முந்தைய பகுதியை வாசிக்க...''ராகுல் காந்தியுடன் நான்...''- ஒரு மாற்றுத்திறனாளியின் மறக்க முடியாத அனுபவம்!
கட்டுரையாளர் :அண்ணாமலை
அவசர அவசரமாக அந்த மண்டபத்திற்குச் சென்று பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு உள்ளே சென்று அமர்ந்தோம். காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்கு மதிய உணவு அருந்திக்கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்த்து எங்களுக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. சிறிது நேரத்தில் ராகுல் காந்தி அவர்களின் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து என்னை அவர் இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர். மனதுக்குள் பல்வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்த போது நேரடியாக அவர் முன் என்னை நிறுத்தினர். வாழ்நாள் கனவு கண்முன் நிஜமான தருணம்! என்னை நான் அறிமுகம் செய்துகொண்ட பிறகு என்னுடைய உடல் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விசாரித்தார். அதன் பிறகு அவர் என்னிடம் கேட்ட சில கேள்விகள் என்னை மலைப்பின் உச்சிக்கு கொண்டு சென்றன. அவர் மீதான மரியாதையைப் பன்மடங்கு அதிகமாக்கின. என் வாழ்வில் மறக்க முடியாத உரையாடலாக அமைந்த அவருடனான அந்த 25 நிமிட உரையாடலின் சில துளிகள் இதோ...
ராகுல் காந்தி: நாளை முதல் நீ நடக்க முடியாது என்று என்னிடம் யாராவது சொன்னால் நான் என்ன மனநிலைக்கு செல்வேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் உனக்கு தினமும் மற்றவரது உதவி தேவைப்படுகிறது. அதையெல்லாம் மீறி எப்படி உன்னால் வாழ்வில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்ல முடிகிறது?
நான்: அதற்கு முழுமுதற் காரணம் என்னுடைய அம்மாதான். சிறுவயதில் இருந்தே 'நீ எதற்காகவும் பின்தங்கி விடக் கூடாது. அனைத்து வகைகளிலும் நீ மற்றவர்களோடு போட்டி போடக்கூடிய ஒருவனாக இருக்க வேண்டும்' என்று சொல்லி அவர் என்னை வளர்த்தது தான் மிக முக்கிய காரணம்' (இதை நான் சொன்னவுடன் உடனடியாக தன் இருக்கையிலிருந்து எழுந்து என்னுடைய அம்மாவிற்கு வணக்கம் சொன்னார்). மேலும் என்னுடைய தந்தை, உறவினர்கள், நண்பர்கள் என்று யாருமே என்னை ஒரு மாற்றுத்திறனாளியாக நினைக்க வைத்ததே இல்லை. தங்களில் ஒருவராகத் தான் என்னை அனைவரும் பார்ப்பார்கள் (உடனே அம்மாவிடம் திரும்பி 'அப்படியா? நீங்கள் இவரை வித்தியாசமாக உணரவைத்ததே இல்லையா?' என்று ஆச்சரியமாகக் கேட்டார்) அதனால் நான் என்னுடைய குறையை நினைத்து ஒருநாளும் வருந்தியதில்லை. நான் செல்ல வேண்டிய பாதையை மட்டும் நினைத்து ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
ராகுல் காந்தி: உடல் ரீதியாக உனக்கு ஏற்பட்டுள்ள பலவீனத்தை சமன் செய்ய எது உனக்கு பலமாக இருக்கிறது என்று கருதுகிறாய்? ஏனெனில், ஒருவருக்கு ஒரு பலவீனம் இருந்தால் அதை balance செய்வதற்கு இன்னொரு பலமான விஷயம் நிச்சயமாக இருக்கும் என்பது என்னுடைய திடமான நம்பிக்கை.
நான்: என்னுடைய அறிவுத்திறனையே என்னுடைய பலமாகக் கருதுகிறேன். உடல் ரீதியாக எனக்கு ஏற்பட்டுள்ள பலவீனத்தை அதுதான் சமன் செய்கிறது என்று நினைக்கிறேன்.
