Skip to main content

ஜாலியன் வாலாபாக் படுகொலை – நூற்றாண்டு நினைவலை

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்துக்கொண்டு இருந்த சமயம். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி காந்தி தலைமையில் பெரும் அஹிம்சை போராட்டத்தை நடத்தி வந்தது. அப்போது, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மக்கள் கொதிப்பில் இருந்தனர். இது தலைவர்களின் பேச்சுக்களில் எதிரொலித்தது. நாட்டில் மிதவாதிகள் என்கிற அஹிம்சை வழி போராட்டக்காரர்கள், போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தலைவர்கள் இருந்த அதே நேரத்தில், தீவிரமான போராட்டக்காரர்களும் இருந்தனர். அவர்கள் துப்பாக்கி வழியே விடுதலை விரைவில் கிடைக்கும் என்றனர். பிரிட்டிஷ் படையை எதிர்த்து அங்கங்கு துப்பாக்கிகள் வெடித்தன.

 

 

jallianwala bagh


துப்பாக்கிகளைவிட, தலைவர்களின் பேச்சுக்கள் நாட்டு மக்களை சுதந்திரம் வேண்டி குரல் எழுப்பியது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை ஆத்திரத்துக்கு உட்படுத்தியது. இதனை ஒடுக்க வேண்டும். அதனால் இந்திய மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமையை பறிக்கும் சட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்டது. அதுதான் ரௌலட் சட்டம். இந்த சட்டம், பேசுவது, எழுதுவது, கருத்து சொல்வது, அரசாங்கத்துக்கு எதிராக போராடுவது போன்ற அனைத்தையும் தடை செய்து, கட்டுபாடுகள் விதித்தது. தீவிரவாதி, நாட்டுக்கு எதிரானவர் என்றால் காவல்துறை, காரணம் கூறாமல் கைது செய்யலாம், இரண்டு ஆண்டு சிறையில் அடைக்கலாம், பிணையில் வரமுடியாது, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய அவசியம்மில்லை. இந்த பயங்கர சட்டத்தை காந்தி, நேரு, ஜின்னா போன்றவர்கள் எதிர்த்தார்கள். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஒத்துழயாமை போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அப்படி எதிர்த்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 


இதனை கண்டித்து நாடு முழுவதும் சாத்வீக முறையில் போராட்டங்கள் நடைபெற்றன. தற்போதைய பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ்சில் பொற்கோவிலுக்கு அருகில் ஜாலியன்வாலாபாக் என்கிற காலி மைதானத்தில் அஹிம்சாவாதிகள் 1919 ஏப்ரல் 13-ம் தேதி ஒன்றுக்கூடி பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர். இந்த பரந்துவிரிந்த மைதானத்தில் மட்டும் சுமார் 20 ஆயிரம் பேர் இருந்துள்ளனர். கூட்டம் நடந்துக்கொண்டு இருந்தபோது அந்த இடத்துக்கு வந்தார் பஞ்சாப் லெப்டினென்ட்டாக இருந்த மைக்கேல் ஓ டையர்.
 


வெறிக்கொண்ட ஓநாய் படை டையருடையது. அந்த மைதானத்துக்கு ஒரே நுழைவாயில் தான். அதன் பெரிய இரும்பு கதவுகளை மூடியது காவல்படை. வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்த 150 பிரிட்டிஷ் – இந்திய காவல்படையினரின் துப்பாக்கிகள் நிராயுதபாணியாக நின்ற விடுதலை போராட்டக்காரர்களை நோக்கியிருந்தது. கூட்டத்தினரை நோக்கி எந்த எச்சரிக்கையும் விடாத டையர் தனது காவலர்களை நோக்கி உத்தரவிட, அவர்களது துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுண்டனர். டையரும் தனது கை துப்பாக்கி மூலமாக சுட்டார். நிராயுதபாணியாக இருந்த போராட்டக்காரர்கள் ஆளுக்கொரு திசையாக ஓடினார்கள். அங்கிருந்த கிணற்றில் உயிரை காப்பாற்றிக்கொள்ள குதித்தார்கள். சுவர் ஏறி குதித்தனர். சில நிமிடங்களில் 1650 ரவுண்ட்கள் சுடப்பட்டன. இறந்தவர்கள் தோராயமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் என்றது காங்கிரஸ் கட்சி. பிரிட்டிஷ் அரசாங்கம் அமைத்த விசாரணை கமிஷன் 379 பேர் என்றது. ஆயிரக்கணக்கானவர்கள் காயம்பட்டும், குண்டடிப்பட்டும் உயிருக்கு போராடிக்கொண்டு, கதறிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியிருந்ததால் மறுநாள் காலை வரை யாரும் அந்த மைதானத்தின் பக்கம் செல்லவில்லை. அரசாங்கமும் உதவவில்லை. சாவகாசமாக மறுநாளே மருத்துவக்குழு அங்கு வர அனுமதிக்கப்பட்டது. அதுவரை அவர்களின் அலறல் அப்பகுதி மக்களை தூங்கவிடாமல் செய்தது.

