Skip to main content

"அரசியல்வாதி என்பதையும் தாண்டி கலைஞர் ஒரு இலக்கியவாதி" - கவிஞர் சல்மா!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

 kavignar salma - Kalaignar 100

 

கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் செய்த சாதனைகள் குறித்தும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கவிஞர் சல்மா தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அவர் பேசியதாவது, "தான் ஒரு அரசியல்வாதி என்பதையும் தாண்டி கலைஞர் ஒரு நல்ல எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் இருந்தார். அரசியல் காரணமாக பல்வேறு பணிச்சுமை இருந்தாலும் இதற்கான நேரத்தை ஒதுக்கி தன்னுடைய படிப்பு திறனையும் செயல்பாடுகளையும் கொண்டு திரைப்படங்கள் வாயிலாக தான் ஏற்றிருக்கும் கருத்துகளையும் சித்தாந்தங்களையும் தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களிடம் கொண்டு சென்றவர். தன்னுடைய இலக்கியத்தை படைப்புகள் மூலம் கொண்டு சென்று தான் ஒரு சிறந்த இலக்கியவாதி என்றும் நிரூபித்தவர்.

 

மேலும், அரசியல் மாற்றத்தை உருவாக்கும் விதமாக பெண்களுக்குச் சொத்துரிமை, திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைத்தல் போன்ற செயல்களைச் செய்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். சமத்துவபுரம் போன்ற திட்டங்களை உருவாக்கி மக்களிடையே சாதி மத வேறுபாடுகளைப் போக்கியது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டைத் தாண்டி எந்த மாநிலத்திலும் கொண்டு வர இயலாத இத்திட்டத்தை முதல் முதலில் கலைஞர் தான் கொண்டு வந்தார். இது போன்ற செயல்களால் தமிழ்நாடு தனித்துவமான மாநிலமாக இருக்கிறது.

 

தன்னுடைய கனவுத் திட்டமான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டமும், தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என்ற திட்டமும், சேது சமுத்திர திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை என்ற எண்ணம் கலைஞரின் மனதில் என்றும் வருத்தத்தைத் தந்திருக்கும். மேலும், தமிழ்நாட்டுடைய வளர்ச்சிக்கு முக்கியப் பங்காக இந்த சேது சமுத்திர திட்டம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்கிய  நேரத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் பாலம் இருப்பதாக பொய்யான வதந்தியைப் பரப்பி அந்த திட்டத்தை பாதியில் நிறுத்தியது தான் கலைஞருக்கு நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்திருக்கும்.

 

யாரும் எதிர்பார்க்காத சூழலில்தான் ஐ.டி துறையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கினார். அப்படிப்பட்டவருக்கு இந்த நவீன தொழில்நுட்பம் தற்போது கிடைத்திருந்தால், தன்னுடைய கொள்கைகளையும் செயல்பாடுகளையும் கொண்டு செல்ல மிகப்பெரிய அளவில் இந்த சமூக ஊடகத்தை பயன்படுத்தியிருப்பார். ஏனென்றால், இன்றைய சூழ்நிலையில் அவதூறைப் பரப்புவதற்கும் நாகரீகமற்ற கருத்துகளைப் பகிர்வதற்கும் தான் சமூக ஊடகத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால்,கலைஞர் சமூக ஊடகத்தை ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்வதற்கு பயன்படுத்தியிருப்பார். அவரைப் பின்பற்றி பலரும் அவரைப் போன்ற நாகரீகமான கருத்துகளைப் பகிர்வதற்கு கலைஞர் முக்கியப் பங்காக இருந்திருப்பார். தன்னுடைய கருத்துகள் மூலமாகவோ சமூகநீதி கொள்கைகளைப் பகிர்வதன் மூலமாகவோ தற்போது இருக்கின்ற வெறுப்பரசியலுக்குத் தக்க பதில் அளித்திருப்பார்" என்று கூறினார்.

 

 

 

Next Story

தி.மு.க சார்பில் கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா (படங்கள்)

Published on 13/06/2024 | Edited on 14/06/2024

 

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஆயிரம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா அமைச்சர் பி.கே.சேகர் பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்கள். அருகில் மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ரவிச்சந்திரன், பொதுச் செயலாளர் எஸ்.முரளி, எஸ்.ராஜசேகர், இளைஞர் அணி அமைப்பாளர் டி.லோகேஷ், வட்டச் செயலாளர் சேப்பாக்கம் பிரபாகரன் உள்ளனர். 

படங்கள்: எஸ்.பி.சுந்தர்

Next Story

கலைஞர் சிலை திறப்பு விழா; அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அழைப்பு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Minister Anbil Mahesh invites kalaignar Statue Unveiling Ceremony in trichy

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மணப்பாறையில் இன்று (01-03-24) முன்னாள் முதல்வர் கலைஞரின் உருவச்சிலை திறப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு, கலைஞரின் உருவச்சிலையை  திறந்து வைக்கிறார்.

இதுகுறித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘தி.மு.க தலைவரின் அறிவுறுத்தலின்படி, கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் இதுவரை 90 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 91-வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் மணப்பாறை தொகுதியில் இன்று (01-03-24) மாலை 3.30 மணிக்கு மணப்பாறை மாட்டுச்சந்தை அருகில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்து வைக்க உள்ளார். இந்த விழா கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு முன்னிலையிலும், எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.