Skip to main content

‘திக்திக்’ தீபாவளி! குட்டி ஜப்பான் அல்ல! குட்டி சீனா! -சீனப் பட்டாசுகளால் சிவகாசிக்கு களங்கம்!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
fire works

 

‘சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என, பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம். இவர்களின் குற்றச்சாட்டு என்னவென்றால்,  ‘அதிக அளவில் கள்ளத்தனமாக இந்தியாவில் சீனப் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன’ என்பதுதான். 
 

நம்மைத் தொடர்புகொண்ட ஒருவர் “சீனப் பட்டாசுகள் என்றால் சீனாவில் தயாராவது என்றே பலரும் நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல. சீனாவிலிருந்து இயந்திரங்களை இறக்குமதி செய்து, அந்த நாட்டில் உபயோகிக்கும் கெமிக்கலை வைத்து, அதே சீனப் பட்டாசுகளை சிவகாசியில் தயாரிக்கிறார்கள். பட்டாசுத் தயாரிப்பில் உபயோகிக்கவே கூடாதென்று, இந்தியாவில் தடை செய்யப்பட்ட கெமிக்கலைப் பயன்படுத்தி,  கள்ளத்தனமாக சிவகாசி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், சீனப் பட்டாசுகள் தயாராகின்றன. இந்தப் பட்டாசுகள் குறிப்பிட்ட சில வட மாநில வாடிக்கையாளர்களுக்கு சத்தமில்லாமல் அனுப்பப்பட்டு வருகின்றன.” என்று தான் நேரில் பார்த்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். 
 

சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மாரியப்பனிடம் இதுகுறித்துப் பேசினோம். “சிவகாசியில் சில பட்டாசு ஆலைகள் சீனப் பட்டாசுத் தயாரிப்பில் இறங்கியிருப்பதாக எங்களுக்கும் தகவல் வந்தது. ஆனாலும், தடை செய்யப்பட்ட கெமிக்கலை அவர்கள் உபயோகிப்பது குறித்த ஆதாரம் இல்லாததால், உரிய முறையில் புகார் அளித்து, குறிப்பிட்ட பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்வதற்கான நடவடிக்கையில் உடனே இறங்க முடியவில்லை. சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்வதற்கு இந்தியாவில் தடை உள்ளது. சீனப் பட்டாசுகளை இந்தியாவிலேயே தயாரிப்பது குற்றமா? இல்லையா? என்பதற்கு பதில் இல்லை. அதனால்,   வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையிடம்,  தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறோம்.” என்றார். 
 

fire works


 

புதுச்சேரியில் சீனப் பட்டாசு விற்பனைக்கு எதிராக சட்டப்பேரவை வளாகத்திலேயே எம்.எல்.ஏ.க்கள் போராடியிருக்கும் நிலையில், சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர் நம்மிடம் “பாப் பாப், கோல்டு பைரோ, கான்பெட்டி, மேஜிக் ட்ரிக் சோட்டா பீம், ஆங்ரி பேர்ட்ஸ் என்ற பெயர்களில் சீனப் பட்டாசுகளை சிவகாசியிலேயே சில பட்டாசு ஆலைகள் தயாரிக்கின்றன. இந்தியாவில் பெட்டிக் கடைகளிலிருந்து பேன்சி ஸ்டோர்கள் வரை இதனை விற்கின்றன. ‘இது பட்டாசு கிடையாது; மாசு ஏற்படாது.’ என்று அந்தப் பட்டாசுப் பெட்டிகளில் அச்சிட்டிருக்கின்றனர். அதில்,  உற்பத்தி செய்த நிறுவனத்தின் பெயரோ, ஊர்ப் பெயரோ, எதுவும் இல்லை. பாப் பாப் ரக பட்டாசுகள் கீழே போட்டாலே வெடித்து விடக்கூடியவை. தவறி காலில் மிதிபட்டாலோ, கையால் அழுத்தம் தந்தாலோ வெடித்துவிடும். இந்த சீனப் பட்டாசுகளில், தடை செய்யப்பட்ட கெமிக்கல்களான பொட்டாசியம்  குளோரேட், சில்வர் பல்மினேட்  போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.  அபாயகரமான இந்தப் பட்டாசுகளை, குழந்தைகள் விளையாடக் கூடிய விளையாட்டுப் பொருள் என்ற பெயரில் விற்பனை செய்கின்றனர். பல நெருக்கடிகளுக்கு இடையே,  வெகு சிரமப்பட்டு,  பட்டாசுத் தொழிலை சிவகாசியில் நடத்தி வருகிறோம். லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தொழிலை சீனப் பட்டாசுகள் ஒரேயடியாக அழித்துவிடும் என்பதாலும், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்பதாலும், போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்..” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியவர் “உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள ஊராக இருந்ததால் சிவகாசியை குட்டி ஜப்பான் என்று புகழ்ந்தார் நேரு. அந்த நற்பெயரை இழந்து ‘குட்டி சீனா’ ஆகிவிடுமோ? என்ற கவலை வந்துவிட்டது. தீபாவளிக்கு இன்னும் 40 நாட்களே உள்ளன. திக்திக் என்று மனது அடித்துக்கொள்கிறது.” என்றார்.   
 

பட்டாசு விஷயத்தில், நம் விரலைக்கொண்டே, நம் கண்களைக் குத்துவதற்கு  ‘ரூட்’ போட்டுக் கொடுத்திருக்கிறது சீனா. பணத்தின் மீதான பேராசையில், சிவகாசியிலேயே சிலர், தகாத இந்தக் காரியத்தில் ஈடுபடுகின்றனர். மக்களின் உயிர்ப் பிரச்சனை என்பதால், மத்திய-மாநில அரசுகள் இனியும் காலம் தாழ்த்தாமல், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டும் பட்டாசு ஆலைகளில்  உடனடியாக ஆய்வு மேற்கொண்டு  நடவடிக்கை எடுக்க வேண்டும்.