 

jallianwala bagh


இந்த படுகொலை குறித்த தகவல் வெளியுலகத்துக்கு ஒரு மாதத்துக்கு பின்பே தெரியவந்தது. காரணம், பத்திரிக்கை தணிக்கை முறையில் இருந்தது. செய்திகளில் பிரிட்டிஷ் அரசாங்கம் கடுமையான தணிக்கை செய்தபின்பே பிரிண்டாகின என்பதால் பத்திரிக்கைகளில் இது பெரியதாக வரவில்லை. இப்போதுபோல் அப்போது இணைய வசதியில்லை, பரவலான தொலைபேசிகள் கிடையாது, தபால், தந்தி மட்டுமே ஒரு இடத்து தகவல்களை மற்றொருயிடத்துக்கு கடத்தும் கருவியாக இருந்தது. ஒரு மாதத்துக்கு பின் தகவல் மெல்ல செய்தித்தாள்களில் வந்தபோது, தலைவர்கள் அதிர்ச்சியானார்கள்.
 


பல தலைவர்களும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் பெற்ற பட்டங்களை, பதவிகளை துறந்தார்கள். போராட்ட களத்துக்கு வந்தார்கள். முன்பை விட பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான போராட்டம் வலிமையடைந்தது. பிரிட்டிஷ் நாடாளமன்றத்திலும் அது எதிரொலித்தது. அதனால் ஜாலியன் வாலாபாக் படுகொலை குறித்து 1919 அக்டோபர் 14-ம் தேதி விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.



ஹண்டர் தலைமையில்  அமைக்கப்பட்ட அந்த குழுவின் முன் ஆஜரான டையர், நான் தான் என் படைளுக்கு சுட உத்தரவிட்டேன். நானும் அந்த கூட்டத்தை பார்த்து சுட்டுக்கொண்டே இருந்தேன், போராட்டக்காரர்களை சுட வேண்டும் என்றே சுட்டேன். மக்களிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் மீது பயம் வரவேண்டும், பிரிட்டிஷ் அரசை நினைத்தாலே அவர்கள் உடல் நடுங்கவேண்டும். நெஞ்சம் பதற வேண்டும் என நினைத்து சுட்டேன். என் துப்பாக்கியில் இன்னும் குண்டுகள் இருந்தால் சுட்டு இருப்பேன், நான் சுட்டதுக்காக வருந்தவில்லை என்றார்.
 


பல நூறு சாட்சிகளை விசாரித்தபின், மக்கள் கலைந்து செல்ல எந்த அறிவிப்பும் செய்யாமல் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, டையர் அவர் அதிகாரத்தை மீறி செயல்பட்டதோடு, அவர் சொல்வது போல் பஞ்சாப் தீவிரவாத பிடியில் அப்போதுயில்லை என அறிக்கை தந்தது. மேம்போக்காகவே அந்த அறிக்கை இருந்தது. டையரை தண்டிக்கவேண்டும் என எதுவும் சொல்லவில்லை. பிரிட்டிஷ் அரசாங்கம், டையரை காப்பாற்ற, பணி விடுவிப்பு எனச்சொல்லி இலண்டனுக்கு அழைத்து தன் பாதுகாப்பில் வைத்துக்கொண்டது.
 


மாபெரும் படுகொலை நடந்த இடத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் ஜாலியான்வாலபாக் மைதானத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டது. இந்தியாவில் மக்கள் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட வெகு சில நினைவு தூண்களில் இது முதன்மையானது, முக்கியமானது.

 
21வது ஆண்டில் பதில் கொலை:


1940 மார்ச் 13-ம் தேதி, லண்டனில் உள்ள கேக்ஸ்டான் ஹால் என்ற இடத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்வுக்கு மைக்கல் ஓ டையர் வந்தார். மேடையில் பேச சென்றவரை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார் உத்தம் சிங். டையர் அங்கேயே இறந்தார். உத்தம் சிங் சரணடைந்தார். அவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டது.
 


உத்தம்சிங், ஜாலியான் வாலபாக் படுகொலை நடந்தபோது, இளைஞராக போராட்டத்துக்கு வந்துயிருந்தவர்களுக்கு தாகத்துக்கு நீர் தரும் இளைஞர் குழுவுடன் சேர்ந்து பணியாற்றிக்கொண்டு இருந்தார். அவர் கண் முன் நடந்த இந்த துப்பாக்கி சூடு அவரை ஆயுதம் ஏந்தவைத்தது. அதற்காகவே தன்னை தயார்படுத்திக்கொண்டவர் டையரை சுட்டுக்கொல்ல வேண்டும் என்பதற்காகவே ரகசியமாக செயல்பட்டார். இறுதியில் அதனை செய்தும் காட்டினார். இந்தியா சுதந்திரத்துக்கு பின்னர், உத்தம்சிங் உடலை இங்கிலாந்திடமிருந்து பெற்றுவந்து இந்தியாவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யவைத்தார் அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி.



இந்த மாபெரும் மனித வேட்டைக்கு இதுவரை பிரிட்டிஷ் அரசாங்கம் வருத்தம் தெரிவிக்காமல் இருந்தது. இந்நிலையில் அந்த மாபெரும் படுகொலை நடந்த 100 வது ஆண்டு தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு அதாவது 2019 ஏப்ரல் 7-ம் தேதி, இலங்கிலாந்து பிரதமர் தெரிசா மே, இங்கிலாந்து அரசின் சார்பாக ஜாலியான்வாலாபாக் படுகொலைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.