Published on 29/10/2019 | Edited on 29/10/2019
இன்று அதிகாலையில் சிறுவன் சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். கடந்த 80 மணிநேரமாக நடந்த மீட்புப் பணியின் முடிவு சோகமாக அமைந்தது.
இது முதல் தடவை அல்ல. வெள்ளிக்கிழமை மாலை சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், காவல்துறை, மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழு, அமைச்சர்கள் என அனைவரும் அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய தொழில்நுட்ப வசதி இல்லாததாலும், நேரம் அதிகமானதாலும் சிறுவன் சுஜித் உயிரிழந்தான்.
இதுவரை ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருடன் மீட்கப்படாத குழந்தைகள்:
- பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம், பகவான்புரம் கிராமத்தில் 2019 ஜூன் 6ம் தேதி துணியால் மூடப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை ஒன்று விழுந்தது. 110 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு ஜூன் 11ஆம் தேதி குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- 2009 டிசம்பர் தேனி, ஆண்டிபட்டியில் 6 வயது சிறுவன் மாயி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தான். 30 மணிநேர போராட்டத்திற்கு பிறகு அவன் சடலமாக மீட்கப்பட்டான்.
- 2013 ஏப்ரலில், கரூரில் உள்ள ஒரு ஆழ்துளைக் கிணற்றில் 7 வயது சிறுமி முத்துலட்சுமி தவறி விழுந்தாள். நீண்ட போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
- 2015 ஏப்ரலில் வேலூர், கூராம்பாடியில் 350 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த தமிழரசன் மீட்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- 2007 மார்ச் 11ம் தேதி, குஜராத் பாவ்நகர் மாவட்டத்தில் 4 வயது சிறுமி ஆர்த்தி, 60 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.
- 2007 ஜூலை 27ம் தேதி, ஜெய்ப்பூரில் 6 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தான்.
- 2008 மார்ச் 28ம் தேதி, ஆக்ராவிலுள்ள ஆழ்துளைக் கிணற்றின் 15 அடி ஆழத்தில், சிக்கியிருந்த 2 வயது சிறுமி சோனு உயிரிழந்தாள்.
- 2010 ஜூன் 3ம் தேதி, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா 200 அடி ஆழத்தில் விழுந்த 3 வயது குழந்தை உயிரிழந்தது.
- 2011 மே 20ம் தேதி, நாசிக் வயல்வெளியில் 70 அடி ஆழத்தில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தது.
- 2011 செப்டம்பர் 6ம் தேதி, நெல்லை மாவட்டம் நான்குநேரி அருகே கைலாச நாதபுரத்தை சேர்ந்த மூன்றரை வயது குழந்தை சுதர்சன் 200 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்தான்.
- 2012 ஜூன் 20ம் தேதி, ஹரியானா மாநிலம் குர்காவ்ன் பகுதியில் 4 வயது சிறுமி மஹி, 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டார்.
- 2002 ஜூலையில் காஞ்சிபுரம் பாலுச்செட்டிசத்திரம் அருகே 65 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து எட்டு வயதுச் சிறுவன் ராம்குமார் மரணமடைந்தான்.
- தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், செவெல்லா மண்டலத்தில் உள்ள சந்வேலி கிராமத்தில் வீணா என்ற 18 மாத குழந்தை, 450 அடி ஆழ்துளைக் கிணற்றில் 2017 ஜூன் 22ஆம் தேதி மாலை 7 மணியளவில் விழுந்துள்ளது. 58 மணி நேர தொடர் போராட்டத்துக்குப் பிறகு குழந்தையை ஜூன் 25ஆம் தேதி சடலமாக மீட்டுள்ளனர்.
- கர்நாடகாவிலுள்ள பெலாகவி மாவட்டத்தில் 6 வயது சிறுமி 2017, ஏப்ரல் 22ம் தேதி திறந்திருந்த ஆழ்துளை கிணற்றிற்குள் விழுந்தது. 53 மணிநேரத்திற்கு பிறகு அந்தக் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
- 2002 செப்டம்பரில் சென்னை மண்ணடி ஆடியபாதம் தெருவில் 35 அடி ஆழத்தில் விழுந்த சிறுவன் தமிழ்மணி 58 மணிநேரம் கழித்து சடலமாக மீட்கப்பட்டான்.
- 2009 ஆகஸ்ட் 27 அன்று தண்டராம்பட்டில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மூன்று வயதுச் சிறுவன் கோபிநாத் இறந்தான்.
- செப்டெம்பர் 28, 2013 ஆரணி அருகே ஆழ்துளை கிணற்றில் சுமார் 10 மணி நேரமாக சிக்கி தவித்த 4 வயது சிறுமி தேவி மீட்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது வெறும் சிறிய பகுதிதான். இந்தியா முழுக்க இது நடந்தது, நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவ்வளவு மரணங்கள் நிகழ்ந்தும் ஏன் அரசு இதை தீவிர பிரச்சனையாக கருதாமல் இருக்கிறது என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்துகொண்டுதான் இருக்கிறது. இனியும் இது நடக்காமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.