90களில் மிகப் பிரபலமான நகைச்சுவை நடிகரும் ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் என அத்தனை முன்னனி நடிகர்களுடனும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவருமான ரமேஷ் கண்ணா எம்.ஜி.ஆரின் குடும்பத்துக்கும் தனது குடும்பத்துக்குமான உறவை, தொடர்பை தனது 'ப்ரண்ட்ஸ்' புத்தகத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்தப் பகுதி இங்கே...
”எங்க அப்பா நாராயணன், பாம்பே ஜெனரல் மோட்டார்ஸ்ல ஜெனரல் மேனேஜரா இருந்தாரு. வி.என்.ஜானகியுடைய அம்மாவான நாராயணி அம்மா, எங்க அப்பாவுக்கு சகோதரி. அவுங்க, என் அப்பாவைக் கூப்பிட்டு, "டேய் நாராயணா, இவ சினிமாவுல நடிக்க ரொம்ப ஆசைப்படுறா. நீ இவளுக்கு ஏதாவது பண்ணு, இவளைக் கூட்டிட்டுப் போ"னு சொல்லவும் எங்க அப்பா, பாம்பேயில தன் வேலையை விட்டுட்டு சென்னையில் வி.என். ஜானகி கூட இருந்து, சினிமா வாய்ப்புக்காக பல பேரைப் பார்த்து, ஒவ்வொரு படத்தின் போதும் கூட இருந்து உதவியா இருந்தாரு. ஜானகிக்கு முதல் திருமணமாகி, அது இருவருக்கும் ஒத்து வராம பிரிஞ்சது இன்னொரு கதை. அப்போ புகழ் பெற்ற இசையமைப்பாளரா இருந்த பாபநாசம் சிவன், எங்க அப்பாவுக்கு உறவு. வி.என். ஜானகிக்கும் அவர் பெரியப்பா முறை வேணும்.
எங்க வீட்டில் இருக்கும் எம்.ஜி.ஆர் குடும்பப் படம் - எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகியுடன் அவரது மகன் சுரேந்திரன்
எங்க அப்பா அவுங்க கூட இருந்தப்போ 'ராஜமுக்தி' பட வாய்ப்பு வந்தது. அந்த வாய்ப்பு பிரச்சனையையும் கூட்டிகிட்டு வருதுன்னு இவங்களுக்குத் தெரியாது. தியாகராஜ பாகவதர் நடிச்ச அந்தப் படத்துல வி.என். ஜானகிதான் ஹீரோயின். எம்.ஜி.ஆர் அதுல ஒரு வேடத்துல நடிச்சாரு. அப்போ அவரு சிறிய கதாபாத்திரங்கள்தான் பண்ணிக்கிட்டு இருந்தார். இந்தப் பட ஷூட்டிங்கின் போது, எம்.ஜி.ஆர்க்கும் வி.என். ஜானகிக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு, காதலானது. ஆனால், எம்.ஜி.ஆரோ ஏற்கனவே திருமணமானவர். இவங்களோட காதல் விஷயம் தெரிஞ்சு எங்க அப்பா கோபமாகிட்டாரு. ஜானகி வீட்டிலும் இது பிரச்சனை ஆச்சு. எம்.ஜி.ஆர் அப்போ சின்ன நடிகர், ஏற்கனவே திருமணம் ஆனவர். ஜானகி, பிரபலமாகியிருந்தாங்க. அவரின் புகழுக்கும் பணத்துக்கும்தான் எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டாரென்று எங்க அப்பா அப்போ நினைத்தார்.
அவர்களிருவரும் திருமணமும் செஞ்சுக்கிட்டாங்க. ஆனா, அது சட்டப்பூர்வமாக செல்லாது. எங்க அப்பா அவங்க திருமணத்தை எதிர்த்து கோர்ட்ல கேஸ் போட்டாரு, கேசும் ஜெயிச்சது. ஆனாலும் அவர்கள் பிரியல. அவர்கள் திருமணமும் ரொம்ப நாள் கழிச்சுத்தான் சட்டபூர்வமாச்சு. அப்புறம்தான் எங்க அப்பாக்கு அவுங்க காதல் புரிஞ்சது. ஆனா, அப்பாவுக்கும் ஜானகிக்குமான உறவு தூரமாகிடுச்சு. பின்னாடி ரொம்ப நாள் கழிச்சு, எம்.ஜி.ஆர் அரசியலில் தீவிரமாக இறங்கி, முதல்வரான பின், அப்போ அந்த கேஸ்ல எங்கப்பாவே கோர்ட்ல வாதாடியதை நினைவு வைத்து சொல்லியிருக்கார், "நாராயணனை சட்ட அமைச்சர் ஆகிடலாமா? அவருக்கு எல்லா விவரமும் தெரியுது" என்று. ஆனால், வி.என்.ஜானகி அதுக்கு ஒத்துக்கலை. இப்படி, உறவு விலகியிருந்தாலும் பின்னாடி, என் சித்தி பொண்ணு, அதாவது என் தங்கையை வி.என்.ஜானகி மகனுக்கு திருமணம் செய்து கொடுத்தோம். 'திருமலை'ல விஜய் சொன்ன மாதிரி வாழ்க்கை ஒரு வட்டம்தான், இல்ல?
ஆனால், நான் இந்த உறவு விஷயங்களை சினிமாவுல யார்கிட்டயும் சொல்லிக்கிட்டது இல்லை. இப்போதான் பகிர்கிறேன். அதுவும் சத்யராஜ்க்கு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான். வி.என்.ஜானகியின் சகோதரர் பையன் தீபன் வீட்டு திருமணத்திற்கு போயிருந்தப்போ சத்யராஜும் வந்திருந்தார். அப்போ தீபன் சத்யராஜ்கிட்ட, "இவரு யார் தெரியுமா?"னு என்னைக் காட்டி கேக்குறாரு. சத்யராஜ் சிரிச்சுக்கிட்டே, "இவரைத் தெரியாதா, ரமேஷ் கண்ணா. நாங்க மகாநடிகன் படத்துல ஒண்ணா நடிச்சிருக்கோமே"னு சொல்றாரு. "உங்களுக்குத் தெரிஞ்ச ரமேஷ் கண்ணா வேற... எங்க குடும்பத்துக்கு ஒரே தாய்மாமன் இவருதான்"னு தீபன் சொல்ல, சத்யராஜ்க்கு ஒரே ஆச்சரியம். அவரு நடிகர் ராஜேஷ்கிட்ட சொல்ல, அப்புறம் அப்படியே சினிமால பலருக்கும் தெரிஞ்சுது.”
இது போல ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ் என பலருடனான தனது இனிய, சுவாரசியமான அனுபவங்களை, தமிழ் சினிமா குறித்த பல கதைகளை அந்தப் புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். புத்தகத்தை அமேசான் கிண்டிலில் படிக்கலாம்... க்ளிக் செய்யுங்கள்...
புத்தகத்தை ஆர்டர் செய்து வீட்டில் பெற... க்ளிக் செய்யுங்கள்...