Skip to main content

அண்ணா சொன்ன இதை மட்டும் கலைஞர் கேட்கவில்லை!!

Published on 18/06/2018 | Edited on 03/06/2021

அண்ணாவின் "திராவிட நாடு' இதழில் கலைஞர் கருணாநிதி, தான் பள்ளியில் படித்த காலத்திலேயே ஒரு கட்டுரை எழுதினார். அதன் தலைப்பு "இளமைப் பலி' என்பதாகும்.


 

kalaingar


 

 

 

கலைஞரின் கட்டுரையைப் படித்த அண்ணா கட்டுரையாளர் மிகப்பெரியவராக இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டார். ஒரு சமயம் அண்ணா திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேசவந்தார், "இளைமைப் பலி' கட்டுரையாளர் மு.கருணாநிதி நினைவு வரவே அவரைப் பார்க்க விரும்பினார்.

 

 

"அண்ணா அழைக்கிறார்' என்றதும் கருணாநிதி இனிய எண்ணங்களினால் எழுச்சி கொண்டார். யாரைக் காண வேண்டும், கண்டு ஆசைத்தீர பேசவேண்டும் என்று பலநாட்களாக ஆர்வத்துடிப்புடன் காத்துக் கிடந்தாரோ அவரே தன்னை அழைப்பதைக் கேட்டதும் பூரிப்படைந்தார். உடனே துள்ளிக் கிளம்பினார். அண்ணாவைக் கண்டதும் கருணாநிதிக்கு கைகட்டி நிற்கத் தோன்றியதே தவிர, பேச வாய்வர வில்லை. மகிழ்ச்சிப் பெருக்கு.

 

 

"கருணாநிதியை அழைத்துவா என்றால் யாரோ ஒரு சிறுவனை முன்னால் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறீர்களே'' என்று அண்ணாவுக்கு வியப்பு! "யார் இந்தச் சிறுவன்?'' என்று பார்வையினால் கேட்டார். அவரது வியப்பைப் புரிந்து கொண்டு,

"இவர்தான் நீங்கள் பார்க்க விரும்பிய கருணாநிதி'' என்று தெரிவித்தார்கள்.

அண்ணாவுக்கு ஏற்பட்ட வியப்பு மேலும் மிகுந்தது. "இந்தச் சிறுவனா கருணாநிதி? இவனா அந்தக் கட்டுரையை அத்தனைச் சிறப்பாக எழுதினான் என்று ஆச்சரியமும் சேர்ந்து கொண்டது. இரண்டும் இச்சிறுவன்தான் என்பது உறுதியானதும் அண்ணா கருணாநிதியை கட்டித் தழுவிக் கொண்டார். அந்த வயதில் பள்ளி மாணவனாகிய கருணாநிதிக்கு ஏற்பட்டிருந்த எழுத்தாற்றலை அவர் பாராட்டினார்.

பாராட்டியது மட்டுமல்ல, மற்றொன்றும் சொன்னார் அண்ணா, "இது பள்ளியில் படிக்கும் வயது உனக்கு; கட்டுரை எழுதுவதிலேயே கவனம் செலுத்தாமல் நன்றாகப் படி.'' (அண்ணா சொன்ன இதை மட்டும் கலைஞர் கேட்கவில்லை)