ஸ்டெர்லைட்டு எதிரான மக்கள் போராட்டத்தில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இதுவரை ஒரு பள்ளி மாணவி உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் என பலதரப்புகளில் இருந்து கண்டனங்கள் வலுத்துவர, சமூக ஆர்வளர் எவிடன்ஸ் கதிர் நம் நக்கீரனுக்கு இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்,
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது வேறு வழி இல்லாமல் செயல்படுத்தப்பட்ட ஒன்று என்று தமிழக அரசு தரப்பில் கூறப்படுகிறதே?
இந்த போராட்டத்தில் அரசு சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல, ஒருநாள் இருநாள் அல்ல தொடர்ந்து 99 நாட்கள் நடைபெற்ற போராட்டம். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, அந்த ஆலையினால் ஏற்படும் மாசுபாடு கடுமையாக மக்களை தாக்கி, கடுமையான நோய்கள் குறிப்பாக புற்றுநோய்கள் ஏற்பட்டு இறந்து போகிறார்கள் என நீண்ட ஆண்டுகாலமாக நடைபெற்று வரும் போராட்டம் இது. இது இன்றோ நேற்றோ நடந்த போராட்டமல்ல. அப்படிப்பட்ட போராட்டத்தின் நூறாவது நாளில் பத்தாயிரம் இருபதாயிரம் கணக்கில் நிறைய மக்கள் கூடவிருக்கிறார்கள் என்பது போலீசாருக்கு தெரிந்திருக்கும். அதனால் தமிழக அரசு இப்படி சொல்வது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. ஒரு நாற்பது ஐம்பது பேர் கூடினாலே கண்டுபிடிக்கும் போலீசுக்கு எப்படி இவ்வளவு பேர் கூடுவது தெரியாமல் இருந்திருக்கும். அப்போதே போராட்டக்காரர்களின் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை போன்ற எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாமல். மக்கள் திடீரென ஒன்று சேர்ந்தார்கள் போலீஸார் எண்ணிக்கை குறைவாக இருந்தது மக்கள் வன்முறையை கையிலெடுத்தார்கள் அதனால் துப்பாக்கி சூடு நடத்தினோம் என்பதெல்லாம் திசை திருப்புகின்ற பேச்சு. அப்படியே இருந்தாலும் வன்முறையை அடக்க ப்ரொசீஜர் இருக்கு. மக்கள்தான் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றால் போலீசார் ஒருவருக்கு கூட காயம் ஏற்படவில்லையே ஏன்?. நன்று பாருங்கள், பொதுமக்கள் பலபேர் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறார்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இன்னும் பலநூறு பேர் ஆபத்தில் இருக்கிறார்கள் எனவே இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை.
இன்று மட்டுமல்ல 1999-ல் நடந்த தேயிலை தோட்ட பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஆற்றில் மூழ்கி பலர் இறந்தனர். துப்பாக்கி சூட்டிற்கு பின் அந்த போராட்டம் உடனே முடிவுக்குவந்தது. அதேபோல் கூடங்குளம் எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்தது உடனே அந்த போராட்டமும் கைவிடப்பட்டது. அதேபோல்தான் இந்த போராட்டமும் துப்பாக்கி சூடு நடத்தி மக்களில் சிலரை கொன்றால், பயத்தினால் திரும்ப ஒன்றுகூட மாட்டார்கள் என அரசாங்கம் நினைத்து வருகின்றது. 144 தடை உத்தரவை பிறப்பிக்க தெரிந்த காவல்துறைக்கும், அரசிற்கும் தெரியாதா அதிகமான மக்கள் கூடப்போகிறார்கள் என்று. தெரிந்து கூடவிட்டுவிட்டு இப்படி சுட்டு கொள்வது அப்பட்டமான படுகொலை. இன்னைக்கு பத்துலட்சம் ரூபாய் தருகிறார் எடப்பாடி என்றால் அது யார் அப்பன் வீட்டு பணம். மக்களின் வரிப்பணம். மக்களிடமே வரிவாங்கி மக்களுக்கே வாய்க்கரிசி போடுவதென்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். பத்து லட்சம் கொடுக்கும் எடப்பாடியே ஸ்டெர்லைட்டிடம் எவ்வளவு பணம் வாங்குவிங்க?. நிர்வாகமும் சரி காவல்துறையும் சரி சேர்ந்துதான் எல்லாம் செய்திருக்கிறார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்பொழுது இதுபோன்ற போராட்டத்தை சிலர் தூண்டி வருகிறார்கள் என்று கூறுகிறார்களே எதிர்தரப்பில்?
