Skip to main content

சிலர் மீது மட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்..? - கொளத்தூர் மணி கேள்வி!

Published on 22/11/2019 | Edited on 22/11/2019


சென்னையில் பெரியார் இயக்கங்களை சேரந்த பல்வேறு தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவரும் விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பாகவும், அதில் ஈடுபடுபவர்கள் மீது முறையாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள், மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,  பெரியார் திராவிட கழகம்  தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கொளத்தூர் மணி கூறியதாவது, " பெரியாரிய உணர்வாளர்கள் சார்பாக சில செய்திகளை தெரியப்படுத்துவதற்காக நாங்கள் உங்களை சந்திக்கிறோம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் நடைபெற்ற ஒரு குறிப்பிட்ட சாதியினருடைய மாநாட்டில் பேசிய வெங்கடேஸ்வரன் என்பவர் கலப்பு திருமணம் செய்பவர்களை நாய்களோடு இணைத்து மிகவும் கொச்சையாக பேசினார். அவர் மீது பெரியார் இயக்க தோழர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்கள். 

கடந்த 11ம் தேதி அவர் மீது சில பரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு என்ன காரணத்திற்காக அவர் கைது செய்யப்படவில்லை என்று தெரியவில்லை. அதே போன்று சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்திலும், தான் யாரால் பாதிக்கப்பட்டேன், எதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன் என்று அந்த மாணவி விளக்கமாக தன்னுடைய கடிதத்தில் கூறியிருந்தும், புகாருக்குள்ளானவர்களை இதுவரை விசாரிக்க கூட இல்லை. எதனால் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று காவல்துறையினரும் இதுவரை தெரிவிக்கவில்லை. அதே போன்று சிதம்பரம் நடராஜர் கோயிலில் அர்ச்சனை செய்ய போன பெண்ணை அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் தாக்கி இருக்கிறார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி இருந்தது. காவல்துறையினர் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்தனர் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. அவர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று தெரகியவில்லை.  
 

d




சோடா பாட்டில் வீசுவோம் என்று மன்னார்குடி ஜீயர் பேசியதை வீடியோ ஆதாரத்துடன் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தும் இதுவரை அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போன்று ஹச்.ராஜா பேசாத பேச்சுக்கள் இல்லை. வைரமுத்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களை பற்றி தவறாக பேசியுள்ளார். மேலும், பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என்று அவர் கூறிய அடுத்த நாள் பெரியார் சிலை திருப்பத்தூரில் சேதப்படுத்தப்பட்டன. இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே போன்று 30 சதவீத பெண்கள் மட்டும்தான் கற்புடையவர்கள் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதற்காக அவர் மீது தமிழகம் முழுவதும் காவல்நிலையங்களில் புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காயத்ரி விவகாரத்தில் அவர் ஏற்கனவே ஒருமுறை சேரி ஃபிகேவியர் என்று கூறியதற்காக அவர் மீது வன்கொடுமை வழக்கை பதிவு செய்ய வேண்டும் கூறி புகார் கொடுத்திருந்தோம். ஆனால் அதுகுறித்து எந்த விசாரணையும் செய்யப்படவில்லை. தற்போது நாடாளுமன்ற உறுப்பினரும், அரசியல் கட்சி தலைவருமான திருமாவளவனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

இது தொடர்பாகவும் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறோம். ஆனால் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காஞ்சி விஜயேந்திரர் தேசிய கீதம் பாடும் போது அமர்ந்திருந்தார். மற்றவர்கள் தேசிய கீதத்தை அவமதித்தால் வழக்கு போடுவோம் என்று சொல்லும் யாரும், இதை பற்றி பேசவில்லை. அவர் மீது வழக்குபதிவு செய்யவில்லை. சில குறிப்பிட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. குறைந்த பட்சம் வழக்கு பதிவு செய்யப்பட்ட வெங்கடேஸ்வரன் போன்றவர்களையாவது கைது செய்ய வேண்டும் என்று இதன் மூலம் வலியுறுத்துகிறோம். நம்மை போன்ற ஆட்கள் மீது புகார் கொடுத்த உடனே வழக்கு பதிவு செய்து கைது உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைக்கு போகும் காவல்துறையினர், இத்தனை ஆதரங்களை அவர்கள் மீது கொடுத்தும் புகாருக்குள்ளானவர்கள் மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தெரியவில்லை. இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசுக்கும், காவல்துறையினருக்கும் நாங்கள் சொல்வதெல்லாம் புகாருக்குள்ளான அனைவர் மீதும் நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.