உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சு சர்ச்சையானது மற்றும் சம கால அரசியல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை பேராசிரியர் ஹாஜா கனி எடுத்து வைக்கிறார்.
சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக, உதயநிதி சனாதனம் குறித்து பேசியுள்ளார் என்று சொல்வது அழுகிப் போன மனங்களின் அருவருப்பான குற்றச்சாட்டு. பிற சமயத்தினரின் நம்பிக்கைகளை இழித்தும் பழித்தும் பேச இஸ்லாமியர்களுக்கு உரிமையில்லை என்று தான் இஸ்லாம் சொல்கிறது. சான்றிதழ்படி உதயநிதி ஸ்டாலின் ஒரு இந்து தான். அவர் சனாதனத்தைக் கேள்வி கேட்பதால் சிறுபான்மையினருக்கு என்ன சந்தோஷம் வந்துவிடும்? முத்தலாக் சட்டத்தை பாஜக அரசு கொண்டுவந்தபோது "ஏன் எங்கள் மதத்தில் தலையிடுகிறீர்கள்?" என்று யாரும் கேட்கவில்லை.
அன்று மதரசாக்களில் தான் பொதுக்கல்வி என்பது இருந்தது. அங்கு படித்த ராஜாராம் மோகன்ராய் தான் உடன்கட்டை ஏறுதலை தடுத்து நிறுத்தினார். உடன்கட்டை ஏறும் சம்பிரதாயத்தை ஒரு மதம் சார்ந்த நம்பிக்கையாகப் பார்க்க முடியுமா? நீ படிக்கக் கூடாது, தொட்டால் தீட்டு என்றெல்லாம் சொல்வது மதப் பிரச்சனையா? உதயநிதி எந்த மதத்தையாவது குறிப்பிட்டு பேசினாரா? இஸ்லாமியர்கள் மீது தினந்தோறும் வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும் பாஜகவினர் மீது இவர்கள் எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. உதயநிதி பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் பேசும் மோடி, பற்றி எரியும் மணிப்பூர் பற்றி ஏன் ஒருமுறை கூட பேசவில்லை?
இவர்கள் சனாதனம் என்று சொல்வது உண்மையில் ஆன்மீகமா? உதயநிதி சொன்னது பொய் என்று இவர்களால் நிரூபிக்க முடியுமா? இட ஒதுக்கீட்டை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறது என்று அதன் தலைவர் இப்போது பேசுகிறார். இட ஒதுக்கீட்டை எதிர்த்தால் இங்கு அரசியல் செய்ய முடியாது என்கிற நிலை இருக்கிறது. நம்முடைய தலைவர்களின் கடின உழைப்பும் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளும் தான் தமிழ்நாட்டை இந்த உயரத்தில் வைத்திருக்கின்றன. இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது.
உதயநிதியின் தலைக்கு விலை வைத்துள்ளார் ஒரு உத்தரப் பிரதேச சாமியார். இதையே ஒரு இஸ்லாமிய மதகுரு செய்திருந்தால் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தையே தீவிரவாத சமுதாயம் என்று இவர்கள் சொல்லியிருப்பார்கள். இப்போது மீடியாக்கள் உட்பட அனைவரும் அமைதி காக்கிறார்கள். உதயநிதிக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் ஒரு இஸ்லாமிய மௌலானாவும் பேசியுள்ளார். போலிகளை எப்போதுமே இஸ்லாமிய சமுதாயம் அங்கீகரிக்காது. உதயநிதியோடு நாடு நிற்கிறது. பெரும்பான்மை மக்களின் காயங்களுக்கு நியாயம் தேடுவது தான் உதயநிதியின் பேச்சு.
முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...