கடந்த பிப்ரவரி 22 அன்று விழுப்புரம் மாவட்டம் வெள்ளம்புத்தூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சிலரால் கடுமையாக தாக்கப்பட்டதில் மகன் உயிரிழந்தார், மகள் மிருகத்தனமாக பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பிறப்புறுப்பில் பல தையல்கள் போடும் நிலைக்கு தள்ளப்பட்டார். அவர்களின் தாய் ஆராயி கடுமையாக தாக்கப்பட்டு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி மருத்துவமனையில் இருக்கின்றனர். இந்த வெறித்தனம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு தான் காவல்துறை சீரியஸாக கையில் எடுத்துள்ளது. இந்தக் கொடுமை நடந்த இடத்தில் தொடர்ந்து இருந்து, நடவடிக்கைகளுக்கு முயற்சி செய்து, ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த 'எவிடென்ஸ்' கதிரிடம் பேசினோம்.
உண்மையில் அங்கு என்ன நடந்தது?
பிப்ரவரி 21ம் தேதி இரவு ஒரு ஒன்பது மணிக்கு டிவி பாத்துட்டு தூங்கப் போயிருக்காங்க. எப்பவும் காலைல ஏழு மணிக்கு எந்திருச்சு தண்ணீர் பிடிக்கப் போவாங்க. அன்னைக்கு (22 காலை) அவங்க வராததால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் போய் கதவை தட்டிருக்காங்க. திறக்காததால கதவை திறந்திருக்காங்க. உள்ள போய் பாத்தா மூனு பேரும் இரத்த சகதியில கிடக்குறாங்க. அந்தப் பையன் இறந்துட்டான். மத்த ரெண்டு பேரும் உயிருக்குப் போராடிட்டு இருக்காங்க. ஒரு வயல்வெளியில் சேரியின் ஒதுக்குப்புறமாக இருக்கும் அந்த வீட்டுக்கு தாழ்ப்பாள் இல்ல. அந்த அம்மையாருக்கு மொத்தம் நாலு பசங்க, இரண்டு பொண்ணுங்க. அதுல மூனு பசங்க பெங்களூர்ல கூலித்தொழிலாளியா இருக்காங்க. ஒரு பொண்ணு ஈரோட்டில் பனியன் கம்பெனில வேலை பாக்குறாங்க. ஆராயியின் (அம்மா) கணவர் ஏழுமலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அவுங்க குடும்பம் ரொம்ப ஏழ்மையான குடும்பம்.
இந்தத் தாக்குதலுக்கு நிலத் தகராறுதான் காரணமா? அந்த ஊரில், அந்தப் பகுதியில் இதுக்கு முன்னாடி இதுபோன்ற தாக்குதல்கள் நடந்திருக்கா?
இந்த சம்பவம் நடந்ததுக்கு அப்பறம்தான் இரண்டு சம்பவம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருக்கு. அதே கிராமத்தில சிவக்குமார், குப்பாயினு ஒரு குடும்பம். அவுங்களுக்கு 14 வயசுல ஒரு பொண்ணு. அவுங்களையும் இப்படித்தான் அடிச்சுட்டு அந்தப் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்காங்க. அவுங்க மூனுபேரும் கிட்டத்தட்ட ரெண்டு மாசம் கோமால இருந்திருக்காங்க. அப்பறம் இன்னொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 27 வயது பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்காங்க. ஒரே கிராமத்துல இதுமாதிரி மூனு சம்பவங்கள் நடந்திருக்கு. இப்போ வரைக்கும், சுத்துவட்டாரத்துல இதுமாதிரி நிறைய சம்பவங்கள் நடந்திருக்க வாய்ப்பிருக்குனு சொல்றாங்க. எதுவும் வெளிய வராம இருக்கு.
காவல்துறையின் நடவடிக்கை திருப்தியளிக்கிறதா?
காவல்துறைக்கு தெரியாதது இல்ல. மருத்துவமனையில் சேர்த்துருக்காங்க, பரிசோதிச்சுருக்காங்க. அப்படியிருக்கப்போ எப்படி தெரியாம நடந்திருக்கும்? போலீஸ்கிட்ட கேட்டா எங்களுக்கு புகார் ஏதும் வரலைன்னு சொல்றாங்க. இப்போதாவது அந்தத் திருக்கோவிலூர் மருத்துவமனை வட்டாரத்துல கோமால இருந்தவங்க யார் யார், சுயநினைவின்றி அடிபட்டு ஆதரவு இல்லாம இறந்தவுங்க யார், யார்னு ஒரு கணக்கு எடுத்து ஆய்வு செஞ்சு பாக்கணும். அதை தரமான ஆய்வாக செய்ய வேண்டும். அப்படியிருந்தால்தான் கண்டுபிடிக்க முடியும்.
