கிருஷ்ணகிரி, மாவட்டத்தைச் சேர்ந்தவர் வனிதா. 25 வயதான இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகளான நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி பிரிந்துள்ளனர். இதனால், கடும் மன உளைச்சலில் இருந்த வனிதா கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது, அவர் சென்ற எஸ்.இ.டி.சி(SETC) அரசு பேருந்தில் நடத்துநராக அண்ணாதுரை என்பவர் பணியில் இருந்துள்ளார். 42 வயதான இவர், கணவனை பிரிந்த வனிதாவிடம் பயணத்தில் ஆறுதலாக பேசியுள்ளார். இதில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, தான் அரசு வேலையில் இருப்பதை கூறி அண்ணாதுரை வனிதாவுக்கு 2-வது வாழ்க்கை கொடுத்துள்ளார். பின்னர், இருவரும் 6 மாத காலமாக சென்னை, முகப்பேரில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், 3 மாதம் கர்ப்பிணியாக வனிதா இருந்துள்ளார். அப்போது, எதேச்சையாக கணவர் அண்ணாதுரையின் செல்போனை எடுத்து பார்த்துள்ளார். அதில், நடத்துநர் அண்ணாதுரை பல பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது குறித்து விளக்கம் கேட்கும்போது அண்ணாதுரை கர்ப்பிணி பெண் என்றும் பாராமல், வனிதாவை அடித்து கொடுமை படுத்தியதாகவும், இதனால், வனிதாவுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வனிதா கணவர் அண்ணாதுரையின் செல்போன் மூலம் அவரால் பாதிக்கபபட்ட பெண்களின் விபரங்களை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட முகப்பேர் நொலம்பூர் மகளிர் போலீசார், விசாரணை மேற்கொண்டதாகவும், அண்ணாதுரையின் செல்போனில் உண்மை வெளிச்சத்திற்கு வர, கைது செய்து புழல் சிறையில் அடைத்ததாகவும் வனிதா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
ஆனால், பெண் பயணிகளை வலையில் வீழ்த்தி 5 பேர் வரை திருமணம் செய்த அண்ணாதுரை மீது துறை ரீதியான நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என்று வருத்தம் தெரிவித்தார். மேலும், அரசியலில் அண்ணாதுரை இருப்பதால், அவர் தப்பி விட கூடாது, அதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி செய்தியாளர்களிடம் விரிவாக பேசினார்.