ஏறக்குறைய இந்த ஆண்டின் இறுதிக்கு நாம் பயணித்து வந்தாலும் விரைவில் வெளியாக இருக்கும் இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் என்பது அரசியல் கட்சிகளைப் போல பொதுமக்களையும் கவனிக்க வைத்துள்ளது. குஜராத் மற்றும் இமாச்சலில் நடைபெறும் தேர்தலே இதற்கு முக்கியக் காரணம். இந்த இரண்டு மாநிலத்திலும் பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ம் தேதி எண்ணப்பட இருக்கிறது. இமாச்சலில் நாளை ஒரே கட்டமாக 68 தொகுதிகளிலும், குஜராத்தில் இரண்டு கட்டங்களாக அடுத்தமாதம் ஒன்று மற்றும் ஐந்தாம் தேதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது.
குஜராத் மாநிலத்தைப் பொறுத்தவரையில் கடந்த 24 வருடங்களாக ஆளுங்கட்சியாக பாஜகவே இருந்து வருகிறது. இந்த முறையும் வெற்றி வாய்ப்பு பாஜகவுக்கு அதிகம் இருப்பதாகக் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. அதை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட சில தினங்களுக்கு முன்பு ஆளும் கட்சியான பாஜகவில் இணைந்தனர். இது ஒருபுறம் இருந்தாலும் இமாச்சலில் அரசியல் சூழ்நிலை முற்றிலும் மாறாகவே இதுவரை இருந்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகவே ஆளும் கட்சி தொடர்ந்து அடுத்தமுறை வெற்றிபெற்றது இல்லை. கேரளாவைப் போன்றே பெரும்பாலும் மாறி மாறி காங்கிரஸ் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளே வெற்றி பெற்று வருகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் நாளை ஒரே கட்டமாக 68 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. காலை ஏழு மணிக்குத் துவங்கும் வாக்குப்பதிவு மாலை ஆறு மணி வரை நடைபெற இருக்கிறது. தேர்தல் நாளை நடந்து முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை முடிவு வர ஒரு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது. குஜராத் தேர்தல் அடுத்த மாதம் 5ம் தேதி முடிவடைய உள்ளதால் அதன்பிறகே இரண்டு மாநிலங்களில் பதிவான வாக்குகளும் 8ம் தேதி எண்ணப்பட இருக்கிறது. வழக்கம்போல் ஆளும் கட்சி எதிர்க்கட்சி ஆகுமா? இல்லை ஆப்பிள் தேசம் தன் வரலாற்றை மாற்றி எழுதுமா என்பதை வரும் 8ம் தேதி வரை பொறுத்திருந்து காண்போம்.