Skip to main content

ரஜினியை சந்தித்தாரா அன்புமணி ராமதாஸ்? கே.பாலு சிறப்பு பேட்டி... 

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

 

2021 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை ஆறு மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கிவிட்டதாகவும், இந்த முறை அன்புமணி தம்பிகள் படை, தங்கைகள் படை என உருவாக்கி புதிய வாக்காளர்களை குறி வைத்து பாமக சென்றுகொண்டிருக்கிறது என்று நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பா.ம.க. செய்தித் தொடர்பாளர் கே.பாலு. 

 

இந்தியா முழுவதும் சிஏஏ-வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் சிஏஏ-வை அதிமுகவைப் போல் பாமகவும் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த போராட்டங்களுக்கு பாமகவும் ஒரு காரணம் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைக்கிறதே?
 

சிஏஏ-வை பொறுத்தவரையில் இந்தியாவில் உள்ள யாருக்கும், அதுவும் சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அச்சப்பட தேவையில்லை. சிஏஏ குறித்து அன்புமணி ராமதாஸ், பாமக பொதுக்குழுவில் மிகத் தெளிவாக விளக்கினார். 
 

பாமக ஏன் சிஏஏ-வுக்கு ஆதரவாக வாக்களித்தது? ஏன் என்.ஆர்.சி.யை எதிர்க்கிறது? தமிழ்நாட்டில் என்.ஆர்.சி.யை நடைமுறைப்படுத்த தேவையில்லை என்று ஏன் சொல்லுகிறோம் என்பதையெல்லாம் தெளிவாக நாங்கள் விளக்கிவிட்டோம். 

 

kbalu


 

இந்த பிரச்சனையில் தமிழகத்தில் திமுகதான் திட்டமிட்டு மத்தியில் உள்ள மோடி அரசுக்கு எதிராக மக்களை திரட்ட வேண்டும் என்பதற்காக இந்த போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பான்மையான மக்கள் ஆதரவு அளிக்கவில்லை. 
 

இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் இதனை பார்த்து அச்சப்பட தேவையில்லை. உலகத்தில் எந்த நாடுகளிலும் இல்லாத வகையில் மிகப்பெரிய பாதுகாப்பும், அவர்களுக்கு அரசியல் அங்கீகாரமும், சம வாய்ப்பும், கூடுதலான உரிமைகள் சிறுபான்மையினருக்குத்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் எந்தவிதமான சறுக்கலோ, சமரசமோ கிடையாது. அப்படியிருக்கும்போது இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை. 
 

2021 சட்டமன்றத் தேர்தலில் தற்போது உள்ள அதிமுக கூட்டணியே தொடருமா? 2016 சட்டமன்ற தேர்தல் போல "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்ற கோஷத்தை மீண்டும் பாமக எடுக்குமா? அல்லது வேறு ஏதாவது யோசனை உள்ளதா?
 

2021 சட்டமன்றத் தேர்தலை பொறுத்தவரையில் பாமக ஆறு மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். முதல் கட்டமாக பாமகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை குறிப்பாக தேர்வு செய்துள்ளோம். மேலும், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை என்கிற இரண்டு படைகளை உருவாக்கியிருக்கிறோம். 
 

இதில் இதுவரை அரசியல் அனுபவம் இல்லாமல் மற்ற கட்சிகளில் இடம்பெறாமல் புதிய வாக்காளர்களை குறிவைத்து அவர்களிடம் கட்சியின் சாதனைகளை, கொள்கைகளை, நோக்கத்தைப் பற்றி எடுத்துரைத்து அவர்களை அன்புமணியின் தம்பிகள் படை, தங்கைகள் படையில் இணைக்கிறோம். 
 

அதன்பிறகு அன்புமணி ராமதாஸ் நேரடியாக ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சென்று தம்பிகள் படை, தங்கைகள் படையில் இருப்பவர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். மேலும் அவர்களுக்கு அரசியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இதன் அடிப்படையில் ஏறக்குறைய 16 தொகுதிகளில் தம்பிகள் படை, தங்கைகள் படையில் இருப்பவர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்திருக்கிறார். இவர்கள் மக்கள் படையை உருவாக்குவார்கள். நடுநிலையோடு இருப்பவர்களை, நடுநிலை வாக்காளர்களை அணுகி இந்தப் படையில் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் 50 வாக்குகளை சேகரிக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேர்தல் பரப்புரை பயிற்சி, தேர்தல் அன்று வாக்குச் சாவடிகளில் பணியாற்றுவதற்கான பயிற்சியை கொடுத்து வருகிறோம். 
 