இந்தப் பிரச்சனையில் நான்கு கண்ணோட்டத்தில் ஆய்வு நடக்கின்றது. ஒன்று, நிலப்பிரச்சனை. இரண்டு, பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ரவுடியிசம் பண்ணிக்கிட்டு இருப்பாங்களாம், அவுங்க இங்க வந்து போற, வர பெண்களையெல்லாம் கையைப் பிடித்து இழுப்பதும், கிண்டல் செய்வதும் அங்கு சகஜமாக நடக்குமாம். ஒருவேளை அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் பண்ணியிருப்பாங்களா என்று விசாரிக்கப்படுகிறது. மூன்று, ஒரு குறிப்பிட்ட வன்முறை கும்பல் ஏதும் இதை செய்தார்களா என்பது.
நான்கு, அங்கிருந்த தலித் இளைஞர்கள் யாரும் இதை செய்தார்களா என்பது. இப்படி நான்கு விதமாக ஆய்வு பண்ணிட்டு இருக்காங்க. இதுல முதல் கட்டமா நான்கு தலித் இளைஞர்களை விசாரிச்சுருக்காங்க. இதுக்கும், அவங்களுக்கும் சம்மந்தம் இல்லைனு சொல்லிட்டு அவங்க விடுவிச்சுட்டாங்க. பக்கத்துல வேலை செய்யுற ஆந்திரா தொழிலாளர்களையும் விசாரணை வட்டத்துக்குள்ள கொண்டு வந்திருக்காங்க. டி.எஸ்.பி. கிட்ட கேட்கும்போது '48 மணிநேரத்துல பிடிச்சுருவோம், இன்னைக்கு பிடிச்சுருவோம்'னு சொல்றாங்க. இது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியல. இந்த விஷயத்துல தடயவியல் துறை சரியாக செயல்படவில்லை. அறிவியல் ரீதியாகவும் செயல்படவில்லை. மோப்ப நாயை மட்டும் வைத்து பேருக்கு சோதனை செய்துவிட்டுப் போய்விட்டனர். ரொம்ப மெதுவான நடவடிக்கை இது, மிகவும் காலம் தாழ்ந்த நடவடிக்கை. சைபர் கிரைம் மூலமாக அந்த பொண்ணோட மொபைலை கண்டுபிடிக்கும்படி கேட்டிருக்கேன்.
நிலத்தகராறு தான் காரணம் என்று சொல்கிறார்களே? அந்தக் கோணத்தில் நீங்கள் விசாரித்தீர்களா?
இவர்களுக்கு சொந்தமாக முன்னாடி ஒரு 14 சென்ட் நிலம் இருந்தது. அதுல 10 சென்ட் நிலத்தை அங்க ஒருத்தர் வாங்கி இருக்கிறார். மீதி நாலு சென்ட் நிலத்தையும் கேட்கும்போது இவுங்க தரமாட்டேன்னு சொல்லிருக்காங்க. பக்கத்துல இருக்குற நாலு சென்ட் நிலத்தை எடுத்துக்கிட்டு இதைக் கொடுங்க என்று பேசியிருக்காங்க. அதில் ஏற்பட்ட பிரச்சனையில் பழி தீர்க்க இந்தக் கொடுமையை செய்தார்களா என்ற பார்வையிலும் ஆய்வு செய்றாங்க. ஆனா இதுக்கு அது காரணமாக இருக்காது. ஏன்னா இதுக்கு முன்னாடி நடந்த இரண்டு சம்பவங்களுக்கும், இதற்கும் சில ஒற்றுமைகள் இருக்கு. அதனால நிலத்தகராறு காரணமாக இது நடந்திருக்க வாய்ப்பில்லை.
இப்போது வரை யாரையும் கைது செய்துள்ளார்களா?
இப்போ வரைக்கும் யாரையும் கைது செய்யவில்லை. விசாரணைதான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஆனா ரொம்ப மெதுவா விசாரிக்குறாங்க. சுவாதி, நிர்பயா போன்றவர்களுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஏன் நந்தினிக்கு, கலைச்செல்விக்கு கொடுக்கல, ஆராயி குடும்பத்திற்குக் கொடுக்கல. காரணம் இவர்கள் சேரி வாழ் மக்கள் என்பதுதான். இங்கு நடந்தால் யாரும் கண்டுகொள்ள மாட்டோம். போலீஸ் இன்னும் விரைவாக, துரிதமாக செயல்பட்டிருக்கணும். மருத்துவமனை கோப்புகளை ஆய்வு செஞ்சுருக்கணும், ஒரு சிறப்புக் குழுவை நியமித்திருக்கணும். களத்திற்குப் போய் விசாரிச்சிருக்கணும். இப்போதுதான் பெண் போலீசார் பல வீடுகளில் சென்று விசாரிக்கிறார்களாம். அங்கிருந்து தகவல் வந்தது.
நம்மிடம் பேசிவிட்டு, மீண்டும் விழுப்புரத்திலிருந்து வந்த அழைப்பை எடுக்கிறார். சமூகம், காவல்துறை, யாரும் பெரிதாகக் கருதாத இது போன்ற கொடுமைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவது கதிர் போன்றவர்கள் தான். ஒரு தலித் சிறுமியென்றால் இன்னும் தைரியமாகக் கிழித்தெரியச் சொல்லும் ஆணவத்தை எதிர்த்து, இன்னும் நாம் குரல் கொடுக்காமல், பேசாமல் இருந்தால், நாமும் குற்றம் செய்தவர்கள் தான்.