Skip to main content

நொண்டி காரணங்களை வைத்துக் கொண்டு படத்தைத் தடை செய்யக் கூறுவதா..? - கே.பாலகிருஷ்ணன் காட்டம்!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

l

 

'ஜெய்பீம்' திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு, சில வாரங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ள இந்த திரைப்படத்திற்குச் சிலர் எதிர்ப்பையும், பலர் பாராட்டையும் ஒருசேரத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் நடைபெற்ற கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பார்வதிக்கு ஆதரவாக அப்போதே பல்வேறு போராட்டங்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்தினார்கள். தற்போதைய சிபிஎம் தலைவர் பாலகிருஷ்ணன் இதற்காக பல்வேறு போராட்டங்களை மேற்கொண்ட நிலையில் இதுதொடர்பாக நாம் அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு...

 

"அதிகாரத்தை எதிர்த்து யாரும் கேள்வி கேட்கலாம் என்ற செய்தி தற்போது மக்கள் மனதில் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் யாரும் இந்த மாதிரியான அதிகார துஷ்பிரயோகம் செய்யப் பயப்படும் வகையில் இந்த படம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. இனி இது மாதிரியான தவறு செய்ய யாரும் யோசிப்பார்கள். அந்த வகையில் இந்த மாதிரியான படங்களைத் தயாரித்த அதன் தயாரிப்பு தரப்புக்கும், நடிகர்களுக்கும் நாங்கள் முன்னரே நன்றி தெரிவித்துள்ளோம். 

 

மேலும் இந்த சம்பவத்தின் நிஜ போராளி ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்திருந்தோம். அந்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டு பார்வதி அம்மாள் பெயரில் 10 லட்சம் டெபாசிட் செய்து அந்த தொகை மூலம் கிடைக்கும் வட்டியை பார்வதி அம்மாளுக்கு கிடைக்கும் படி செய்துள்ளார். மேலும் பார்வதி அம்மாள் மறைவுக்குப் பிறகு இந்த பணம் அவர்களது குடும்பத்துக்குப் போய் சேரும் வகையில் இந்த உதவியைச் செய்துள்ளார்.

 

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைத் திரைப்படமாகக் கொண்டு வருவது என்பது மிக அரிதாக நடைபெறும் ஒன்று. இது தற்போது நடைபெற்றுள்ளது. அந்த படம் சொல்கின்ற செய்திகளை இந்த சமூகம் பாராட்டுகிறது. சில விமர்சனங்களும் வரத்தான் செய்யும். அனைத்து தரப்பு மக்களையும் யாரும் ஒரே நேரத்தில் திருப்தி படுத்திவிட முடியாது. இந்த படம் சொல்லும் செய்தியை மட்டும்தான் பார்க்க வேண்டும். இந்த படம் யாரையும் காயப்படுத்துவதோ, அல்லது குறிப்பிட்ட சமூகத்தை அவமானப் படுத்தவோ இல்லை என்பதைத் தயாரிப்பாளர்களும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். 

 

பல நல்ல காரணங்கள் இந்த படத்தில் இருக்கையில் சில நொண்டி காரணங்களைக் கண்டுபிடித்து அந்த படத்தைக் குற்றம்சாட்டுவது, படத்தை ஓடவிடமாட்டேன் என்று கூறுவது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். சூரியாவை நடமாட விடமாட்டேன் என்று கூறுவதெல்லாம் அராஜகத்தின் உச்சமாகத்தான் நாம் பார்க்க வேண்டியுள்ளது.

 

இந்த மாதிரியே போய்க் கொண்டிருந்தால் யாரும் தமிழ்நாட்டில் படமே எடுக்க முடியாத நிலைமைக்குச் சென்று விடுமே?  தமிழ்நாட்டுத் திரையுலகம் என்ன ஆகும். எனவே இது அராஜகத்தின் வெளிப்பாடு, இப்படிப்பட்டவர்களின் பேச்சை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத, அதிகார மனோபாவம் பிடித்த இந்த மாதிரியான நபர்களை நாம் ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது என்பதே சரியான முடிவாக இருக்கும். எனவே கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருப்பவர்களைத் தாண்டி இந்த மாதிரியான திரைப்படங்கள் வருவதற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாதவாறு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.