இந்தப் பணிகள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. ஒரு தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்காளர்கள் பாமகவுக்கு வாக்களிக்கும் வகையில் அந்த பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எங்களது இந்தப் பணிகள் வரும் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. 
 

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்றும் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளர் என்றும் அறிவித்தோம். அதனை முன்வைத்து தமிழகத்தினுடைய தேவைகள், சமூகத்தினுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு கல்வி, விவசாயம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, கிராமப்புற நலன் என்று இந்த பிரச்சனைகளை முன்வைத்து மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற முழக்கத்தோடு கடந்த தேர்தலை சந்தித்தோம்.
 

2021 தேர்தலை பொறுத்தவரையில் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. யாருடன் கூட்டணி அமைப்பது, எப்படி தேர்தலை சந்திப்பது என்பது குறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் தேர்தலுக்கு முன்பாக அறிவிப்பார். ஆனால் அதற்கு முன்பாக கட்சியை பலப்படுத்துவதற்கான வேலைகளை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். நாங்கள் தேர்வு செய்து பணியாற்றக்கூடிய தொகுதிகளிலும், கூட்டணி அமைத்த பிறகு பாமக போட்டியிடக் கூடிய தொகுதிகளிலும் மிக எளிதாக வெற்றிபெறுவதற்கு, அந்த வெற்றி வாய்ப்பை உறுதி செய்யக்கூடிய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். நாங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் வெற்றி பெறுவதற்கும் எங்களது தேர்தல் பணிகள் மிகப்பெரிய அளவில் உதவி செய்யும். 
 

தேர்தலையொட்டி சென்னை திருவேற்காட்டில் நடந்த பாமக பொதுக்குழுவில், வட தமிழகத்தில் உள்ள 90 தொகுதிகளில் நம்முடைய வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் பேசியிருக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு அன்புமணி ராமதாஸ் பேசும்போது அடுத்த ஆட்சி பாமக தலைமையில் இருக்கும் என்று பேசியிருக்கிறார்? அதிமுக-வுக்கு நெருக்கடி தர வேண்டும், சீட் பேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று இந்த மாதிரியான கருத்துக்களை பாமக கூறுகிறதா?
 

அப்படியில்லை. ஒவ்வொரு கட்சியைப் பொறுத்தவரை ஆட்சி அமைக்க வேண்டும், ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கும். அது பாமகவுக்கும் பொருந்தும். அதே நிலையில் நாங்கள் கடந்த காலங்களில் பெற்ற வாக்குகள், சதவீதத்தை வைத்து பார்க்கும்போது வெற்றிக்கு பிரகாசமாக இருக்கக்கூடிய தொகுதிகள், அதாவது வடமாவட்டங்கள் என்று சொல்லவில்லை, தமிழகம் முழுவதும் பணியாற்றுவோம். 90 தொகுதிகள் நமக்கு இலக்கு. ஆனால் தமிழகம் முழுவதும் பணியாற்றுவோம் என்றுதான் ராமதாஸ் சொன்னார். மற்றப்படி 90 தொகுதிகள் வேண்டுமென்றோ, 90 தொகுதிகளில் போட்டியிடப்போகிறோம் என்றோ, 90 தொகுதிகளில் மட்டும்தான் போட்டியிடப்போகிறோம் என்றோ, பாமக அதிக தொகுதிகளை பெற இப்படி பண்ணுகிறது என்றோ பொருள் அல்ல. 
 

பாமக தொடங்கப்பட்ட இந்த 30 ஆண்டுகளில் உங்களின் வாக்கு சதவீதம் என்பது தொடங்கிய இடத்திலேயே இருக்கின்றதே? ஒற்றை இலக்க சதவீதத்தில் இருந்து இரட்டை இலக்க சதவீதத்தில் வாக்குகளை பெற பாமகவுக்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படும்?
 

