிப்பாளர்களையும், டைரக்டர்களையும் வியக்க வைத்துள்ளது.
ஏன் இதனை படமாக எடுக்கக்கூடாது? முருகனின் முழுக் கதைகளையும் சேகரித்து, அவனையும் சந்தித்து இதுதொடர்பாக எடுத்துச் சொல்லி அவனின் சம்மதத்துடன் திரைப்படமாக எடுத்தால் என்ன என்று தயாரிப்பாளர்கள் சிலர், தங்களுக்கு நெருக்கமான, நம்பிக்கையான டைரக்டர்களிடம் விவாதித்து வருகின்றனர்.