மத்திய அரசின் ஏஜென்சி ஒன்று, வெளிமாநில தலைமையகத்திலிருந்து வந்து மாநில அமைச்சருக்கு நெருக்கமான ஒருவரை கைது செய்து வெளிமாநில சிறையிலடைத் திருக்கிறது. அன்னை இன்ப்ரா என்பது கம்பெனியின் பெயர். இந்த கம்பெனி ஆந்திராவிலும் தமிழகத்திலும் சாலைகள் போடுவது, அணைகள் கட்டுவது போன்ற வேலைகளை செய்து வருகிறது. பொதுவாக இந்தப் பணிகளில் ஊழல் அதிகம். அதனால் கணக்கு காண்பிப்பதற்காக போலி பில் போடுவது சகஜம். நூறு ரூபாய் செலவு செய்துவிட்டு முன்னூறு ரூபாய்க்கு கணக்கெழுதுவார்கள்.
அப்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏகப்பட்ட வேலைகளை எடுத்து செய்த அன்னை இன்ப்ரா கம்பெனி தனது பில்களை சமர்ப்பித்திருந்தது. ஆந்திராவிலேயே வாங்கப்பட்டிருந்த பொருட்கள் எதற்கும் ஜி.எஸ்.டி. கட்டப்படவில்லை. அத்துடன் ஜி.எஸ்.டி. வரி கட்டப்பட்டது போன்று போலி பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்த சரக்கு மற்றும் சேவை வரிகள் வாரியத்தின் புலனாய்வுப் பிரிவின் விசாகப்பட்டின கோட்ட அதிகாரிகள், ஆந்திரா முழுவதும் உள்ள அரசு துறைகளில் அன்னை இன்ப்ரா நிறுவனம் கொடுத்த பில்களை கைப்பற்றி சோதனை நடத்தினார்கள். அதில் வெவ்வேறு பினாமி பெயர்களில் ஜி.எஸ்.டி. கணக்குகளை தொடங்கி செலவு செய்யாமலே கணக்கு காட்டி, "எங்கள் கம்பெனி அதிக மூலதனத்தை முதலீடு செய்கிறது' என்பது போல கணக்கு காட்டப்பட்டுள்ளது.
இப்படி சுமார் 450 கோடி ரூபாய் பொருட்களை பல்வேறு போலி ஜி.எஸ்.டி. கணக்குகள் மூலம் வழங்கியதாக கணக்கு காட்டியதோடு, இந்த 450 கோடி ரூபாய் செலவுகளுக்காக 60 கோடி ரூபாயை வங்கிகளில் கடனாக பெற்றுள்ளது. அத்துடன் அன்னை இன்ப்ராவை போன்றே ஆந்திராவிலும் தமிழகத்திலும் காண்ட்ராக்ட் எடுத்துள்ள கம்பெனிகளுக்கும் இந்த போலி பில்களை அளித்துள்ளது. இதையொட்டி அன்னை இன்ப்ராவின் உரிமையாளர் அசோக்குமார் என்பவரை கைது செய்து விசாகப்பட்டினத்தில் சிறை வைத்துள்ளது.
இது ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் மட்டும் நடக்கவில்லை. ஹரியானா மாநிலம் சிர்சாவில் 90 கம்பெனிகள் இணைந்து 7600 கோடி ஜி.எஸ்.டி. கட்டாமல் ஏமாற்றியது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இவையெல்லாம் வெறும் வெற்று லெட்டர்பேட் கம்பெனிகள். வருமான வரித்துறையை ஏமாற்றுவதற்கும் வங்கிகளில் கடன் பெறுவதற்கும் ஜி.எஸ்.டி. கட்டியது போன்ற போலி பில்களை இந்த 90 கம்பெனிகளும் தயாரித்துள்ளன. இது தொடர்பாக ஒருவரை கைது செய்து அவரது வீட்டில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் சோதனை நடத்திய போது, மொத்தம் 173 வங்கிக் கணக்குகள், அந்த வங்கிகளுடன் தொடர்புடைய 110 கடன் அட்டைகள் கைப்பற்றப்பட்டன என்கிறது ஜி.எஸ்.டி. வரி வசூல் வட்டாரம்.
அன்னை இன்ப்ரா நிறுவனம் தமிழகத்தில் சேலம், சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற எடப்பாடி பழனிச்சாமியால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம். ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் நான்கு மாடி அளவில் ஒரு புதிய அலுவலகத்தை கட்டிய நிறுவனம். சமீபத்தில் வருமான வரித்துறையால் ரெய்டுக்குள்ளான காண்ட்ராக்டர் செய்யாதுரையுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பாலங்கள், சாலைகள் என பலவற்றை கட்டிய நிறுவனம். இந்த நிறுவனம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 470 கோடி ரூபாய் போலி பில் கொடுத்து ஜி.எஸ்.டி. கட்டாமல் மோசடி செய்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் இந்த நிறுவனம் போலிகளுக்கு பெயர் பெற்றது. தமிழகத்தில் இந்த நிறுவனத்தை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். காரணம் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மிக மிக நெருக்கமான நிறுவனம் இது. ஈரோடு மாவட்டத்தில் செங்கோட் டையன் ஆதரவில் எம்.எல்.ஏ.வானவர் வி.பி.பெரியசாமி. அவரது தம்பி அருணாசலம் செங்கோட்டையனுக்கு நெருக்கமானவர். அவரது அக்காள் மகன்தான் இந்த அசோக்குமார். இவர் சமீபத்தில் ஒரு விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி செங்கோட்டையனுக்கு பரிசளித்தார். அந்த காரில்தான் செங்கோட்டையன் வலம் வருகிறார் என்கிறார்கள் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
ஆந்திர விவகாரத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் அன்னை இன்ப்ரா நிறுவனம் மேற்கொண்ட பணிகளை புலன் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதாக ஜி.எஸ்.டி. வரிகளின் புலனாய்வுப் பிரிவு முடிவு செய்துள்ளது. இது தமிழகத்தில் அரசுப் பணிகளை அன்னை இன்ப்ரா பாணியில் மேற்கொண்ட காண்ட்ராக்டர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. பலநூறு கோடி ரூபாய்கள் போலி பில்களை கொடுத்து கணக்கெழுதிய காண்ட்ராக்டர்களும் அரசு அதிகாரிகளும் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அமைச்சர் வரை பயம் ஏற்பட்டுள்ளது.