தமிழ்நாட்டில் வாக்கு சதவீத அடிப்படையில் மூன்றாவது பெரிய கட்சி என்பதை பாமக ஒவ்வொரு தேர்தலிலும் உறுதி செய்திருக்கிறது. 89ல் கட்சி தொடங்கி 30 ஆண்டுகளை கடந்திருக்கிறோம். ஆனால் இதற்கு முன்பு தொடங்கிய கட்சிகளெல்லாம் தங்களது வாக்கு சதவீதத்தை இழந்திருக்கிறது. ஆனால் பாமக இன்றுவரை தன்னுடைய வாக்கு வங்கியை இழக்கவில்லை. உறுதி செய்திருக்கிறது. இது மிகப்பெரிய விஷயம். 2016 சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை என்றாலும் 6 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக பாமக உள்ளது. அடுத்தடுத்த தேர்தல்களில் கூடுதல் வாக்குகளை பெறுவதற்கான பணிகளைத்தான் தம்பிகள் படை, தங்கைகள் படை செய்து கொண்டிருக்கிறது.
 

rajini

 

ரஜினிகாந்துடன் அன்புமணி ராமதாஸ் சில தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசியதாக ஒரு தகவல் வெளியானது? அது உண்மையா? 
 

இந்த செய்தி உண்மையல்ல. இதுபோன்ற சந்திப்பு எதுவும் நடைபெறவில்லை.
 

மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தியிருக்கிறார்... விரைவில் அவர் கட்சி தொடங்கப்போகிறார்... 
 

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக சொல்லியிருக்கிறார். அவர் கட்சி தொடங்குகிறாரா என்று பார்ப்போம். என்ன கட்சி, என்ன கொள்கை, எதற்காக கட்சி தொடங்கப்படுகிறது என்பதை அவர் விளக்கக்கட்டும். அதன் பிறகு தன்னுடைய கருத்தை சொல்வதாக ராமதாஸ் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். 

 

தொடர்ந்து ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார். இன்று கூட ஆலோசனை நடத்தியுள்ளார்... அவர் கட்சி தொடங்கினால் பாமக கூட்டணி வைக்குமா?

 

இந்த கேள்வியே தற்போது எழவில்லை. பத்து வருடங்களுக்கு மேலாக ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஆலோசனை நடத்தப்பட்டுத்தான் இருக்கிறது. அதனை மட்டுமே வைத்து எதையும் முடிவு செய்ய முடியாது. கட்சி தொடங்கட்டும், கொள்கைகளை முன் வைக்கட்டும். 
 

சினிமா நடிகர்களின் அரசியல் பயணத்தை எதிர்ப்பதே வாழ்நாள் லட்சியமாக வைத்திருந்த பாமகவும், அதன் தலைவர்களும் ரஜினியுடன் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு தெளிவில்லாமல் பதில் சொல்வது ஏன்?

 

பல தருணங்களில் நாங்கள் ரஜினியை விமர்சனம் செய்திருக்கிறோம். ரஜினிகாந்த் திரைப்படங்களில் புகைப் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். இதனை ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார். இதனை முன்பே கடைப்பிடித்திருக்கலாம் என்றும் ரஜினி கூறினார். இதுபோன்று தனிப்பட்ட முறையில் எங்களது கொள்கைகளை அவர் வரவேற்றுள்ளார். நாங்கள் அரசியல் ரீதியாக கருத்து சொல்ல வேண்டுமென்றால் அவர் கட்சி தொடங்கிய பிறகே கருத்து கூட முடியும். இப்போதைக்கு எந்தவிதமான கருத்துக்களையும் கூறவிரும்பவில்லை. 

 

கடந்த மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவுக்கு ஒரு பதவி கிடைத்தது. இந்த முறை தேமுதிக ஒரு பதவியை பெற விரும்புகிறது. கூட்டணி கட்சிகளுக்கு மாநிலங்களவை பதவியை அதிமுக வழங்கினால் பாமக வரவேற்குமா?

 

இது கேட்பவர்களும், கொடுப்பவர்களும் பேசிக்கொள்வது. பாமகவை பொறுத்தவரையில் நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலின்போது செய்த உடன்படிக்கையின் அடிப்படையில் அந்தப் பதவி கொடுக்கப்பட்டது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அந்தப் பதவியை கொடுப்பதும், கூட்டணிக் கட்சிகள் அந்த பதவியை கேட்பதும் அவர்களது உரிமை. இதைப்பற்றி பாமக எந்தவித கருத்தையும் சொல்ல விரும்பவில்லை.