மார்ச் 29 – கம்பராமாயண சாயுபு பிறந்தநாள்
அக்காலம் முதல் இக்காலம் வரை கம்பராமாயணத்தை சுவைபட மக்கள் மத்தியில் பேச, பாட பலர் உள்ளார்கள். அதில் முக்கியமானவர் ஒரு இஸ்லாமியர். மிகவும் பிற்போக்குதனம் நிறைந்த அந்த காலத்திலேயே இந்துக்கள் போற்றிய ராமாயணத்தை படித்து கம்பரின் கருத்துக்களை உள்வாங்கி அதை ருசித்து தமிழ் மக்களுக்கு தெளிவாக சொற்பொழிவாற்றியவர் தாவூத்ஷா என்கிற மதமுற்போக்குவாதி என்கிற தமிழ் அறிஞர்.
தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த கீழ்மாந்தூர் என்கிற கிராமத்தில் 1885 மார்ச் 29ந்தேதி பிறந்தவர் அல்ஹாஜ் தாவூத்ஷா. இவரது அப்பா பாப்புராவுத்தர், அம்மா குல்சும்பீவி. தாவூத்ஷாவின் பெற்றோர் அவரை நாச்சியார்கோவில் பகுதியில் இருந்த தொடக்கப்பள்ளியில் சேர்த்தனர். அங்கு படித்தவர், உயர்கல்வியை கும்பகோணத்தில் படித்தார். அப்போது இவரது பள்ளி தோழராக இருந்தவர் கணிதமேதை ராமானுஜம்.
அங்கிருந்து கல்லூரி படிப்புக்காக சென்னை மாநிலக்கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவரது பேராசிரியராக இருந்தவர் பிற்காலத்தில் குடியரசு தலைவரான ராதாகிருஷ்ணன். அதோடு, தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர், தமிழ் பேராசிரியராக இருந்தார். இப்படி மேதைகளின் மாணவராக இருக்கும் வாய்ப்பை பெற்றார் தாவூத்ஷா. பள்ளியில் பயிலும்போதே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதை போட்டிகளில் கலந்துக்கொள்வது தாவூத்ஷாவின் வழக்கம். தனது சக மாணவர்களை உடன் சேர்த்துக்கொண்டு 1905ல் சுதேச நன்னெறி சங்கம் என்கிற பெயரில் சங்கம் தொடங்கி இயக்கத்தை நடத்தினார்.
கல்லூரியில் பயிலும்போது பல போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகளை வாங்கினார். இதற்கு உ.வே.சா பெரும் ஊக்கமளித்தார். மதுரை தமிழ்ச்சங்க பொன்விழா மலரில் கட்டுரை எழுதும் வாய்ப்பை உ.வே.சா, தாவூத்ஷாவுக்கு பெற்று தந்தார். பெரும் ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகள் வெளிவந்த விழா மலரில் இளம் வயதில் தாவூத்ஷாவும் கட்டுரை எழுதியதால் அது அறிவுத்தளத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இஸ்லாம் என்கிற தலைப்பில் அந்த கட்டுரையை எழுதியிருந்தார்.
1912ல் நாச்சியார்கோயில் வட்டாரத்தில் முதன் முதலாக பட்டம் பெற்றவர் தாவூத்ஷா தான். பின்னர் அரசுத்தேர்வு எழுதி 1917ல் துணை நீதிபதியானார். விழுப்புரத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது சுதந்திரபோராட்டத்தின் ஒரு பகுதியான கிலாபத் இயக்கத்தில் இணைந்து போராட முடிவு செய்த தாவூத்ஷா, நீதிபதி பணியை 9 ஆண்டுகளுக்கு பின் விட்டு விலகி போராட்ட களத்தில் இறங்கினார்.
1920ல் தத்துவ இஸ்லாம் என்கிற பெயரில் மத பத்திரிக்கையை தொடங்கினார். அதை பின்னர் தாருல் இஸலாம் (இஸ்லாமிய உலகம்) என பெயர் மாற்றினார். 64 பக்கங்களுடன் வெளிவந்த அந்த இதழ் இன்றைய ஆனந்தவிகடன் போல் வெளிவந்தது. அதில் அதிக முக்கியத்துவம் இஸ்லாம் சமூகத்துக்கு என இருந்தது. இதழில் உள்ள கட்டுரைகள் உட்பட எங்காவது ஒருயிடத்தில் ஒரு எழுத்து பிழையை கண்டறிந்து சொல்லும் வாசகருக்கு இரண்டனா அஞ்சல் தலை பரிசு என அறிவித்திருந்தார். இதனால் வாசகர்கள் வரிக்கு வரி படித்து எழுத்து பிழை உள்ளதா என தேடித்தேடி சலித்துப்போயினர். அந்தளவுக்கு எழுத்து பிழை இல்லாத அளவுக்கு கட்டுரைகளை வாசித்து, திருத்தம் செய்வார். இதற்காகவே தமிழ் புலவர் ஒருவரை பணியில் வைத்திருந்தார். இலங்கை, மலேசியா, மியான்மர் போன்ற நாடுகளில் வசித்த தமிழறிந்த இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது தாருல் இஸ்லாம் இதழ். 1932ல் ரஞ்சித மஞ்சரி என்கிற பெயரில் ஜனரஞ்சகமான மாத இதழையும் தொடங்கினார்.