நீதிமன்றத்தில் வழக்கிருந்தால் போராடக்கூடாதா?. ஜல்லிக்கட்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளபோதுதான் போராடி உரிமையைப் பெற்றோம். நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடே போராடுச்சே. நீதிமன்றம் உத்தரவு போட்டும் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க சொல்லியும் அமைக்கவில்லையே. அப்போ இதிலிருந்து என்ன தெரிகிறது நமக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவு வந்தால் நடைமுறைபடுத்தப்படாது. நமக்கு எதிராக உத்தரவு வந்தால் உடனே செய்லபடுத்த துடிக்கு. அதை எதிர்த்து நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் என்ற வரலாறு இருக்கிறதா இல்லையா?. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது போராடக்கூடாது என்றால் நீதிமன்றம் இன்னும் பத்து வருடம் வழக்கை இழுத்து கொண்டே போகும் அதுக்குள்ள எல்லாரும் நோய் வந்து இறந்துபோவார்கள். இன்னைக்கு மக்கள், நாம சுவாசிக்கிற காத்துபோயிருச்சு, விவசாயம், மண் முதல்கொண்டு எல்லாமே மாசா போகுது'னு வேற வழியே இல்ல ரோட்டுக்கு வந்து போராடியே ஆகவேண்டும் என்று வீதிக்கு வந்திருக்கிறார்கள் அவர்களுடைய உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்கின்ற அரசு என்ன அரசு. இதுக்கெல்லாம் காரணம் ஆட்சியாளர்கள் கார்ப்ரேட் ஆட்களாக மாறிவிட்டார்கள் என்பதுதான்.
இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பல தலைவர்கள் காயமடைந்தவர்களை பார்க்க சென்றிருக்கிறார்கள். ஆனால் பாஜக தலைவர் தமிழிசை உயிர் இழந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் வைத்து அரசியல் செய்யாதீர்கள் என கூறியுள்ளார் அதுபற்றி?
தமிழிசைக்கு என்ன தெரியும். இதே, நாளை ஒரு பாஜககாரரோ, ஆர்.எஸ்.எஸ் காரரோ கொல்லப்பட்டு அவர்கள் போய் பார்க்கிறார்கள் என்றால் நீங்க போய் பார்க்காதீங்க என்று சொன்னால் கேட்பாரா?. நாளைக்கே அவங்க வீட்ல ஒரு எழவு விழுது அதாவது அவரது கட்சியில, அவரு போகாம இருப்பாரா. மக்கள் அடிபட்டு, காயப்பட்டு இருக்கும்பொழுது அரசியல் தலைவர்கள், இயக்கங்கள் கூட இருப்பார்கள் இந்த அடிப்படை அறிவுகூட அவருக்கு இல்லை. அப்போ காயம்பட்டவர்களை வைத்து அரசியல் செய்யக்கூடாது என்றால் நாங்கள் அமைதியா இருக்கணுமா? இப்படி அரசு துப்பாக்கி சூடு நடத்துனது எல்லாம் சரி என்று ஒப்புக்கொள்ளணுமா?. நீங்க எல்லா அறிக்கையும் பாருங்க அதிமுகவைவிட பாஜக வெளியிடும் அறிக்கைகளை பாருங்கள் தமிழனுக்கு எதிராக விரோத தன்மையுடன்தான் இருக்கும்.
போராட்டம் கலவரமாக மாறும்போது வேறு வழியில்லை என ஹெச்.ராஜா சொல்லியிருக்கிறாரே?
போராட்டத்தை தடுக்க வேறு வழியில்லை எனும்போது போராட்டத்தை நிறுத்த பல ப்ரொசீஜர் இருக்கிறது. அதையெல்லாம் கையாளாமல் ஏன் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. போராட்டம் அத்துமீறி நடக்கும்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதுதான் நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர, போராட்டக்காரர்களை கொல்வது நோக்கமாக இருக்கக்கூடாது என்பது போலீஸ் ஸ்டாண்டிங் ஆர்டர்ல இருக்கு. ராஜா இதையெல்லாம் படிக்கணும் அரைகொறையாதான் அவர் உளறுவாரு. அப்போ வேறு வழியில்லை என்றால் போராட்டக்காரர்களை கொல்வதுதான் வழியா? போராட்டத்தை தூண்டினார்கள் என்று அவர்கள் சொல்லும்படியே வைத்துக்கொண்டால் யார் யார் தூண்டுனா. அப்படி தூண்டப்பட்டவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்களா? இதுவெல்லாம் ஆதாரமற்ற பேச்சு. நான் இதே ஹெச்.ராஜாகிட்ட கேட்கிறேன் நாளைக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் கூட்டத்துல போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லுது'னு வைத்துக்கொள்வோம். அப்போ இதே பதில ராஜா சொல்லுவாரா?.
