நேற்றுமுன்தினம் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. காந்தியை சுட்டுக்கொன்றவர் கோட்சே எனப்பேசினார்.
இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் இந்தியா முழுவதிலுமிருந்து வந்தது. ஒரு கருத்தை, கருத்தால் எதிர்ப்பது என்பது எப்போதும் வரவேற்கத்தக்கதே. அவரது கருத்திற்கு எதிர்கருத்துகளோ, ஆதரவு கருத்துகளோ வருவது எப்போதும் அவரவர் விருப்பம்.
தமிழிசை சவுந்தரராஜன் பாஜகவின் மாநில தலைவர் கூறியது, கமலின் பேச்சை நிறுத்த பாஜக நடவடிக்கை எடுக்கும் என பிரச்சாரத்தில் கூறியதுடன், "தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தையே கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப்பேரன் தான் என்று சொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர் கமல். ஏனெனில் இதுவரை அவர் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை!" என தனிமனித வாழ்க்கையையும் விமர்சித்தார். கருத்தை கருத்தால் எதிர்க்காமல் அவருடைய தனிப்பட்ட விஷயங்களை பற்றி பேசுவது என்ன மாதிரியான அரசியல் என தெரியவில்லை.
அடுத்தது அவரது கட்சியின் தேசிய செயலாளர் ஒற்றுமையை பேணிக்காப்பவர், பெரியார் சிலையை பாதுகாப்போம் எனக்கூறி ஒற்றுமையை வளர்த்தது இவரது சாதனை, அப்படிப்பட்ட பெருமைகளை உடைய ஹெச்.ராஜா கூறியுள்ளார், கமல்ஹாசன் ஜின்னாவின் பேரன், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம் என்றும், அத்துடன் முஸ்லிம்களின் ஓட்டுக்காக இந்துக்களை கமல்ஹாசன் இழிவுபடுத்துவதாகவும் கூறியிருக்கிறார். இந்து எனக்கூறியதால் அவரை ஜின்னாவின் பேரன் என சித்தரிப்பது எதை குறிக்கிறது. இது பிரிவினை இல்லையா?
உங்களுக்கு ஒரு நிகழ்வை நியாபகப்படுத்த நினைக்கிறேன்... காந்தியின் 71-வது நினைவுநாள் அனுசரிக்கப்பட்ட அன்று, அலிகர் நகரில் இந்து மகாசபா அமைப்பைச் சேர்ந்த பூஜா சகுண் பாண்டே தலைமையில் சிலர் மகாத்மா காந்தியின் உருவ பொம்மையை வைத்து அதை துப்பாக்கியால் சுட்டனர். அந்த உருவ பொம்மையில் வைக்கப்பட்டிருந்த சிவப்பான திரவம் ரத்தம்போல் வழிந்து ஓடியது, பின் அந்த உருவ பொம்மை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார்கள். சுடும்போது நாதுராம் கோட்சே வாழ்க என்று முழக்கமிட்டனர். அப்போது ஏன் நீங்கள் எதிர்வினையாற்றவில்லை.
நாதுராம் கோட்சேவிற்கும், மகாத்மா காந்திக்கும் இடையே தனிப்பட்ட பகை ஏதும் இருந்ததா? அவன் ஏன் கொன்றான், அது நடந்த காலகட்டம் என்ன, என்பதையெல்லாம் ஆராய்ந்தால் ஒரு முடிவு தெரியவரும்.
இவரெல்லாம் எப்படி அமைச்சரானார் என்ற சந்தேகம் பல அதிமுக அமைச்சர்களை பார்க்கும்போது எழும். இவர் அவர்களில் ஒருவர் இப்போது அதை தெள்ளந்தெளிவாக நிரூபித்துவிட்டார் ராஜேந்திரபாலாஜி. சட்டத்தையும், அனைத்து மக்களையும் பாதுகாப்பேன் என உறுதிமொழியேற்று பதவிக்கு வந்த இவர், கமல்ஹாசனின் நாக்கை அறுக்கவேண்டும் எனக்கூறுகிறார். 70 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வோம், கலைஞரை அமெரிக்கா அழைத்துசென்று சிகிச்சை அளிக்காமல் அவரை கொன்றுவிட்டனர், ஹிந்தி தெரியாததால்தான் மத்திய அரசு வேலை தமிழ் மக்களுக்கு கிடைக்கவில்லை என அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் பேசும் அமைச்சரே!, கமல் கீழ்த்தரமான அரசியல் செய்கிறார் எனக்கூறியவரே! நேற்று உங்கள் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு. தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலையில் குல்லா வைத்துக்கொண்டு அதே அரவக்குறிச்சியில் பிரச்சாரம் செய்தாரே அதற்கு பெயர் என்ன.