சுதந்திரபோராட்டக்காலத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார் தாவூத்ஷா. அப்போது பிரச்சாரத்துக்காக 1934ல் தேச சேவகன் என்கிற பெயரில் பத்திரிக்கையை தொடங்கி நடத்தினார். இவரது உழைப்பை அங்கீகரித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி தரப்பட்டது. அதேப்போல் நகரசபை தலைவர் பதவியும் பெற்றார். அரசியல் காலக்காட்டத்தில் போராட்டம், பொதுக்கூட்டம், இலக்கியமேடை என நின்று விடாமல் எழுதிக்கொண்டு இருந்தார். 1934ல் இந்திய அரசியல் பற்றிய தனது பார்வையால் எழுதப்பட்ட வரலாற்று தொகுப்பு என்கிற நூலையும், பின்னர் கான்அப்துல் கபார்க்கான் என்கிற எல்லைப்புற காந்தி பற்றிய புத்தகத்தையும் வெளியிட்டார்.
இதழ்களை தொடர்ந்து வெளியிடுவதற்காகவே கார்டியன் என்கிற அச்சகத்தை சொந்தமாக வாங்கி சென்னையில் நடத்தினார். சென்னையில் 1941ல் முஸ்லீம் லீக் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு தனது செய்தித்தாளை தந்தார். அதில் ஒரு புதுமையாக காலை முதல் மதியம் வரையிலான செய்திகளை மாலையிலும், மதியம் முதல் இரவு வரையிலான செய்திகளை மறுநாள் காலை பேப்பர் வழியாக தந்தார். அதாவது ஒரே நாளிதழ் காலையும், மாலையும் வெளிவந்தது.
பேச்சாற்றல் மிக்க தாவூத்ஷா, கம்பராமாயணத்தை வரிக்கு வரி படித்துள்ளார். அதன்பாடல்கள் அனைத்தும் அவருக்கு மனப்பாடம். அந்த பாடல்களின் கருத்தை சுவைபட கூட்டங்களில் விளக்குவார். இவரது கம்பராமாயண சொற்பொழிவை கேட்க இலக்கியமறிந்த பெரும் கூட்டமே இருந்தது. இதனால் இவரை கம்பராமாயண சாயுபு என புனைப்பெயர் வைக்கும் அளவுக்கு புகழ்பெற்றுயிருந்தார்.
நூற்றக்கணக்கான சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியிருந்தார். முகமது நபிகள் வரலாறு, அபூபக்கர் சித்திக் வரலாறு போன்றவற்றை தமிழகரசு பள்ளி பாடமாக வைக்க முடிவெடுத்து வைத்தது. இவரது எழுத்துக்களும், மதத்துக்குள் இவர் கூறிய கருத்துக்கள் இஸ்லாமிய பிற்போக்குவாதிகளிடம் பெரும் எதிர்ப்புக்குரலை ஏற்படுத்தின.
பள்ளி வாசல்களில் படிக்கப்படும் குத்பா என்கிற சொற்பொழிவுகள் தமிழில் படிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், அதுபற்றி எழுதியும் வந்தார். அதோடு, இஸ்லாம் மதத்துக்கு சம்மந்தமில்லாத முறையான வேப்பிலை அடிப்பது, கயிறு கட்டுவது போன்றவை கூடாது என்றவர், பெண்களை அடக்கிவைக்காமல் அவர்களை படிக்க வைக்க வேண்டும் என பேசியும், எழுதியும் வந்தார். அதோடு, இவர் நடத்திய இதழில் சினிமா பற்றிய செய்திகளும், கட்டுரைகளும், திரைத்துறையினர் பேட்டிகள் வெளிவந்தது. இது இஸ்லாம் மதத்துக்கு எதிரானது என்கிற கருத்து மதத்தின் பிற்போக்குவதிகளிடம் எழுந்தது. இவையெல்லாம் பிற்போக்குவாதிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தமிழுலகம் குர்ஆன் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக குர்ஆன்னை தமிழில் மொழிபெயர்த்து குர்ஆன்மஜீத் என்கிற பெயரில் பொருளுரை மற்றும் விளக்கவுரையுடன் நூல் எழுதி தமிழில் வெளியிடமுடிவு செய்தார். இந்த பணிக்காகவும், வயதானதாலும் அவர் நடத்தி வந்த செய்தித்தாள்களை, இதழ்களை நிறுத்திவிட்டார். முழுக்க முழுக்க மொழிபெயர்ப்பு பணியில் ஈடுப்பட்டார். இதனை இஸ்லாமிய உலாமாக்கள் கடுமையாக எதிர்த்தனர். அதனையும் மீறி 4 தொகுதிகள் வெளியிட்டார். மற்ற தொகுதிகள் வெளிவரும் முன் அவர் உடல்நிலை முடியாமல் படுத்த படுக்கையாகிவிட்டார்.
தாவூத்ஷாவுக்கு 1909ல் சபுரா என்கிற பெண்ணை திருமணம் செய்துவைத்தனர் அவரது பெற்றோர். 6 ஆண்டுகளில் அதாவது 1915ல் அவரது மனைவி இறந்துவிட்டார். அதன்பின்னர் 1918ல் மைமூன்பீவி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துவைத்தனர். 1969 பிப்ரவரி 24ந்தேதி உடல் நலக்குறைவால் மறைந்தார் தாவூத்ஷா. தான் சார்ந்த மதத்தின் மீது தீவிர பற்றுயிருந்தாலும், இந்து சமூகத்தின் மீது மதிப்பு வைத்திருந்தார். அந்த மதிப்பே அவரை கம்பராமாயண சாயுபு என புனை பெயர் வைக்கும் அளவுக்கு இருந்தது. அதோடு, தமிழ்மொழி மீது மிகுந்த பற்றுடையவராக இருக்க வைத்தது. அவர் மறைந்தாலும் இஸ்லாமிய உலகில் அவர் ஏற்படுத்திய தாக்கம் இன்றளவும் மறையாமல் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.