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்திற்கு தமிழர்கள் அடிபணிய மறுப்பதால்தான் இந்த கொலை எல்லாம் நடக்கிறது என்ற பேச்சு அடிபடுகிறதே?
இந்தியாவில் இந்த நாலு மாநிலமும் மோடிக்கு எதிராக இருக்கிறது. தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா,ஆந்திரா என்ற இந்த நான்கு மாநிலத்திலும் மோடிக்கு எதிர்ப்பு இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு. இன்று தமிழகத்தில் டம்மி ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது அதுவொரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அதிகப்படியான மக்களின் எதிர்ப்பு என்பது மோடிக்கு எதிராகவும் ஆர்.எஸ்,எஸ்க்கு எதிராகவுமே இருக்கிறது. அவர்களுடைய எந்த திட்டமும் இங்க பலிக்கவில்லை அதனாலேயே நம்மை வஞ்சம் தீர்க்க இப்படி எல்லாம் செய்துவருகின்றது மத்திய அரசு. நீட் தேர்வில் தேர்வு மையங்களை வெளிமாநிலத்திற்கு மாற்றப்படுவது. அதேபோல் நேற்று நடந்த துப்பாக்கி சூடு போன்ற எல்லாமே தமிழக மக்களை வஞ்சம் வைத்து பழிவாங்கும் நோக்கில்தான் நடந்துவருகின்றது. விவசாயிகள் சாகும் போது மோடி வந்து பார்த்தாரா சத்குருவை பார்க்கத்தானே ஓடினார். இனி தமிழ்நாட்டில் பிஜேபி என்பது வாஷ் அவுட். இந்தியா முழுவதும் பிஜேபி வாஷ் ஆ க தமிழகம் முன் மாநிலமாக இருக்கும்.
மக்கள் அங்குள்ள வாகனங்களுக்கு தீ வைத்தார்கள், கல்லெறிந்தார்கள் அதனால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என காவல் துறை விளக்கம் சொல்லியுள்ளது அதுபற்றி ?
மக்கள் வாகனங்களுக்கு தீவைத்தார்கள் என்பதற்கு ஆதாரமான போட்டோ வந்திருக்கா அல்லது போலீசாரை தாக்கினார்கள் என்பதற்கான போட்டோ இருக்கா? கல்லெறிக்கிறான் என்றால் ஏறியத்தான் செய்யவான் அவர்கள் தாக்கும்போது தற்பாதுகாப்பிற்காக கல் எறிவான்அது ஒன்றும் பண்ண முடியாது. சின்ன சின்ன போராட்டத்திலேயே பல கேமராக்கள் இருக்கும்பொழுது இவ்வளவு பெரிய போராட்டம் எவ்வளவு கேமராக்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் எதாவது ஒரு புகைப்படம், மக்கள் வாகனத்தை கொளுத்துவது போன்றோ போலீசார் தாக்கப்பட்டது போன்றோ தெரியவில்லை. எந்த ஊடகமும் சொல்லவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இறுதியில் போலீஸே வாகனத்திற்கு தீவைத்துவிட்டு போராட்டக்கார்கள் வைத்தார்கள் என்று கூறியது. இவ்வளவு பெரிய போராட்டத்தில ஒருவன் வண்டிமேல ஏறி நின்னு அன் யூனிஃபார்ம்ல மக்களை குறிவைத்து சுடுகிறான் என்றால் அவன் போலீஸா? இல்ல கூலிப்படையா?. கலவரத்தை தடுக்கவரும் காவல் துறையினர் யூனிஃபார்ம் போட்டு வரவேண்டும் என்ற அடிப்படையே தெரியவில்லை என்றால் என்ன காவல் துறை அது.
25-ஆம் தேதி வரை தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதே?
அது நிலைமையை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர போடப்பட்ட தடை அல்ல. உண்மையை வெளியே கொண்டு போகக்கூடாது என்பதற்கான தடை. இந்த 144 தடை என்றாலே தமிழக அரசின் நிலை என்னவென்றால் உண்மை வெளியே போகக்கூடாது அதற்காகத்தான் தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பிக்கிறதே தவிர சட்டஒழுங்கை பாதுகாக்க அல்ல.