சீனாவில் வூகான் மாகாணத்திலிருந்து தொடங்கிய கரோனா வைரஸின் தாக்கம் இன்றும் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.
சுமார் 80 நாடுகளில் இதன் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 92,153 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், இந்த வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,200 -ஐ கடந்துள்ளது. எனவே பெரும்பாலான நாடுகளில் இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் புதிதாக கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள சூழலில் பொதுமக்கள் பயம் இல்லாமலும், அதேநேரம் கவனத்துடனும் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட சூழலில், அதில் ஏற்கனவே மூவர் குணமாகியுள்ளனர். இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து உலக சுகாதார அமைப்பு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, மக்கள் கரோனா வைரஸிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள...
சோப்பு மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தியோ அல்லது சானிடைசரை (Alcohol based) பயன்படுத்தியோ அடிக்கடி தங்களது கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
இருமல் மற்றும் தும்மலின் போது முகத்தை முழங்கை பகுதி அல்லது திசு பேப்பரால் (tissue paper) மூடிக்கொள்ள வேண்டும். அத்தபின் கைகளை சுத்தமாக ஒருமுறை கழுவிவிட வேண்டும்.
காய்ச்சல் மற்றும் இருமல் உள்ள எவருடனும் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள் மற்றும் முந்தைய பயண வரலாற்றை உங்கள் மருத்துவருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்;
விலங்குகளுடன் பாதுகாப்பற்ற நேரடி தொடர்புகளை தவிர்க்க வேண்டும்.
சமைக்காத அல்லது சரியாக வேகவைக்கப்படாத மாமிசங்களை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அதேபோல விலங்குகளில் பாலையும் நன்றாக கொதிக்கவைத்தே பயன்படுத்த வேண்டும்.