தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் 23 அக்டோபர் 1943-ம் ஆண்டில் நடராசன் பிறந்தார். மாணவர் பருவத்தில் தமிழ் மீது நடராசனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. 1965 காலகட்டத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தில் பெரும் பங்காற்றினார். மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம் அண்ணாவின் கவனத்தை நடராசன் ஈர்த்தார்.
அதனைத்தொடர்ந்து 1967-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் மக்கள் தொடர்பு அதிகாரியானார் நடராசன். மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலாவை 1975-ல் நடராசன் திருமணம் செய்துகொண்டார். அப்போதைய முதல் அமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் தலைமையில் ம.நடராஜன் - வி.கே.சசிகலா திருமணம் நடைபெற்றது.
1980களில் தென் ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்ததால் சந்திரலேகா ஐ.ஏ.எஸ். அறிமுகம் நடராஜனுக்கு கிடைத்தது. சந்திரலேகா மூலம் ஜெயலலிதாவுடன் நடராஜனுக்கு அறிமுகம் கிடைத்தது.
நடராசன் காலப்போக்கில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறிப்போனார். 1985-ல் நேரடி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக நடராசன் செயல்பட்டார்.
எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்னர் 1982ல் ஜெயலலிதா கொள்கை பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வீடியோ எடுக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது தனது மனைவி சசிகலா வினோத் வீடியோ விசன் நடத்தி வருவதாக ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார் நடராஜன். அதன் மூலம் வேதா நிலையத்திற்குள் அடி எடுத்து வைத்தார் சசிகலா.
ஜெயலலிதாவிற்கு அனைத்து அரசியல் ஆலோசனைகளையும் தருவது நான்தான் என்று நடராஜன் சொன்னதாக தகவல் வந்ததும் அப்போது முதல் நடராஜன் - ஜெயலலிதா இடையே பிரச்சினை வெடித்தது. நடராஜனா, நானா (ஜெ.) என்ற கேள்வியில் தோழிதான் என்று முடிவெடுத்தார் சசிகலா. அப்போது முதல் ஜெயலாலிதாவுடன் தங்கி விட்டார் சசிகலா.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் சசிகலா இருப்பது குறிப்பிடத்தக்கது. கணவர் நடராசன் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரோலில் சசிகலா வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு சிறை நிர்வாகத்திடம் பரோல் கோரி சசிகலா இன்று மனு அளிக்க உள்ளார். நடராசனின் இறப்பு சான்றிதழை கொடுத்தவுடன் சசிகலாவுக்கு பரோல் தரப்படும் என சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.