கடந்த சில மாதங்களாக வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி என்ற செய்திகளைக் கேட்காமல் நம்மால் ஒரு நாளைக்கூட கடந்து செல்ல முடிவதில்லை. அப்படி எந்த வரலாற்றை மிஞ்சியிருக்கிறது என்று பழைய கோப்புகளை எல்லாம் தூசி தட்டி ஆராய வேண்டிய அவசியமேயில்லை. இந்த செப்டெம்பர் மாதத்தின் 1-ஆம் தேதியிலிருந்து இன்று 12-ஆம் தேதி வரை நிகழ்ந்து இருக்கும் மாற்றங்களை கவனித்தாலே போதுமானது.
செப் 1-ஆம் தேதி, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.87 ரூபாயாக இருந்தது. அதே இன்று காலை சந்தை நிலவரப்படி 72.84 ரூபாய். இந்த பனிரெண்டு நாட்களில் மட்டும் 1 ரூபாய் 97 காசுகள் குறைந்திருக்கிறது. சராசரியாக ஒரு நாளுக்கு 16 காசுகள் அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
பெட்ரோல் விலை செப் 1-ல் 81.77 ரூபாய், இன்று 84.05, பனிரெண்டு நாட்களில் 2 ரூபாய் 28 காசுகள் உயர்வு. சராசரியாக ஒரு நாளுக்கு 19 காசுகள் உயர்ந்திருக்கிறது.
டீசல் விலை செப் 1-ல் 74.42 ரூபாய், இன்று 77.13 ரூபாய், பனிரெண்டு நாட்களில் 2 ரூபாய் 71 காசுகள் உயர்வு. சராசரியாக ஒரு நாளுக்கு 22 காசுகள் உயர்ந்திருக்கிறது.
தோராயக் கணக்குகளை விட்டுவிட்டு, மொத்த வித்தியாசங்களை பார்ப்போமாயின் இந்த பனிரெண்டு நாட்களில் மட்டும், கிட்டத்தட்ட 3 ரூபாய் அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.