இன்றும் மக்களின் மனதில் மறக்க முடியாத பல காட்சிகளை நடித்தவர், அந்த காலத்து இளம் பெண்களின் மனதில் பெரிய இடம் பிடித்தவர், 'மிஸ்டர் சந்திரமௌலி...' என்று அவர் பேசிய வசனம் இன்றும் ஒலிக்கிறது... இப்படி சினிமாவில் நவரச நாயகனாக ஜொலித்த கார்த்திக் அரசியலில் நகைச்சுவை நாயகனாகப் பார்க்கப்பட்டார். அரசியல் களம் அவருக்குப் புரிபடும் முன்னரே தானிருந்த கட்சிக்குள்ளேயும் சரி, பிற கட்சிகளாலும் சரி பந்தாடப்பட்டார். தேர்தலில் இவர் அறிவித்த வேட்பாளர்களை அதிமுக அள்ளிக்கொண்டு போனதெல்லாம் காமெடி ட்ராஜெடி. இன்று ரஜினி, கமல், விஜய், விஷால் என சினிமா அரசியல் பரபரப்பாக இருக்கும் சமயத்தில் அவரை சந்தித்து அவரது அரசியல் பற்றி பேசினோம்...
"பத்து வருஷமா அரசியலில் இருந்த நான், இப்போ ரெண்டு வருஷமா விலகியிருக்கேன். முதலில் நான் ஆரம்பிச்சது கட்சி இல்ல, 'சரணாலயம் நற்பணி இயக்கம்'தான். அதைப் பற்றி மக்களுக்குத் தெரிவிக்க, பிரச்சாரம் செய்ய, பல இடங்களுக்குப் பயணம் செய்தேன். ராஜபாளையம் போனேன், மதுரை தமுக்கம் மைதானத்துக்குப் போனேன்... அங்கெல்லாம் கூடிய கூட்டத்தையும் மக்கள் காட்டுன பாசத்தையும் பார்த்து என்னை அரசியலுக்கு இழுத்தாங்க. அதுதான் உண்மை.
முதலில் நான் ஒத்துக்கலை. "ஏன்பா... எனக்கும் அரசியலுக்கும் சுத்தமா சம்மந்தமே கிடையாது. நற்பணி இயக்கம் வேற, அரசியல் வேற, என்னை ஏன் கூப்பிடுறீங்க?"னு கேட்டேன். அதுக்கு, "ரெண்டும் கிட்டத்தட்ட ஒன்னுதான், நீங்க இங்க வந்தா இன்னும் அதிகமா நல்லது செய்யலாம். அதிகாரமும் கிடைக்கும்"னு சொன்னாங்க. ரொம்ப யோசிச்சுட்டு, பல விஷயங்களையும் ஆராய்ஞ்சுட்டு, அப்புறமா ஓகே சொல்லிட்டேன். முதலில் ரெண்டு வருஷம் நல்லாதான் போச்சு. அப்புறமாதான் நான் உணர்ந்தேன். அது ரொம்ப சிக்கலான வேலை. அரசியலில் இருந்தா ஃபுல்டைம் இருக்கணும், இல்லைனா இருக்கக்கூடாது. அந்த நேரத்தில் என்னால் ஃபுல்டைமா இருக்க முடியல. நிறைய வேலைகள் செய்து கொண்டிருந்தேன். படம் இயக்கணும்னு எண்ணம் இருந்தது.
அரசியலில் மட்டும் சூதாட்டம் பண்ண முடியாது. முழுசா இங்க இருந்தாத்தான் மக்கள் நம்மை நம்புவாங்க. இல்லைனா, விரலை சுண்டுவதற்குள் எல்லாம் மாறிவிடும். நான் அப்போ அரசியலில் இறங்கி முதல் சுற்றுப்பயணம் போயிட்டு வந்தேன். ஷூட்டிங்ல இருந்தேன். கவுண்டமணி பக்கத்துல இன்னொரு ஷூட்டிங்குக்காக வந்திருந்தார். பார்த்தப்போ டூர்லாம் எப்படியிருந்ததுனு கேட்டார். நல்லா இருந்துச்சுன்னு சொன்னேன். உடனே, என்னை ஒரு சைடா பாத்துகிட்டே, "எதுக்கு???"னு அவரு ஸ்டைல்ல தலையை ஆட்டிக்கிட்டே கேட்டார். செம்ம சிரிப்பு அப்போ. சில பேர் சொல்றாங்க 'அரசியலில் ரஜினிக்கும் கமலுக்கும் நீங்க சீனியர்'னு. அதெல்லாம் இல்லை, நான் ஸ்கூல் படிக்கும்போதிலிருந்து அவுங்க நடிப்பதைப் பார்த்திருக்கேன். அவுங்களுக்கு நான் சீனியரானு எனக்கே சிரிப்பு வரும்.
காமெடியெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், எங்க அப்பா முத்துராமன் இருக்கும்போது அவர், மக்கள் மேல் ரொம்ப பாசமா இருந்தார். தென்தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் போனார். மக்களும் அவர்மேல் பாசமா இருந்தாங்க. இப்பவும் நீங்க 'சௌத்'க்கு போனா மக்கள் சொல்வாங்க, அப்பாவைப் பற்றி. அதுவே ஒரு தனி சேப்டர். ஆனா, அப்பாவால் முழுசா இறங்கி செய்ய முடியல. அவர் மேல வைத்த நம்பிக்கையை என் மேலும் வைக்குறாங்க. அந்த நம்பிக்கையை காப்பாத்தணும்ல? திரும்ப தீவிர அரசியலுக்கு வருவதற்கான வேலைகள் இப்போ நடந்துகொண்டிருக்கு."