ராகுல் காந்தி: எதை வைத்து அப்படி சொல்கிறாய்?
நான்: எனக்கு எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் புலமை உண்டு. எழுத்தின் மீது உள்ள என்னுடைய ஆர்வம் தான் எனக்கு பலம். நான் தனியாக Blog பக்கம் வைத்திருக்கிறேன். Freelance Journalist ஆக இருக்கிறேன். மேலும் என்னுடைய சமூக வலைதள பக்கங்களிலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். யூடியூபில் கூட ஒரு சேனல் தொடங்கி சில வீடியோக்கள் பதிவிட்டிருக்கிறேன்.
ராகுல் காந்தி: என்ன தலைப்புகளில் யூடியூபில் பேசியிருக்கிறாய்?
நான்: உங்களைப் பற்றி கூட ஒரு வீடியோ செய்திருக்கிறேன். "ராகுல் காந்தியைக் கண்டு பாஜக ஏன் அஞ்சுகிறது?" என்பதுதான் அதன் தலைப்பு.
இப்படி நீண்டது எங்களுடைய உரையாடல். அவர் என்னிடம் அரசியலும் பேசினார். நேரம் சென்றதே தெரியாமல் அவர் கேட்கும் மிக நுட்பமான கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தேன். 25 அருமையான நிமிடங்கள் கடந்தன. அடுத்த நிகழ்ச்சிக்கு நேரமானதால் அவர் கிளம்ப வேண்டிய சூழ்நிலை. எழுந்து அம்மாவிடம் நெகிழ்ச்சியாகக் கை கொடுத்தவர், அவரை நோக்கித் திரும்பியிருந்த என்னுடைய வீல்சேரை புகைப்படம் எடுக்க ஏதுவாக அவரே திருப்பினார். புகைப்படம் எடுக்கத் தயாராகி என் தோள்களின் மீது அவர் கைவைத்தபோது ஏற்பட்ட சிலிர்ப்பு எனக்கு இன்னமும் இருக்கிறது. "நிச்சயம் உன்னுடன் நான் நேரடித் தொடர்பில் இருப்பேன்" என்றார். பிரமிப்பின் உச்சத்தில் இருந்த நான் நன்றியோடு புன்னகை செய்துவிட்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தேன்.
சாதாரண மனிதர்களின் ஆசைகளைத் தலைவர்கள் நிறைவேற்றுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள், குறைந்தது ஒரு நிமிடம் பேசுவார்கள். அவ்வளவுதான். ஆனால் என்னைப் பற்றித் தெரிந்தவுடன் உடனடியாக அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தது, காலையில் நான் ஏக்கத்தோடு வைத்த வேண்டுகோளை நினைவில் வைத்து மதியம் என்னை அழைத்து 25 நிமிடங்கள் உரையாடியதெல்லாம் இதுவரை எங்கும் கேள்விப்படாத ஒன்று. அவரிடம் மேற்கொண்ட உரையாடலில் இருந்து அவர் எப்படியொரு பண்பட்ட மனிதர் என்பதும், மனித உணர்வுகளுக்கு அவர் எந்த அளவு மதிப்பளிக்கிறார் என்பதும் புரிந்தது. என்னிடம் அவர் கேட்ட கேள்விகளின் மூலம் அவருடைய அறிவாற்றலின் மீது மிகுந்த பிரமிப்பு ஏற்பட்டது. உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒருவர் தான் தலைமைப் பொறுப்புக்கு உகந்தவர். அதனால் தான் இந்தியா கண்ட மிகச்சிறந்த தலைவர்களில் ராகுல் காந்தியும் ஒருவர் என்று நினைக்கிறேன். இன்றோ அல்லது நாளையோ இந்திய நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார் என்று திடமாக நம்புகிறேன்.