அதிமுக அமைச்சர்கள் எல்லோருமே பதவிக்காக இன்றைக்கு எல்லா துரோகங்களை செய்கிறார்கள். பதவி போன பிறகு இவர்கள் எல்லோரும் அரசியலில் அனாதைகளாக நிற்பார்கள் என கூறியுள்ளார் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி.
டி.டி.வி. தினகரன் அணிக்கு குக்கர் சின்னம் கிடைத்தது தொடர்பாக நக்கீரன் இணையதளத்திற்கு கருத்து தெரிவித்த சி.ஆர்.சரஸ்வதி,
ஆர்.கே.நகரில் பொதுமக்கள் குக்கர் சின்னத்திற்கு மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள். அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வந்தால் குக்கர் சின்னமே பயன்படுத்த அனுமதி கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். நீதிமன்றமும் குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. விரைவில் நாங்கள் எதிர்பார்க்கும் கட்சி பெயரும் வந்துவிடும்.
நாங்கள் நீதிமன்றம் சென்றவுடனேயே சசிகலாவால் முதல் அமைச்சர் பதவியில் அமர்ந்த எடப்பாடியும், தினகரனால் சென்னை அழைத்துவரப்பட்ட ஓ.பன்னீர்செல்வமும் தினகரன் அணிக்கு குக்கர் சின்னமும், கட்சி பெயரும் வழங்கக் கூடாது என்று மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் நீதிமன்றம் விசாரணை நடத்தி ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
அதிமுக அம்மா என்ற பெயரை வைக்கக்கூடாது. அதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளாரே?
எங்களுக்கு இந்த சின்னத்தை ஒதுக்கக்கூடாது, கட்சி பெயரை கொடுக்கக்கூடாது என்று சொல்வதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. ஆட்சியில் இருப்பதால் மத்தியில் ஒட்டிக்கொண்டார்கள். அதனைப் பயன்படுத்தி அஇஅதிமுக என்ற கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் வைத்துள்ளனர். அப்படியிருந்தும் அவர்களால் ஆர்கே நகரில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் நாங்கள் சுயேட்சையாக நின்று குக்கர் சின்னத்தில் வெற்றி பெற்றுள்ளோம். மக்கள் இவர்களை ஏற்கவில்லை என்பதற்கு ஆர்கே நகர் தேர்தல் முடிவே போதும். எங்கள் அணி சார்பாக 3 பெயர்களை கொடுத்துள்ளோம். நாங்கள் விரும்பியபடியே அதில் ஒன்று எங்களுக்கு ஒதுக்கப்படும். மக்களை சந்திப்போம். வெற்றி பெறுவோம். இதேபோல் 18 எம்எல்ஏக்கள் வழக்கிலும் எங்கள் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.
குக்கர் சின்னத்தால் தமிழகத்தில் எந்த மாற்றமும் கொண்டு வரமுடியாது என்று தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளாரே?
நோட்டாவைவிட குறைவான வாக்குகள்தான் பாஜகவுக்கு இருப்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இதற்கு மேல் என்ன சொல்வது.
உலகத்திலேயே கட்சியே இல்லாமல் ரோட்டில் செல்பவர்களுக்கெல்லாம் பதவியை கொடுத்து வருகிறார் டிடிவி தினகரன் என்று வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் பேசியிருக்கிறாரே?
எங்களிடம் கட்சி இல்லை என்கிறார்கள். பிறகு ஏன் மாவட்ட வாரியாக தினகரன் ஆதரவாளர்களை நீக்குகிறோம் என்று அறிவிக்கிறார்கள். நீக்குவதோடு இல்லாமல், புதிதாக ஏன் யாரையும் நியமிக்கவில்லை. அதிமுகவில் உறுப்பினரை சேர்ப்பதாக சொன்னார்கள். எத்தனைப் பேரை சேர்த்துள்ளார்கள். தலைமை அலுவலகத்தில் உறுப்பினர் கடையை விரித்தார்கள். ஒருத்தர் கூட அவர்களிடம் போய் சேர தயாராக இல்லை. நரம்பில்லாத நாக்கு என்பார்கள். அதற்கு உதாரணமாக உதயகுமாரை சொல்லலாம். ஜெயலலிதா சமாதியில் வணங்கிவிட்டு, பின்னர் சசிகலா காலில் சாஸ்தாங்கமாக விழுந்து நீங்கதான் பொதுச்செயலாளர், நீங்கள்தான் முதல் அமைச்சர், நீங்கள் போட்டியிட என்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வேன் என்று சொல்லிவிட்டு, ஒ.பன்னீர்செல்வத்தை துரோகி என கடுமையாக தாக்கி பேசினார். மறுநாள் ஓபிஎஸ்ஸை தியாகி என்று பேசிவிட்டு ஓடினார்.
இந்த மந்திரிகளையெல்லாம் கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பலாம். நேற்று என்ன பேசினோம், அதற்குள் இப்படி பேசலாமா என மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். உதயகுமார் மந்திரி பதவியை இழந்தால் அவருடைய சொந்த ஊருக்கே போக முடியாது. தன்னை வளப்படுத்திக்கொண்டிருக்கிறார். தனக்கு வேண்டிய சொத்துக்களை சேர்த்துக்கொண்டுள்ளார். மக்களுக்கு அவர் எதையுமே செய்யவில்லை. அமைச்சர்கள் எல்லோருமே பதவிக்காக இன்றைக்கு எல்லா துரோகங்களை செய்கிறார்கள். பதவி போன பிறகு இவர்கள் எல்லோரும் அரசியலில் அனாதைகளாக நிற்பார்கள். இவ்வாறு கூறினார்.