Skip to main content

எம் .பி க்கு அடி ! தி .மு .க அலுவலகம் சூறை !

Published on 28/02/2019 | Edited on 04/03/2019

டந்த 10 வருடமாக திருச்சியில் எம்.பி.யாக வலம் வருபவர் அ.தி.மு.க. குமார். அவரது சொந்த ஏரியாவிலேயே அவர் கையை ஓங்குவதும், அங்கிருந்த அவர் சமூகத்தை சார்ந்த தி.மு.க.வினர் அவரை முதுகில் குத்துவதும், அவருக்கு உதவியாக வந்த நவல்பட்டு விஜியை சக்கையாக கவனிப்பதும், எம்.பி. குமாரை போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பாக இழுத்துச் செல்வதும் வீடியோ வடிவில் வைரலாக பரவி தேர்தல் நேரத்தில் அரசியல் சூட்டைக் கிளப்பிவிட்டது.

trichytension

திருச்சி பொன்மலைபட்டியில் குடியிருக்கிறார் மா.செ.வும் எம்.பியுமான குமார். அங்கு பேருந்துநிறுத்தமொன்றை தொகுதி எம்.எல்.ஏ.வான தி.மு.க.வின் அன்பில் மகேஷின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்ட ஆலோசிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் குமார் அப்பகுதியில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையம் ஒதுக்கி முறைப்படி ரயில்வேயில் அனுமதி பெற்று வேலைசெய்ய அதற்கான டெண்டரும் விட்டுவிட்டார். தி.மு.க. பகுதிச் செயலாளர் தர்மராஜ் அலுவலகத்திற்கு எதிரே பேருந்து நிறுத்தத்திற்கான வேலைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில்தான் பழைய பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரங்களை அனுப்பி வைத்தார் ஒப்பந்தக்காரர். இதனைப் பார்த்த தி.மு.க பகுதிச் செயலாளர் தர்மராஜ், ரயில்வே துறைக்கு தகவல் கொடுத்து அனுமதியில்லாமல் பேருந்து நிலையம் அமைப்பதாக முறையிடவே... விரைந்து வந்த மத்திய ரயில்வே படையினர் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

இதைப் பார்த்துக்கொண்டிருந்த அ.தி.மு.க. மாணிக்கம் என்பவர் "தர்மராஜ் வேலையை நிறுத்திவிட்டார். உங்களையும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் தவறாகப் பேசுகிறார்' என்று எம்.பி. குமாரிடம் போட்டுக் கொடுக்க, ஆவேசமாக வந்த எம்.பி.யே பகுதிச் செயலாளரின் அண்ணன் பெரியசாமி என்பவரை தாக்க முயற்சித்திருக்கிறார்.

பொக்லைன் இயந்திரம் மூலம் வேலை நடத்தவும் உத்தரவிட்டு, பெரியசாமியை எம்பி. அடிக்கப் பாய்ந்தார் என்கிற தகவல் பரவியதும்தான் தி.மு.க. குரூப் திரண்டது. அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திருச்சி மாவட்ட மாணவர் அணி நிர்வாகி ஏர்போர்ட் விஜி மற்றும் அ.தி.மு.க. எம்.பி குமார் ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளானார்கள். எம்.பி.யின் கன்னத்தில் அடி விழுந்தது. அ.தி.மு.க நிர்வாகிகளும் உருட்டுக்கட்டைகளுடன் குவிந்தனர். தி.மு.க. பகுதிச் செயலாளர் தர்மராஜன் அலுவலகத்தை அடித்து உடைத்தனர்.

இரு தரப்பினர் மீதும் புகார் தரப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. அணிக்குள் ஏற்கனவே அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், எம்.பி. குமாருக்கும் முட்டல் மோதல் இருக்கும் நிலையில், இது புதுப் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

திருச்சியில் கடந்த 15 வருடங்களாக தி.மு.க., அ.தி.மு.க. என இரண்டு கட்சிக்குள் அடிதடி பிரச்சனை வந்தது இல்லை. இந்தச் சம்பவத்தால் பதட்டம் அதிகரித்துள்ளது.