Skip to main content

இதனால் தான் ஊரடங்கு உத்தரவு போட்டாரா மோடி? இந்தியாவை எச்சரித்த WHO... மாநில அரசு மீது அப்செட்டான மோடி!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

இந்த வாரம் கரோனா குறித்த இந்தியாவின் போராட்டத்தில் மிக முக்கியமான வாரமாக இருக்கப் போகிறது என்கிறார்கள் உலக சுகாதார நிறுவன அதிகாரிகள். அவர்களது மதிப்பீட்டின்படி இந்தியாவில் கேரளமும், மகாராஷ்டிராவும் முதல் கட்ட நோய் நிலைமையைத் தாண்டி இரண்டாவது கட்ட நோய் பரப்பு நிலையை விரைவில் எட்டிப்பிடிக்கும் என எச்சரிக்கிறார்கள்.

முதல்கட்ட நோய் பரப்பு நிலை என்பது வெளிநாட்டில் இருந்து வரும் தொற்று. அது உலகமெங்கும் இப்பொழுதும் குறையவில்லை. கரோனாவை உள்நாட்டு அளவில் கட்டுப்படுத்திய சீனாவில் கூட வெளிநாட்டில் இருந்து வரும் தொற்று இப்பொழுதும் பரவிக் கொண்டிருக்கிறது. அதன் அடுத்தக் கட்டம்தான் சமூக தொற்று எனப்படும் உள்நாட்டு தொற்று. இதைக் கட்டுப்படுத்தத்தான் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

kerala



அதையும் தாண்டி கேரளாவிலும் மகாராஷ்டிர விலும் உள்நாட்டு தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஒரு முக்கிய காரணமாக கோவிட்-19 பற்றிய பரிசோதனைகள் இந்தியாவில் போதுமானதாக இல்லை என்கிறார்கள். இந்த பரிசோதனைகளுக்கு இந்தியா முழுவதும் 7 லட்சம் டெஸ்டிங் உபகரணங்கள் தேவை என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள விநியோகஸ்தர்களுடன் தொடர்பில் இருக்கும் எந்த நாட்டை சேர்ந்த உற்பத்தியாளரும் இதனை சப்ளை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை அளிக்கலாம். இந்த கோவிட் 19 பரிசோதனை உபகரணங்கள் சென்னை உள்பட பெருநகரங்களில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி மூலம் விநியோகிக்க ஏப்ரல் முதல் வாரம் முதல் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு காரணம் இந்தியாவில் கோவிட்19க்கான பரிசோதனைகள் மிக மிக குறைவாக நடைபெறுகிறது என உலக சுகாதார மையம் இந்திய அரசை குற்றம் சாட்டுவதுதான். மொத்தம் 5342 பேரை சோதனை செய்த கேரளம்தான் இந்தியாவிலேயே அதிகப் பேரை கோவிட் 19 சோதனைக்குள்ளாக்கிய மாநிலம். அதில் 3768 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என ரிசல்ட் வந்துள்ளது.

 

modi



சந்தேகப்படுபவர்களையெல்லாம் கேரளாவில் சோதனை செய்கிறார்கள். இதுவே போதாது என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அங்கே 1437 பேருக்கு ரிசல்ட் இன்னமும் வரவில்லை. அதற்கு காரணம் இந்த கோவிட் 19 சோதனை பற்றிய இறுதி முடிவை புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சிக் கழகம் எடுக்க வேண்டும். அதில் ஏற்படும் தாமதம் தான் என்கிறார்கள்.


இந்தச் சோதனையில் கோவிட்19 பாதித்தவர்கள் எனக் கேரளம் கண்டுபிடித்தவர்களின் 137. கேரளாவுக்கு அடுத்தப்படியாக 2731 பேரை சோதனைக்குள்ளாக்கிய கர்நாடகத்தில் 2432 பேருக்கு கொரோனா இல்லை என ரிசல்ட் வந்துள்ளது. 55 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பதாகக் கர்நாடகம் கண்டு பிடித்துள்ளது.

ஐயாயிரத்திற்கும் அதிகமானப் பேரை சோதனைக்கு உட்படுத்தியதால்தான் கேரளா 137 பேரை கோவிட் 19 நோயாளிகள் எனக் கண்டுபிடித்தது. வெறும் 2731 பேரை சோதனைக்கு உட்படுத்திய கர்நாடகம் 55 பேரை கோவிட் 19 நோயாளிகள் எனக் கண்டுபிடித்தது. எனவே அதிகமான நோயாளிகளைக் கண்டுபிடிக்க அதிக அளவிலான சோதனைகள் தேவை என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அதிக சோதனைகள் நடத்தாத மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகியவை இடம் பெறுகிறது என மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.


26 மார்ச் 2020 அன்று பெற்றப்பட்ட கணக்கீட்டின்படி ஆந்திரா மிகக் குறைவாக 360 பேருக்கு மட்டும் கோவிட் 19 பரிசோதனையைச் செய்துள்ளது. அடுத்தப்படியாக தமிழகத்தில் 962 பேருக்கு மட்டும் கோவிட்19 பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 77 பேருக்கு ரிசல்ட் வரவில்லை. 29 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம் ஆந்திரா, தமிழ்நாட்டை விட அதிகமாக 1319 பேருக்கு பரிசோதனைகள் நடத்தியுள்ளது. அதில் 45 பேருக்கு கொரோனா நோய் பாதித்துள்ளதாகக் கண்டுபிடித்துள்ளது என சுட்டிக்காட்டுகிறார்கள் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள்.

அதுமட்டுமல்ல கோவிட்19 வைரஸை சீனா எப்படி எதிர்கொண்டது என இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். தனியார் மருத்துவ மனைகளையும் மருத்துவர்களையும் கொரோனா ஒழிப்பிற்கு தயார் படுத்த வேண்டும். உள்ளாட்சித் துறை, குடிநீர் வழங்கும் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை உள்பட அனைத்து துறைகளையும் கோவிட்19 வைரஸ்க்கு எதிரான போரில் பங்கெடுக்கச் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறையும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் சொல்லும் அனைத்தையும் இந்தியாவில் ஒழுங்காகச் செய்த மாநில அரசு ஒன்றுக்கூட இல்லை என விரத்தியுடன் சொல்லும் மத்திய அரசு அதிகாரிகள் ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல. நிலைமை இப்படியே போனால் சமூக தொற்று எனப்படும் இரண்டாம் நிலை நோய்த் தொற்றை இந்தியாவில் தவிர்க்கவே முடியாது என்கிறார்கள்.